அவசர சமையல்
வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு சாப்பாட்டுக்கு என்ன என்று யோசிக்கிறீர்களா?

இந்த நாட்டிலும் தயார் நிலையில் உள்ள சப்பாத்திகள் கிடைக்கின்றனவே. சரி, அது கிடைக்காத சிறிய ஊர்களில் இருக்கிறீர் களா? அமெரிக்கக் கடைகளில் முழு கோதுமை டாட்டியா (whole wheat Tortillas) கிடைக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாக ஒரு நான்-ஸ்டிக் பானில் நல்ல சூடு வந்த பின்பு இரு புறமும் போட்டு சற்று உப்பிய பின்பு எடுத்துச் சாப்பிடலாம். இது சப்பாத்தி போலவே இருக்கும். வித்தியாசம் தெரிவதில்லை.

இதனுடன் சாப்பிட இந்த ஸ்டிர்-·ப்ரையும் நன்றாக இருக்கும். இதைச் சப்பாத்தியின் நடுவில் வைத்து உருட்டிக் கொண்டு (Roll) சாப்பிடலாம்.

காய்கறி ஸ்டிர்-·ப்ரை (Vegetable Stir-Fry)

தேவையான பொருட்கள்

மஞ்சள் ஸ்க்வாஷ் (Yellow Squash) - 1
சுக்கினி (Zuchinni) - 1
குடைமிளகாய்த்
துண்டங்கள் - 1/2 கிண்ணம்
பெரிய வெங்காயம் (பெரிய துண்டங்களாக நறுக்கியது) - 1/4 கிண்ணம்
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
ஆலிவ் (அ) கனோலா
எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

சுக்கினி, மஞ்சள் ஸ்க்வாஷை நீளவாக்கில் நான்காக வகிர்ந்து கொண்டு பின்னர் சற்றுப் பெரிய துண்டங்களாக வெட்டவும். ஒரு நான்-ஸ்டிக் பானில் (Non-stick Pan) எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எல்லாக் காய்கறிகளையும் சேர்க்கவும்.

அடுப்பில் தீயை உயர்த்தவும். மரக் கரண்டியால் அவ்வப்போது கிளறி விடவும். ஒரு நிமிடம் கழித்து உப்புச் சேர்க்கவும். இப்போது காய்கறிகள் சற்று நீர் விட்டுக் கொள்ளும். (இந்த நீர் சீக்கிரம் வற்றி விடுவதற்காகவே அடுப்பை உயர்ந்த தீயில் வைக்கவேண்டும். இது முக்கியம். இல்லையெனில் சொதசொதவென்று ஆகிவிடும். அதே சமயம் தீயாமலும் பார்த்துக் கொள்ளவும்)

நீர் வற்றிய பின் மிளகாய்ப் பொடி, மசாலாத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் காய்கறிகள் 2 அல்லது மூன்று நிமிடங்களில் வெந்துவிடும்.

பின் குறிப்பு

காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வெந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டால் நான்-ஸ்டிக் பானின் சூட்டிலேயே முழுவதும் வெந்துவிடும். உப்புக்குப் பதில் சோயா சாஸ் (Soya sauce) விடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com