டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில் மான்கொம்பு சாம்பசிவன் - தங்கம்மாள் பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளிக்கல்வி பயின்ற சுவாமிநாதன், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் விலங்கியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலையில் வேளாண் அறிவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்து உயிரணு மரபியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.

ஐ.பி.எஸ். தேர்வெழுதி வெற்றிபெற்ற சுவாமிநாதன், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்று, பயிர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். 1954ல், ஒடிசா மாநிலம் கட்டாக்கில், அரசு வேளாண் துறை பணியில் சேர்ந்தார். 1960ல் ஏற்பட்ட பஞ்சத்தில் பலர் உயிரிழந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோதுமை ரகத்தை, இந்தியாவில் அறிமுகம் செய்து அதிக மகசூலை விளைவித்துக் காட்டினார். அதேபோல் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தினார்.

எம்.எஸ். சுவாமிநாதன், 1988ல் தன் பெயரில் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். மத்திய வேளாண்துறை செயலர், திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவரும்கூட.

'ரேமன் மகசாசே' விருது, கொலம்பியா பல்கலையின் 'வால்வோ' விருது, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது உள்பட பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் பெற்றவர். நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். உலக அளவில் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். மனைவி மீனா சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இவர்களுக்கு டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் என மூன்று மகள்கள்.

எம்.எஸ். சுவாமிநாதன், செப்டம்பர் 28 அன்று சென்னையில் காலமானார். தமிழக அரசு மரியாதையுடன் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பசிப்பிணி தீர்த்த, தமிழகத்தின் மூத்த விஞ்ஞானிக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com