ஜெகவீரபாண்டியனார்
தமிழ்ப் புலவர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், இலக்கிய ஆய்வாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் ஜெகவீரபாண்டியனார். இயற்பெயர் ஜெகவீரபாண்டியன். வீரபாண்டிய கட்டபொம்மன் மரபைச் சேர்ந்த இவர், மார்ச் 10, 1886 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டநத்தத்தில் பெருமாள்சாமி-ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று வயதிலேயே தந்தையை இழந்தார். ஆரம்பக் கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். குடும்பச் சூழலால் ஐந்தாம் வகுப்போடு படிப்பு நின்று போனது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் வாழ்ந்த துறவி சிவானந்த சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்தார். குருகுல வாசமாக அவருடனேயே தங்கி தமிழ் இலக்கியங்களைக் கற்றார். வேதாந்தக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றார். இலக்கணமுத்துக் கவிராஜ பண்டிதரிடம் படித்து இலக்கண அறிவு பெற்றார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பன்மொழிகளில் பாடல்கள் இயற்றுமளவுக்குத் தேர்ச்சி பெற்றார். சிறந்த ஆசுகவியாகத் திகழ்ந்தார்.

உள்ளூர்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு ஒழுக்கக் கல்வியையும் போதித்தார். பல ஊர்களுக்கும் சென்று கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம் போன்ற இலக்கியங்கள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஜெகவீரபாண்டியன் வெள்ளைத்தாய் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.

ஜெகவீரபாண்டியனார், தினந்தோறும் சிலமணி நேரமாவது எழுதுவது, வாசிப்பது என்ற வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார். திறனாய்வு, வரலாறு, ஆன்மீகம், மொழி, இலக்கியம் எனப் பல வகைகளில் நூல்கள் எழுதினார். வள்ளுவரையும், கம்பரையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். மதுரையில் தனது இல்லத்திற்கு 'திருவள்ளுவர் நிலையம்' என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு 'வாசுகி அச்சகம்' என்றும் பெயரிட்டார். தனது நூல்களைத் தானே அச்சுக்கோர்த்து யாருடைய உதவியும் இல்லாமல் பதிப்பித்தார். 'பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' என்னும் இவரது நூல், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் வரலாற்றைக் கூறுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் நூல் 'வீரபாண்டியம்'. ஜெகவீரபாண்டியனார் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு 'இந்தியத் தாய் நிலை'. ஆங்கிலப் பேரறிஞர்களின் பொன்மொழிகளும் அவற்றுக்கு இணையான தமிழ் மொழி பெயர்ப்புக் குறட்பாக்களும் கொண்ட நூல் 'உலக உள்ளங்கள்'. இவர் எழுதிய 'திருக்குறட் குமரேச வெண்பா' திருக்குறளைக் கதை வடிவில் விளக்கிக் கூறும் மிக முக்கியமான நூலாகும். இவரது நூல்கள், சென்னை, மைசூர் பல்கலைக் கழகங்களால் பாடநூலாக வைக்கப்பட்டன.

பல நூல்களை இயற்றியிருக்கும் ஜெகவீரபாண்டியனார், கவிராஜ பண்டிதர் என்று போற்றப்பட்டார். சக தமிழ் அறிஞர்களால் கவிஞர் மாமணி, கவிச்சக்கரவர்த்தி என்று பாராட்டப்பட்டார். மதுரை ஆதீனம், 'தமிழ் மாமுனி' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். மதுரை தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச் சங்கம் எனப் பல தமிழ்ச் சங்கங்களின் பாராட்டைப் பெற்றார். இவரது பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இவர் மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

ஜெகவீரபாண்டியனார், ஜூன் 17, 1967ல், 81 வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. (அவரது நூல்களை இங்கே வாசிக்கலாம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஜெகவீரபாண்டியனின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

ஜெகவீரபாண்டியனார் எழுதிய நூல்கள்
திருச்செந்தூர் அந்தாதி, மாசிலாமணி மாலை, அகத்திய முனிவர், அணியறுபது, தெய்வப் புலவா், வீரபாண்டியம், வீரகாவியம், கம்பர் கவித்திறம், முருகவேள், நமது தாய் மொழி, அரும்பொருள் அமுதம், இந்தியத் தாய் நிலை, பாரத நாட்டு வீரர், வீர தேவதை வணக்கம், உழவும் உலகமும், எனது வாழ்வு, கவிகளின் காட்சி, தமிழர் வீரம், உயிரினங்கள், உள நிலை, ஒழுக்கம், கல்வி நிலை, சந்தம், தாயின் தகைமை, மனிதனும் தெய்வமும், மூன்று ஒலிகள், கவிகளின் காட்சி தொகுதி - 1, கம்பன் கலை நிலை - உரைநடை -15 தொகுதிகள், தரும தீபிகை – செய்யுள் மூலமும், உரையும் - 7 தொகுதிகள், திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும், உரையும், அறத்துப்பால்- 4 தொகுதிகள், திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும், உரையும், பொருட்பால் - 5 தொகுதிகள், பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் - 2 பாகங்கள், உலக உள்ளங்கள் (மொழிபெயர்ப்பு),

(தகவல் உதவி: கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனாரின் வாழ்க்கைக் குறிப்பு: தமிழிணையம் - மின்னூலகம்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com