சு. கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனத் தமிழ் இலக்கிய உலகில் இயங்கியவர் சு. கிருஷ்ணமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசலில், நவம்பர் 18, 1929ம் நாள் பிறந்தார். தந்தை சுப்பிரமணியன், தாய் கமலாம்பாள். தந்தையார் அன்னவாசல் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். சிறுவயதில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. அதனால் அவரை வளர்க்கும் பொறுப்பைத் தாய்வழிப் பாட்டி சீதாலட்சுமி ஏற்றுக் கொண்டார்.

விராலிமலையில் பாட்டி வீட்டில் வளர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. அங்குள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின் கீரனூர் அரசுப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்போது வாசித்த நூல்களும் பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகளும் கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையை வளர்த்தன. பின்னர் சொந்த ஊரான அன்னவாசலில் அவரது கல்வி தொடர்ந்தது. அப்போது வாசித்த ஆனந்தபோதினி, கலைமகள், ஆனந்த விகடன் இதழ்கள் அவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. தந்தைக்குப் புதுக்கோட்டைக்கு மாற்றலானது. அங்கு கிருஷ்ணமூர்த்தியின் கல்வி தொடர்ந்தது. அங்கு தமிழுடன் சம்ஸ்கிருதமும் முறையாகப் பயின்று தேர்ந்தார். பிறகு மீண்டும் கீரனூர் வாசம். பள்ளிப்படிப்பு அங்கு தொடர்ந்தது. பிறகு மீண்டும் புதுக்கோட்டையில் மன்னர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். சம்ஸ்கிருதத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இண்டர்மீடியட் முடித்தார். இளங்கலைப் படிப்பை சென்னைப் பல்கலையில் பயின்று சம்ஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றார். ஹிந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.



சு. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் ஆங்கிலத் துறை டியூட்டராகப் பணியாற்றத் தொடங்கினார். அக்காலத்தில் வாசித்த சார்லஸ் டிக்கன்ஸ், சர் வால்டர் ஸ்காட், ஜான் கால்ஸ்வொர்த்தி, ஆலிவர் கோல்டுஸ்மித், R.L. ஸ்டீவென்சன், ஹாஸ்லிட், அடிசன், கார்க்கி, செக்காவ், C.E.M. ஜோட், ஆல்டஸ் ஹக்லி, பெர்னார்டு ஷா, ரொமான் ரொலான், ஜோலா, பால்ஸாக், வோட்ஹவுஸ், ஆர்தர் கானன் டாயில், G.K. செஸ்டர்டன், ஆஸ்கார் ஒயில்டு போன்றோரின் படைப்புகளால் உலக இலக்கிய அறிவு பெற்றார். முல்க்ராஜ் ஆனந்த், R.K. நாராயண், K.S. வெங்கடரமணி, எஸ்.வி.வி, வெ.சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதியார் ஆகியோரின் நூல்கள் இந்திய இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆண்டு மலருக்காக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் ஒரு கதையை எழுதினார். அதற்கு நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகம் அடைந்து மேலும் எழுகினார். சு. கிருஷ்ணமூர்த்தியின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'The Strange Revenge', 'காரவான்' ஆங்கில இதழில் பிரசுரமானது. தொடர்ந்து அந்த இதழில் எழுதினார். Woman's Era, My Magazine of India, Free India எனப் பல இதழ்களில் எழுதினார். தமிழில் முதல் சிறுகதை 'தங்கமோதிரம்' 1955ல் ஆனந்தவிகடனில் வெளியானது. தொடர்ந்து கலைமகள், கல்கி, தீபம், கணையாழி எனப் பல இதழ்களில் சிறுகதைகள் எழுதினார்.



சு. கிருஷ்ணமூர்த்தி மூன்றாண்டு டியூட்டர் பணிக்குப் பின், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின், மத்திய அரசின் தணிக்கைத் துறையில் பணியில் சேர்ந்தார். 1955-ல் பணியிடமாற்றத்தால் கல்கத்தா (இன்றைய கொல்கத்தா) சென்றார். 1984 வரை கல்கத்தாவிலும் பின்பு டெல்லியிலும் பணி புரிந்தார். அக்காலகட்டத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு மொழிபெயர்ப்பில் கவனம் சென்றது. வங்கமொழி இலக்கியங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. அதற்காக வங்க மொழி கற்றார். வங்கச் சிறுகதைகளைத் தமிழில் பெயர்த்தார். அவை கல்கி போன்ற இதழ்களில் வெளியாகின. பின் அவை தொகுக்கப்பட்டு நூல்களாகின. ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல்வேறு நூல்களைப் படைத்தார் சு. கிருஷ்ணமூர்த்தி.

வங்கக் கவிஞர் காஜி நஜ்ருல் இஸ்லாமின் வாழ்க்கை வரலாற்றை 'நஜ்ருல் என்றொரு மானிடன்' என்ற தலைப்பில் எழுதினார். சரத் சந்திர சட்டோபாத்யாய, பிரேம்சந்த், ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதி வெளியிட்டார். வங்கச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து 'வங்கச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டார். தாகூர், சரத் சந்திரர், விபூதிபூஷண் பந்தோபாத்யாய, மஹாஸ்வேதா தேவி போன்ற வங்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் தந்தார். வங்க எழுத்தாளர் ஜயா மித்ராவின் சிறை அனுபவங்களைக் கூறும் நூலை 'கொல்லப்படுகிறது' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அதற்காக நல்லி திசை எட்டும் அமைப்பின் முதல் மொழியாக்க விருதைப் (2004) பெற்றார். கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்புகளில் முக்கியமானது, அதீன் பந்தோபாத்யாய எழுதிய நூலின் மொழியாக்கமான 'நீலகண்டப் பறவையைத் தேடி' என்ற நூல். 'நான் கடந்துவந்த பாதை' என்பது அவரது சுயசரிதை.



தமிழிலிருந்து கிருஷ்ணமூர்த்தி பல படைப்புகளை வங்க மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். திருக்குறள், சிலப்பதிகார மொழியாக்கங்கள் அவற்றில் குறிப்பிடத்தகுந்தன. ஆதவன் சிறுகதைகள், தமிழ்ப் பழமொழிகள், கு. சின்னப்ப பாரதியின் நாவல், தி. ஜானகிராமன் சிறுகதைகள் உள்ளிட்ட பலவற்றை வங்க மொழியில் பெயர்த்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்' நாவலை (ரக்த போன்யா) வங்க மொழியில் பெயர்த்ததற்காக சாஹித்ய அகாடமி பரிசு பெற்றார். அதே படைப்புக்கு வங்காள சாஹித்ய சம்மேளனப் பரிசும் கிடைத்தது.

கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, கொல்கத்தா சரத் சமிதி ஆய்வுப் பரிசு, வங்காள சாகித்ய அகாதெமியின் லீலா ராய் ஸ்மாரக் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, இலக்கிய சிந்தனைப் பரிசு, நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது, கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சு. கிருஷ்ணமூர்த்தி செப்டம்பர் 7, 2014 அன்று, 85 வயதில் காலமானார்.

கு.ப.ரா., கா.ஸ்ரீ.ஸ்ரீ., த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ரா. வீழிநாதன், அ.கி. கோபாலன் போன்ற முன்னோடி மொழிபெயர்ப்பாசிரியர்களின் வரிசையில் இடம் பெறுபவர் சு. கிருஷ்ணமூர்த்தி.

அரவிந்த்

நூல்கள்
மொழிபெயர்ப்புகள் (வங்கத்திலிருந்து தமிழுக்கு)
வங்கச் சிறுகதைகள், வங்காளிக் கதைகள் -தொகுதி 1, வங்காளிக் கதைகள் -தொகுதி 2, நீலகண்ட பறவையைத் தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கொல்லப்படுகிறது(ஜெயா மித்ரா), சிப்பியின் வயிற்றில் முத்து (போதிசத்வ மைத்ரேய), காட்டில் உரிமை(மஹாஸ்வேதா தேவி), 1084-ன் அம்மா (மஹாஸ்வேதா தேவி), சிதைந்த கூடு முதலிய கதைகள் (ரவீந்திரநாத் தாகூர்), ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் (ரவீந்திரநாத் தாகூர்), ரவீந்திர சங்கீத் (ரவீந்திரரின் 100 வங்கப் பாடல்களின் தமிழாக்கம்), கவிதையியல் கதைகள் (ரவீந்திரநாத் தாகூர்), சிதைந்த கூட்டின் சிறகுகள் -ராய் குமார் மகோபாத்யாய, கொல்லப்படுவதில்லை (மைத்ரேயி தேவி), ஷோடசி (நாடகம்- சரத் சந்திரர்), கோமாளி கோபால் கதைகள் (விபூதி பூஷண் பந்த்யோ பாத்யாய்), திருமணமாகதவன் (சரத் சந்திரர்), அனுராதா (சரத் சந்திரர்), தேவதாஸ் (சரத் சந்திரர்), தேடல் -(கதைகள்), டிராமில் ஒரு டிராமா (உமா பிரசாத் முகோபாத்தியாய்), மற்றும் பல

தமிழிலிருந்து வங்க மொழிக்கு
திருக்குறள், சிலப்பதிகாரம், பரமாச்சாரியாரின் பேருரைகள், ஆதவன் சிறுகதைகள், காஞ்சி பரமாச்சாரியாரின் சொற்பொழிவுகள், டாக்டர் எம்.எஸ் . சீனிவாசன் கட்டுரைகள், சங்கம் - கு. சின்னப்ப பாரதி நாவல், தாகம் - கு. சின்னப்ப பாரதி நாவல், அண்மைக்கால வங்காளிக் கதைகள், குருதிப்புனல், அப்பாவின் சிநேகிதர் (அசோகமித்திரன்), தமிழ்நாட்டு நகைச்சுவைக் கதைகள், சுரங்கம் (கு. சின்னப்ப பாரதி சிறுகதைகள்) , தலைமுறை மாற்றம் (நாவல்-கு. சின்னப்ப பாரதி) , மற்றும் பல

ஆங்கிலச் சிறுகதை நூல்கள்
The Peasant and other stories, Modern Aesop fables

தமிழ் நூல்கள்
தமிழ்ச் சிறுகதைகள், நன்றிக்கு ஒரு விலை, மனிதம், கன்னியர் ஐவர்

பிற நூல்கள்
நஜ்ருல் என்றொரு மானுடன், கதைச் சிற்பி சரத்சந்திரர், பேனா வீரர் பிரேம்சந்த், கருணைக்கடலில் புரட்சிக்கனல் - பண்டித ஈஷ்வர சந்திர வித்தியாசாகரின் வாழ்க்கை வரலாறு, வங்காளத்தின் அக்னியுகம், மற்றும் பல

© TamilOnline.com