கடிதம் கிடைத்தது
கிழக்கு இன்னும் வெளுக்கவில்லை. விடிவெள்ளி பிரகாசமாக ஒளி வீசித் திகழ்ந்தது. பனிக்காற்று சில்லென்று வீசிற்று. முந்தின நாள் பெய்த மழையால், மேடும் பள்ளமுமான அந்த மண் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. ஆனால் வீராசாமி அதைப் பொருட்படுத்தவில்லை. ஈசனிடம் மாறா பக்தி கொண்டவர்கள், அவனைத் தரிசிக்க அவன் ஞாபகமாகவே அவன் திருக்கோயிலுக்குச் செல்வதைப் போல், வேறு எந்த நினைவுமின்றி அவன் போய்க் கொண்டிருந்தான். ஆம். அந்த கிராமத்திற்குச் சுமார் மூன்று மைல் தூரத்திலிருந்த தபாலாபீஸ்தான் அவனுக்கு இறைவன் உறையும் கோயில். அதிலுள்ள தபால் அதிகாரிதான் அவனுக்குக் கடவுள். அவர் அளிக்கும் கடிதந்தான் அவன் கோரும் வரப் பிரசாதம்.

இன்று நேற்றல்ல. சுமார் ஐந்தாண்டு காலமாக அவன் இப்படித்தான் தினந்தோறும் அதிகாலையில் புறப்பட்டு அந்தத் தபாலாபீசுக்கு நடந்து செல்கிறான். தபால் பட்டுவாடா அங்கு காலை 8 மணிக்குத்தான் ஆரம்பமாகும். ஆனால் வீராசாமியோ சொல்லி வைத்தது போல் காலை 5 மணிக்கெல்லாம் தபாலாபீசுக்கு வந்து, வராந்தாவில் வழக்கமாக உட்காரும் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்வான். அவன் வருவதைக் கண்டதுமே தபால் சிப்பந்திகள், "அதோ, வீராசாமி வருகிறான், மணி ஐந்தாகி விட்டது" என்று சொல்லிக் கொள்வது வழக்கம்.

இவன் எதற்காக இப்படித் தினந்தோறும் வருகிறான்? அது அந்தக் கிராமத்திலுள்ள எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான் இருந்தது.

அவனுடைய மனைவி அன்னம்மாள் தனது முதல் பிரசவ அறையிலே ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, கண்ணை மூடிவிட்டாள். மனைவியை இழந்து ஆற்றொணா சோகத்திலாழ்ந்த வீராசாமிக்கு அவள் விட்டுச் சென்ற ராஜந்தான் ஆறுதலளிப்பவளாக இருந்தாள். அவனை மறுமணம் செய்து கொள்ளும்படி நண்பர்களும் மற்றவர்களும் தூண்டினார்கள். "அப்படிச் செய்தால் நான் என் மனைவிக்குத் துரோகம் செய்தவனாவேன். அத்துடன், வருகிறவள் என் கண்மணி ராஜத்தை அன்புடனும் ஆதரவுடனும் நடத்துவாளென்பது என்ன நிச்சயம்? என் அன்னம்மாள் இறந்த துக்கத்தை ராஜத்தைப் பராமரிப்பதிலேயே ஆற்றிக் கொள்வேன்" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான் வீராசாமி.

ராஜமும் கீரைத்தண்டு போல் மளமளவென்று வளர்ந்து, பூத்துக் குலுங்கும் மலர்ச் செடியானாள். அவளைத் தங்கள் உடைமையாக்கிக் கொள்ள எவ்வளவோ வாலிபர்கள் முயன்றார்கள். ஆனால் கிழவனான வீராசாமியோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குறையைக் கூறி அவர்களைத் தட்டிக்கழித்தான். "வீராசாமி மகளுக்கு எங்கே கலியாணம் நடக்கப் போகிறது? அவனுக்குப் பிடித்த மருமகப் பிள்ளை வானுலகத்திலிருந்துதான் வரவேண்டும்?" என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.

ராஜத்திற்கு 25 வயதாயிற்று. ஆனால் கிழவன் வீராசாமிக்கோ அது தெரியவில்லை. தனது மகள் என்றும் சிரஞ்சீவியான 16 வயதுள்ள பருவ மங்கை என்றே எண்ணி வந்தான். அவளுடைய ஆசைக் கனவுகளையும் பருவ வேட்கையையும் அவன் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. ஒருநாள் ராஜம் தனக்குப் பிடித்த மணவாளனைச் சொன்னபோதுதான் வீராசாமி விழித்துக் கொண்டான். "அப்பா, அவரை நான் மணம் புரிந்து கொள்வதாக வாக்குக் கொடுத்து விட்டேன். எங்கள் திருமணத்திற்கு அவர்கள் பெற்றோர்களும் சம்மதித்து விட்டார்கள். உங்களுடைய சம்மதந்தான் தேவை" என்றாள் ராஜம்.

அவளைப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்ததும் தன்னிச்சையாகத் திரிய விட்டதும் எவ்வளவு பிசகு என்று எண்ணினான் வீராசாமி. ஆனால் வெள்ளம் அணை கடந்து விட்டது. தடுத்து நிறுத்தினால் அது என்ன விபரீதத்திற்குக் கொண்டு வந்து விடுமோ? உள்ளப் புயலை ஒருவாறு அடக்கிக்கொண்டு மகளுக்குச் சம்மதமளித்து விட்டான் வீராசாமி.

திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதன் பிறகுதான் வீராசாமியின் தலையில் பேரிடி விழுந்தது. மனைவியை இழந்த பின் அவன் தன் மகளை விட்டு ஒருநாள் கூட பிரிந்தவனல்லன். தன் மகளை மணமுடிக்க வந்த வாலிபர்களிடம் 'மணமானாலும் தன் மகளும் மருமகனும் தன் இல்லத்திலேயே இருக்க வேண்டு'மென்பதும் அவன் கேட்ட நிபந்தனைகளுள் ஒன்று. இப்போது ராஜமும் அவள் கணவன் ராஜகோபாலனும் இந்தியாவுக்குப் போகப் போகிறார்கள். அங்கேயே நிரந்தரமாக வசிக்கப் போகிறார்கள் "என் மகளை மீண்டும் காணுவதற்கு எவ்வளவு காலமாகுமோ? பார்க்காமலே இறக்க வேண்டி நேருமோ? கடவுளே. எனக்கு ஏன் இந்தச் சோதனை! இதை என்னால் தாங்க முடியுமா?" என்று புலம்பினான் வீராசாமி.

கிழவனின் மனோவேதனையை அறிந்த அவன் மகள் அவனுக்கு வேண்டிய தேறுதல் கூறி அவசியம் மாதம் ஒரு கடிதம் அவனுக்குப் போடுவதாகவும் இன்னும் ஆறு ஏழு மாதங்களில் அவனையும் தங்களுடன் இந்தியாவுக்கு அழைத்துக் கொள்வதாயும் வாக்களித்து விட்டுத் தன் கணவனுடன் குதூகலத்துடன் கப்பலேறினாள்.

அவள் வாக்களித்தபடி முதல் ஆறு மாதங்களில் அடிக்கடி கடிதங்கள் வந்தன. பிறகு எங்கோ வடநாட்டிற்குத் தன் கணவன் வேலை முன்னிட்டுச் செல்வதாயும் அவனுடன் தானும் போவதாகவும் போனபின் கடிதம் போடுவதாகவும் எழுதியிருந்தாள் ராஜம். அவ்வளவுதான் அதிலிருந்து இந்த ஐந்தாண்டு காலமாக ஒரு கடிதம்கூடக் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான் வீராசாமிக் கிழவன் இப்படித் தினந்தோறும் தபாலாபீசுக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

★★★★★


"இந்தக் கிழவன், என்ன இப்படித் தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறான்? நாள் தவறாமல் இவனுக்குக் கடிதம் எழுதுகிறவர்கூட இருக்கிறார்களோ?" என்று போஸ்ட் மாஸ்டர் பொன்னுதுரை கிண்டல் செய்தார். பின்னர் அவரே, 'பைத்தியமாக இருக்குமோ?' என்று தம் கீழ் வேலை பார்க்கும் குமாஸ்தா கந்தசாமியைக் கேட்டார்.

"நானும் அப்படித்தான் சார் நினைக்கிறேன். ஆனால் வீராசாமி இளகிய மனசு படைத்தவன். மகளின் மீது தன் உயிரையே வைத்திருக்கிறான். அவள் கடிதத்தைக் காண்பது அவளைக் காணுவது போலவே இருக்கிறதாம். அதற்காகத்தான் இப்படித் தினசரி வந்து போகிறான். ஆண்டு ஐந்தாகியும் அந்த நப்பாசை போகவில்லை. அவள் இருக்கிறாளோ, இறந்தாளோ? இவனோ அவளிடமிருந்து தனக்குக் கடிதம் வருவது நிச்சயமென்று சொல்கிறான்!"

"பைத்தியங்களின் உலகமே தனி" என்று அந்தச் சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் போஸ்ட் மாஸ்டர் பொன்னுதுரை.

காலம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ராஜத்திடமிருந்தோ, அவள் கணவனிடமிருந்தோ கடிதம் எதுவும் வரவில்லை. ஆனால் கிழவன் தபாலாபீசுக்கு வருவது மட்டும் தவறவில்லை. குறித்த நேரத்தில் கிழக்கில் சூரியன் உதிப்பதைப் போல் வீராசாமி சரியாகக் காலை 5 மணிக்குத் தபாலாபீசுக்கு வந்து கொண்டிருந்தான். ஒருநாள் வழக்கம் போல் தனக்குத் தபால் இல்லையென்று சொன்னதும் வீராசாமி வீடு திரும்பும் போது வெளியில் தபால்களைப் பட்டுவாடா செய்யும் சின்னத்தம்பியைச் சந்தித்தான்.

"சின்னத்தம்பி எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேணும். இந்தா ஐம்பது வெள்ளி. இதுதான் என்னுடைய சொத்து. என் மகளைத் தவிர வேறு எனக்கு யாரும் இல்லை. அவளிடமிருந்து கடிதம் வந்தால் என்னிடம் கொடுத்துவிட வேணும்." இப்படிச் சொல்லும் போதே கிழவன் 'கொக் கொக்' சென்று பயங்கரமாக இருமினான்.

"ஏன் உடம்பு சுகமில்லையா? தபாலாபீசுக்கு இனிமே வர முடியாதுன்னு சொல்றியா? சரி உனக்குத் தபால் வந்தால் எங்கே கொண்டு வந்து கொடுக்கணும் நீ எங்கே இருப்பே?"

"எங்கே இருப்பேன்? என்னுடைய சமாதிக்குள்தான். எனது சமாதி மேலே வச்சுப்புடு."

சின்னத்தம்பி அவனை அக்கறையுடன் பார்த்தான்.

"ஆமாம். நான் நாளைக்குச் செத்துப் போய்விடுவேன். எனக்கு இந்த உதவியைச் செய்யத்தான் உனக்கு இந்த 50 வெள்ளியைக் கொடுத்தேன்" என்றான் வீராசாமி.

'சரி தாத்தா. உன் விருப்பப்படி செய்கிறேன். ஆனாலும் இந்தப் பணத்தை நான் வாங்கக்கூடாது. என்னுடைய கடமையைச் செய்வதற்குச் சர்க்காரிலிருந்து சம்பளம் பெறுகிறேன். இது லஞ்சமாகும்."

"அப்படி நினைக்காதே, தம்பி. இது என் அன்பளிப்பு. நீ என் மகன் மாதிரி. அவசியம் நான் சொன்னபடி செய்து விடு..." என்று கடுமையான இருமல்களுக்கிடையே கூறிவிட்டு மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடிச் சென்றான் வீராசாமி.

★★★★★


ஒருநாள் போஸ்ட் மாஸ்டர் பொன்னுதுரை கவலையோடு தபாலாபீசில் உட்கார்ந்திருந்தார். அயலூரில் கடும் சுரத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் தமது மகளைப் பற்றிய கடிதத்தை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அது கிடைக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக வீராசாமியின் மகள் ராஜத்தின் கடிதம் வந்திருந்தது.

"பாவம், இவ்வளவு நாள் சென்று அந்தக் கிழவனுக்குக் கடிதம் வந்திருக்கிறது. இதை நாமே அவனிடம் நேரில் கொடுக்க வேண்டும்" என்று தீர்மானித்து அந்தக் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

அதே சமயத்தில் வீராசாமியின் உருவம் வாசற்படியில் தெரிந்தது. "வா வீராசாமி, வா. கடைசியில் உன் மகள் கடிதம் கிடைத்து விட்டது. வந்து வாங்கிக்கொள்" என்று எழுந்து சென்று கடிதத்தை நீட்டினார். ஆனால் பூட்டப்பட்டிருந்த வாசற் கதவில் இடித்துக் கொண்டு பிரமை பிடித்தவன் போல் நின்றார். வீராசாமியையும் காணவில்லை; வேறு எவரையும் காணவில்லை. கடிதம் மட்டும் கீழே விழுந்து கிடந்தது.

சிறிது நிதானித்து தனது நாற்காலியில் அமர்ந்த பின்னர், "சின்னத்தம்பி, சின்னத்தம்பி" என்று கூப்பிட்டார்.

"ஏன் சார்?" என்று கேட்டுக்கொண்டே சின்னத்தம்பி ஓடி வந்தான்.

"வீராசாமிக் கிழவனுக்கு அவன் மகளிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அவன் வந்ததை நீ பார்த்தாயா? எங்கே அவன்?" என்று கேட்டார் போஸ்ட் மாஸ்டர்,

"அவன் இறந்து ஒரு வாரமாகிறது சார். இருந்தாலும் அவனுக்கு வந்த கடிதத்தைக் கொடுங்கள். அவன் சமாதியில் அதை வைத்துவிட வேண்டும்" என்று தனக்கும் வீராசாமிக்கும் நடந்த சம்பாஷணையை விளக்கிக் கூறினான் சின்னத்தம்பி.

இது கனவா, நனவா, தன் மகளின் கடிதத்தை எதிர்பார்த்த மனத்தின் கற்பனையா என்று தீர்மானிக்க முடியாமல் குழம்பினார்.

அன்று மாலை அவரும் சின்னத் தம்பியும் ராஜத்தின் கடிதத்துடன் வீராசாமியின் சமாதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

என். பழநிவேலு

© TamilOnline.com