காரைக்குடி மணி
தமிழகத்தின் பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி (77) மே 4, 2023 அன்று காலமானார். செப்டம்பர் 11, 1945-ல் காரைக்குடியில் பிறந்த மணி மூன்று வயது முதலே இசையில் ஈடுபாடு உடையவராக இருந்தார். தந்தையிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டவர், காரைக்குடி ரங்கு ஐயங்காரிடம் மிருதங்கம் கற்றார். சிறுவனாக இருக்கும்போதே பித்துக்குளி முருகதாஸின் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தார். பதினெட்டாம் வயதிலேயே அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றார். சென்னையில் ஹரிஹர சர்மாவிடம் (விக்கு விநாயக்ராம் அவர்களின் தந்தை) இசை பயின்றார். கே.எம். வைத்யநாதன் உள்ளிட்ட பல மேதைகளிடமிருந்து இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, மதுரை சோமு, டி.எம். தியாகராஜன், டி.கே. ஜெயராமன், லால்குடி ஜெயராமன், சஞ்சய் சுப்ரமணியன் உள்ளிட்ட பலருக்குப் பக்கம் வாசித்துப் புகழ்பெற்றார். கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் என்பதற்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தவர் மணிதான். 1993-ல் காரைக்குடி மணி தனது முதல் தனி ஆவர்த்தனக் கச்சேரியை மறைந்த கஞ்சிரா மாஸ்டர் ஜி. ஹரிசங்கருடன் இணைந்து வழங்கினார். அக்கச்சேரி பலராலும் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து பல தனி ஆவர்த்தனக் கச்சேரிகளை, ஃப்யூஷன்களை இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வழங்கினார்.

1989ம் ஆண்டில் 'சுருதி லய கேந்திரா' எனும் இசைப் பள்ளியைத் தொடங்கினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என உலகின் பல இடங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவரிடம் இசைப் பயிற்சி பெற்றனர். குருகுலவாச முறையில் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கி இசை பயில்வதற்காக 'Sea-sun Gurukulam' என்ற உண்டு-உறைவிட இசைப் பள்ளியைச் சென்னை பனையூரில் தொடங்கினார்.

சமீபமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காரைக்குடி மணி, மே 4 அன்று காலமானார்.

லயமேதை காரைக்குடி மணிக்கு தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com