லட்சுமி தமிழ் பயிலும் மையம்: 36வது ஆண்டுவிழா
ஏப்ரல் 1, 2023 அன்றும் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36ஆம் ஆண்டு விழா இனிதுற நடந்தேறியது.

லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, இடையறாது செயல்பட்டு வருகிறது. அவரே முதல்வராக முன்னின்று நடத்தும் இப்பள்ளி இன்றைக்கு 19 தன்னார்வலர் ஆசிரியர்களோடும், 250க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தமிழ்ப் பிள்ளைகளோடும் இயங்கி வருகிறது.

இவ்வாண்டு இன்னும் சிறப்பாக இப்பள்ளி அமெரிக்காவின் பிற மாநிலங்கள் தவிரக் கனடா, இங்கிலாந்து, டென்மார்க், லக்சம்பர்க், ஜப்பான், ஆஸ்திரேலியா எனத் தனது தமிழ்த் தொண்டை விரிவுபடுத்தியுள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் வலிந்து தள்ளப்பட்ட இணையதள வகுப்பு முறைக்கு இனிதே பழக்கப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், இடம் பெயர்ந்தாலும் தொடர்ந்து இப்பள்ளியிலேயே தொடர விருப்பம் தெரிவித்த மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்ற சேர்க்கைக் கோரிக்கைகளால் இந்த உலகளாவிய விரிவுபடுத்தல் சாத்தியமாகி உள்ளது.



பள்ளியின் 36-வது ஆண்டு விழா அமெரிக்கக் கிழக்கு நேரம் மதியம் 1 மணிக்கு, ஆசிரியர்கள் லட்சுமி நிஜவீரப்பா மற்றும் சித்ரா சந்திரசேகர் தொகுத்து வழங்க, பள்ளிக் குழந்தைகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. ஆசிரியர் கிருத்திகா நடராஜன் வரவேற்புரை வழங்க, லஷ்மி ஷங்கர் தமது முதல்வர் உரை மூலம் பள்ளி, அதன் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகச் சிறப்பு விருந்தினரின் உரை நிகழ்ந்தது.

சிறப்பு விருந்தினராக அமெரிக்கத் தமிழ்க்கவிஞர் மற்றும் பன்முகத் திறமையாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி பங்கேற்றார். மிச்சிகன் மாநிலத்தில் வசிக்கும் இவர், அங்கே தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகவும், தமிழ்ப் பத்திரிக்கைகள், தமிழ்ச் சங்கங்கள் போன்றவற்றில் தன்னார்வலராகவும் செயலாற்றி வருகிறார். இவர் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதோடு 'வாசிப்பின் அவசியம்' என்ற தலைப்பில் அருமையான உரையை நிகழ்த்தினார்.



பின்னர், ஆடல், பாடல், நாடகம், இலக்கிய உரையாடல், கருத்தாழமிக்க கதையாடல், விடுகதை, விநாடி வினா, கருவியிசை எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தம் திறமைகளைப் பன்னாட்டு மாணவமணிகள் மேடையேற்றினர். திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் பாடல் என ஒப்புவித்த மழலையர்கள், அவர்களாகவே வேடம் அணிந்து வந்து பங்களித்தது, அவர்களின் ஆர்வத்தைப் பறைசாற்றியது. மேல்வகுப்புப் பிள்ளைகள் தாங்களே ஒருங்கிணைத்த நாடகங்கள், தலைவர்கள் பற்றிய உரைகள் போன்றவற்றைச் சிறப்புற வழங்கினர். உலகின் வெல்வேறு மூலையில் இருந்து பங்களித்த மாணவர்கள் தத்தம் நிலப்பரப்பு பற்றிய தகவல்களையும் சேர்த்து அளித்தது அருமை.

ஆசிரியர்கள் தத்தம் வகுப்பில் தேர்ச்சியுறும் மாணவர்களை வாழ்த்தி, சான்றிதழ்களை வழங்கினர். ஆசிரியர் மீனா சுந்தர் நன்றியுரை வழங்கினார். மொழி வாழ்த்து, இந்திய, அமெரிக்க தேசியகீதங்கள் முதலியவற்றை மாணாக்கர் முழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



ஆறு மணிநேரம் கடந்தும் தொடர்ந்து நடந்த இந்த விழா, சற்றும் தொய்வுறாது, ஆரவாரத்தோடு நிகழ்ந்து முடிந்தது. நிகழ்ச்சியைப் பின்னின்று ஒருங்கிணைத்து வழிநடத்திய ஆசிரியர் அகிலா சுரேஷ், தொழில்நுட்ப உதவி புரிந்த சுரேஷ் கணேசபாண்டியன், ரகுபதி ராகவன் ஆகியோரின் உழைப்பு அலாதியானது. இவ்வாண்டு கூடுதல் நிகழ்ச்சிகள், அதிகமான பங்கேற்பாளர்கள், மாறுபட்ட நிகழ்ச்சிகள் எனச் சிறப்பாக அமைந்தது

நிகழ்ச்சியில் இடையிடையே பெற்றோர் தமது கருத்துகளை வெளிப்படுத்திய உற்சாகத்தில் இந்த நிகழ்ச்சிக்கான வெற்றியும், அடுத்த தலைமுறை தமிழ் தாங்கிச் செல்லும் பெருமிதமும் நிலைத்திருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது.

வலையொளியில் காண:


சக்திவேல் கொளஞ்சிநாதன்,
ஆசிரியர், லட்சுமி தமிழ் பயிலும் மையம்

© TamilOnline.com