ஒரு சூரியகாந்தி மலர்கிறது!
"அப்பா…….அப்பா……" என்று சத்தம் போட்டாள். கண்களைப் பெரிதாக்கினாள். பற்களை நறநறவென்று கடித்தாள் என் மகள்.

"கண்ணம்மா… கண்ணம்மா… எதுக்கும்மா இவ்வளவு கோபம்?" என்றேன்.

அவளிடமிருந்து பதிலில்லை.

நன்றாகப் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலரை ஒத்த முகம் கொண்ட என் மகளுக்கு, இன்று என்னவாயிற்று? மனக்கண்ணில் நடந்ததை ஒருமுறை ஓட்டிப் பார்த்தேன்.

ஒவ்வொரு இரவும், உறங்கும் முன், பள்ளிக் கதை, வீட்டுக் கதை, குடும்பக் கதை, ஊர்க்கதை என்று களைகட்டும் எங்கள் பேச்சு. அங்கிருந்து கேலி. கிண்டல் எனத் தொடர்ந்து, கலகலவெனச் சிரிப்பொலி பொங்கி ஓய்ந்த பிறகு ஓர் அமைதி நிலவும். அப்போது நான் ஒரு நூலை எடுத்து வாசிக்க, அவளும் என்னுடன் சேர்ந்து வாசிப்பாள்.

இன்றும் அப்படித்தான் எங்கள் வாடிக்கை தொடர்ந்தது. அது மிகவும் வேடிக்கையாகச் சென்றது. எங்கள் அரட்டை அரங்கம் திடீரென வேறு பாதையில் பயணித்தது. அவள் சிரிப்பொலி பாதி வெடிக்காமல் நின்ற சரவெடி ஆனது.

மாலையில் பகலவன் மறைந்த பிறகு சூரியகாந்தி மலர் எவ்விதம் தலை கவிழ்ந்து, சோர்ந்து போகுமோ, அதுபோல் என் மகளின் மலர்முகம் வாடிப் போனது. என் மனம் ஆடிப் போனது.

ஓ… ஓ… ஓ… இப்போது புரிகிறது. நான் வேடிக்கையாகச் சொன்ன ஏதோவொன்று அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆயினும், என் விளையாட்டுச் சொல்லை ரசிக்காத அவள் கோபத்தை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஆம், உண்மையிலேயே, அந்த மழலைக் கோபத்தைப் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

சரி… விளையாடியது போதும்… இனியும் காலம் தாழ்த்த வேண்டாம், அவள் மனம் மேலும் நோகக்கூடாது, அந்தக் கள்ளம் கபடமில்லா உள்ளச் சிரிப்பை மீண்டும் அந்த மலர்முகத்தில் காண ஆசை கொண்டேன். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து, "கண்ணம்மா… நான் விளையாட்டாகத்தானே சொன்னேன், இதற்கெல்லாம் இப்படிக் கோபப்படலாமா?" என்றேன்.

அவள் அமைதியானாள்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவளைச் சாந்தப்படுத்தி, கொஞ்சிக் குலாவினேன். மொட்டு மலர்வது போல் அவள் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு மீண்டும் மலர்ந்தது.

அவள் எப்பொழுதும் விரும்பி நகைக்கும் வேறொரு தலைப்புக்குப் பேச்சை மாற்றினேன். எதிர்பார்த்தபடியே பேச்சு துவங்கிய சில நொடிகளிலேயே விழுந்து விழுந்து சிரித்தாள்.

இரவில், பகலவன் இன்றியும் என் வீட்டுச் சூரியகாந்தி தலைதூக்கிச் சிரித்து ஆடியது. அதைக் கண்டு, என் மனது கொள்ளை போய்க் கூத்தாடியது. பாதி வெடிக்காத சரவெடி இப்போது முழுமையாக வெடித்தது, சிரிப்பொலி மெல்ல மெல்ல ஓய்ந்தது.

சட்டென்று கதையை மாற்றினேன். "ஆமாம், நேற்று பள்ளி விளையாட்டுத் திடலில் ஓடும்போது பூச்சி கடித்து விட்டது என்று சொன்னாயே! என்ன ஆயிற்று?" என்று கேட்டேன்.

இது, ஏற்கனவே நான் அவளைப் பலமுறை கேட்டது. அவளும் பலமுறை எனக்குச் சொன்னது. நான் மீண்டும் கேட்க, அவளும் சளைக்காமல் உள்ளதை உள்ளபடி, முதல்முறை சொல்வதைப் போலவே ஒன்றுவிடாமல் விவரித்தாள். நானும் சளைக்காமல் முதல்முறை கேட்பவனைப் போலவே பொறுமையாக, நிதானமாக, கவனமாக அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே மொத்தக் கதையையும் மீண்டும் கேட்டு விட்டு, "ஐயோ! பாவமே உன் கையில் பூச்சி கடித்து விட்டதா? எங்கே, பூச்சி கடித்த இடத்தைக் காட்டு?" என்றேன்.

அவளும் கையைத் திருப்பிக் காட்டினாள்.

"அட.. வீக்கம் நன்றாகக் குறைந்து விட்டது. இன்னும் வலிக்கிறதா?"

"இல்லை"

"மருந்து ஏதாவது தடவினாயா?"

"ஆமாம்பா! கடித்தவுடனே ஒரே ஒரு முறைதான் மருந்து தடவினேன். அப்போதே வலி குறைய ஆரம்பித்து விட்டது"

"சரி! கடித்த பூச்சிக்கு என்ன ஆனது? எங்கே போனது?"

"அப்பா! எனக்கு எப்படித் தெரியும்? அந்தப் பூச்சிக்கு என்ன ஆனதோ? எங்கே போனதோ? நான், என் கைக்குதான் ஏதோ ஆனதென பயந்து போனேன். வலியால் துடித்துப் போனேன். மருந்து வாங்கிப் போட்டுக் கொண்டு என் கையை மட்டும்தான் அப்படியே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்."

நான், விடவில்லை. "நீ பூச்சியை கவனிக்கவே இல்லையா? பூச்சியைப் பார்த்துக் கோபப் படவில்லையா? கத்தவில்லையா? துரத்தி ஓடவில்லையா?"

"ஐயோ அப்பா! என் கையை கவனிப்பேனா இல்லை, பூச்சியைக் கவனிப்பேனா? என் கை எப்படி வலித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? என் கவனம் எல்லாம் என் கைமேல் மட்டும்தான் இருந்தது. அதனால், பூச்சியைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. ஏன், சுத்தமாக மறந்தே போய்விட்டேன்."

"அப்படியா கண்ணம்மா! சரி, சற்று நேரத்திற்கு முன் நாம் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த போது, நான் விளையாட்டாகப் பேசியதைக் கேட்டு உனக்கு கோபம் வந்தது அல்லவா?"

"ஆமாம், நீங்கள் சொன்னது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதனால்தான் நான் கோபப்பட்டேன். அதற்கென்ன இப்போது?"

"பிடிக்கவில்லை என்றால் இப்படி கோபப்படலாமா?"

"நீங்கள் என்னைக் கேலியாகப் பேசியதைக் கேட்டதும், என் மனம் வலித்தது அதனால்தான் கோபம் வந்தது."

"உன் மனம் வலிக்கிறது என்று உனக்குத் தெரியுமா?"

"ஏன் தெரியாது? எனக்கு நன்றாகத் தெரியும் அப்பா."

"அப்படியென்றால், வலிக்கு மருந்து போடாமல், ஏன் பூச்சியைப் பார்த்துக் கத்துகிறாய்? கண்களை பெரிதாக்குகிறாய்? பற்களை நறநறவெனக் கடிக்கிறாய்? எதன்மீது கவனம்? உன் வலிமீதா? இல்லை பூச்சிமீதா?"

என் அன்பு மகள் கண்கொட்டாமல் சில மணித்துளிகள் என்னை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் மேலும் தொடர்ந்தேன், "கண்ணம்மா… கடித்த பூச்சியை மறந்துவிட்டு வலித்த கையை மட்டுமே நீ கவனித்து உடனுக்குடன் மருந்து தடவியது போல், கேலி செய்த என்னை மறந்துவிட்டு வலித்த உன் மனத்தை மட்டுமல்லவா நீ உடனுக்குடன் கவனித்திருக்க வேண்டும்?"

ஒரு பேரமைதி நிரவியது.

அவளிடமிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. நானும் ஒரு சொல்லும் சொல்லவில்லை.

அவள் ஆழ்ந்து சிந்திக்கிறாள் என்பது மட்டும் எனக்கு நன்கு விளங்கிற்று.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, "ஆமாம் அப்பா, என் வலிக்குத்தான் நான் மருந்து போட வேண்டும். நான்… என்னைதான் கவனிக்க வேண்டும்" என்றாள்.

ஒரு சூரியகாந்தி உண்மையாகவே தனக்குள் மலர்ந்தது.

விகாஷ் ரயாலி

© TamilOnline.com