ஹிந்து மதம்
என் அன்புள்ள லக்ஷ்மிக்கு,
மதங்களின் பொதுப்படையான அம்சங்கள் ஒருபுறமிருக்கட்டும். நீயும் நானும் ஹிந்து மதத்தின் எதிர்காலம் பற்றி சிரத்தை கொண்டிருக்கிறோம். உலகத்திலேயே ஹிந்து மதம் மிகப்புராதனமானது. ஹிந்து மதம் பெரும்பாலும் இந்தியாவுக்குள்ளேயே வியாபித்திருந்தது. ஆனால் ஒரு காலத்தில் ஹிந்து சமய போதகர்கள் இலங்கை, ஜாவா, மலேயா, பர்மா முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தார்கள்.

நமது நாட்டில் ஹிந்து மதத்தை ஒன்றுமறியாத கிராமவாசிகள் நம்பிக்கையின்படி அனுஷ்டிக்கின்றனர். விஷயமறிந்தவர்கள், அத்வைத சித்தாந்தப்படியோ விசிஷ்டாத்வைத முறைப்படியோ அதை அனுஷ்டிக்கிறார்கள். ஹிந்து மதத்தின் எதிர்காலம் செவ்வையாக விளங்க வேண்டுமாயின் நாம் ஒரு பெரிய சீர்திருத்த இயக்கத்தை உருவாக்க வேண்டும்.

நாமெல்லோரும் அநேகமாக சடங்குகளில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றில் சிலவற்றுக்கு எங்கேயாவது ஓரிடத்தில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். உதாரணமாக நமது ஆலயங்களில் மிருகபலியை ஒழிக்க வேண்டும் என்பது என் விருப்பம். கல்கத்தாவில் காளி கட்டத்தில் மிருகபலி இடப்படுகிறது. இது போன்றவைகளை நிறுத்த வேண்டும். கருணாநிதியாகவுள்ள தெய்வம் இதுபோன்ற பலிகளை ஏற்காது. மிருகபலி கூடாது என்பது நம் தென்னிந்திய ஆலயங்களுக்கும் பொருந்தும். சில யாத்ரீகர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அதாவது உடம்பிலும் நாக்கிலும் அலகு குத்திக்கொள்கிறார்கள்; தீ மிதிப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். இவை போன்ற தேகத்தில் ரணம் ஏற்படும்படியான பிரார்த்தனைகள் நிற்கவேண்டும். மனித வர்க்கம் சிரமப்படுவது எந்தத் தெய்வத்துக்கும் ப்ரீதியல்ல. நமது கண்யமான உணர்ச்சிக்கும், மனித வர்க்கத்துக்கும் இவை விரோதம்.

நமது ஆலயங்கள் உண்மையில் தெய்வாம்சமுள்ள இடங்களாக இருக்கும்படிச் செய்வது முக்கியம். இப்போதிருப்பதை விட அவை இன்னும் சுத்தமாக இருக்க வேண்டும். தென்னிந்தியாவின் பல கோயில்கள் பாழாகிக் கிடக்கின்றன. நிறைந்த சொத்துள்ள தேவஸ்தானங்கள் பல இருக்கின்றன. அவை சரியாகப் பரிபாலிக்கப்படவில்லை; தக்க காரியங்களுக்குச் செலவிடப் படவுமில்லை. ஹிந்து மத பரிபாலன போர்டார் நிலைமையை அபிவிருத்தி செய்யவில்லை. அந்தந்த இடங்களில் பொது விஷயங்களில் ஊக்கம் கொண்ட பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் சர்க்கார் மேற்படி தேவஸ்தானங்களின் நிர்வாகத்தை ஏற்கவேண்டும். ஆலயங்களைப் புதிதாக, சுத்தமாக இருக்கும்படிச் செய்யவேண்டும். ஆலயங்களை வெளியே புதிதாக்கி, சுத்தமாக்குவது மட்டும் போதாது. உண்மையில் ஆசார சீலர்களாகவும், பயிற்சியும் அனுபவமும் கூடியவர்களாகவும் உள்ள அர்ச்சகர்களைக் கொண்டு ஆலயங்களில் பூஜை செய்யச் சொல்லவேண்டும். அவர்களுக்கெல்லாம் போதுமான சம்பளம் தரவேண்டும். உண்மையான யாத்ரீகர்கள் தவிர வேறு யாருக்கும் இலவசமாக உணவு கொடுக்கக்கூடாது. இந்த ஏற்பாட்டின் மூலம் மிஞ்சும் பணத்தைத் தகுதியுள்ள மாணவர்களுக்கு - அவர்கள் எம்மதத்தினராயினும் சரி - வேதங்கள், ஆகமங்கள், தேவாரம் இவற்றைப் போதிப்பதற்காகச் செலவிடவேண்டும். பூஜைகளையும் உற்சவங்களையும் சரிவர, பக்தி சிரத்தையோடு நடத்தவேண்டும்.

ஹிந்து மதத்தையொட்டி நடப்பவர்கள் இவ்வாலயங்களுக்கு வர வசதி இருக்கவேண்டும். மத விவகாரங்களிலெல்லாம் நிர்ப்பந்தம் கூடாதென்பதை ஒப்புக்கொள்கிறேன். நல்ல பிரசாரம் செய்தால் அநேகமாக எல்லா ஹிந்துக்களும் இந்த முக்கிய சீர்திருத்தத்தைச் செய்யச் சம்மதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.



ஆலயங்களில் பக்தர்களிடையே வித்தியாசம் கூடாது. அதாவது பிராமணர், பிராமணரல்லாதார் என்பது போன்ற வேற்றுமைகள் கூடாது.

கிருஸ்துவ மதத்தினரும், முஸ்லிம்களும் தங்கள் தங்கள் மதத்தினரோடு ஒன்றாகச் சேர்ந்து தெய்வ வழிபாடு நடத்துகின்றனர். இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த நாம் வெகுவாகப் பின்னணியில் இருப்பதாகவே தோன்றுகிறது. நம்முடைய ஆலயங்களிலெல்லாம் இப்படி நடப்பதில்லை. ஆனால் ஒன்று. தற்காலத்தில் பஜனை கோஷ்டிகள் நடத்தப்படுகின்றன. இது நல்லதுதான். குறைந்தது வாரம் ஒரு முறையாவது நாம் நமது ஆலயங்களில் ஒன்றாகக்கூடி கடவுளைத் தரிசிக்க வேண்டும்; பொதுவாக ஒரு பிரார்த்தனை என வைத்துக்கொள்ள வேண்டும்; ஏதாவது ஒரு மத விஷயமான உபன்யாசத்தைச் செய்த பிறகு பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஹிந்துக்களிடையே ஒற்றுமை பெருக வேண்டுமென்ற தூண்டுதல் பிறக்கும்; ஜாதித் தடைகள், கட்டுப்பாடுகள் மறையும். ஹிந்துக்கள் தலை நிமிர்ந்து வாழலாம். இன்றைய நிலைமைக்கு இது அத்தியாவசியம். ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் தாக்குவதை அஹிம்ஸா பூர்வமாகவோ அல்லது பலாத்காரமாகவோ எதிர்த்து நின்று பாதுகாக்கவும் முடியும்.

இந்தியாவுக்கு வெளியே ஹிந்து மதத்தின் செய்தியைப் பரப்புவது ஒரு புறமிருக்கட்டும். நமது அரும்பெரும் ஆச்சார்யர்களைக் கொண்டு நம் மக்களுக்கே ஹிந்து மதத்தின் சிறந்த உண்மைத் தத்துவங்களை உபதேசிக்க வேண்டுமென்பது என் அவா. நமது மடாதிபதிகளில் சிலர் இத்துறையில் கொஞ்சம் சேவை செய்து வருகின்றனர். ஆனால், இன்னும் இதைவிட அதிகமாகவும், தொடர்ச்சியான ஏற்பாட்டின்படியும் முக்கியமாக ஹரிஜனங்களிடையே இது பற்றிப் பிரசாரம் செய்வதவசியம். அவர்களும் நம்மைப் போல நல்ல ஹிந்துக்கள்தாம். எனவே நாம் அவர்களுக்கு நம்மாலான சேவையைச் செய்ய வேண்டும்.

ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒரு கோட்பாட்டை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; அதன்படி நடக்கவும் வேண்டும்:

"மரத்தை அது தரும் பழத்தைக்கொண்டே மதிக்கவேண்டும்."

ஹிந்துக்களாகிய நாம் பரிசுத்தமான தூய வாழ்வு வாழவேண்டும். தர்ம சிந்தனையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருத்தல் வேண்டும். நமது வாழ்க்கை, சேவை இவற்றின் மூலம் கடவுளிடம் நமக்குள்ள அசையாத பக்தியை நாம் நிரூபிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் அம்மாதிரியான பழக்கம் படியும்படிச் செய்யவேண்டும். இதை எவ்வளவுக்கு எவ்வளவு கவனித்துச் செய்கிறோமோ அந்த அளவுக்கு நாம் ஹிந்து மதத்துக்கு உண்மையான சேவை செய்தவர்களாவோம்.

ஹிந்து மதத்துக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. ஆனால், அந்த எதிர்காலம் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும், வருங்காலத் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் பொறுத்தே இருக்கிறது. அவர்கள் சமயத்துக்கு அனுசரணையாகக் கடமைகளைச் செய்வார்களென நம்புகிறேன்.

13.6.1941

(எஸ். சத்தியமூர்த்தி எழுதிய 'அருமைப் புதல்விக்கு' நூலிலிருந்து சிறு பகுதி - தமிழாக்கம்: எஸ். நீலமேகம்)

© TamilOnline.com