சாம்பவி மஹாமுத்ரா செய்யும் அற்புதங்கள்
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், அட்லாண்டாவில் ஜூன் 3-4 தேதிகளிலும், லாஸ் ஏஞ்சலஸில் ஜூன் 24-25 தேதிகளிலும் அகமுகப் பொறியியல் (Inner Engineering) வகுப்புகளை நடத்தவுள்ளார். சத்குருவிடமிருந்து நேரடியாகக் கற்கும் இந்த வாய்ப்பைப் பெற விரும்புவோர் 'Inner Engineering Online' வகுப்புகளை முடித்திருக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பைக் குறித்து அறிய: https://innerengineering.sadhguru.org/with-sadhguru என்ற வலைமனைக்குச் செல்லவும்.

சாம்பவி மஹாமுத்ரா குறித்து ஒரு சிறிய அறிமுகம் இங்கே தரப்படுகிறது.

★★★★★


அன்பர்: சத்குரு, ஈஷா யோகாவில் கற்றுத் தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் குறித்து விளக்குங்கள். இந்த தியானத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
சத்குரு: சாம்பவி மஹாமுத்ரா என்பது உயிர்கொண்ட தொழில்நுட்பம். இது வெறும் பயிற்சி அல்ல. இது உயிரோடு இருக்கும் ஒரு தன்மை. தினசரி பயிற்சி செய்து வந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்த நிலை பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் வடிவமைத்துக் கொள்ளத் தேவையான திறமை, புத்தி, சக்தி என்று நமக்குத் தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக் கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது கவனம் செலுத்திப் பயிற்சி செய்பவர்களுக்குப் பிராணசக்தி பிரமாதமாகச் செயல்படும். உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கற்பனை செய்தேயிராத ஒரு மனிதராக வாழ முடியும்.

இது செயல்படும் விஞ்ஞானம்...

இந்த உடல் ஐந்து அடுக்குகளாக இருப்பதாகக் கொள்ளலாம். இந்த அடுக்குகள் அல்லது உறைகளை 'கோசம்' என்று கூறுவார்கள். அவை அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமய கோசம் எனப்படும்.

அன்னமய கோசம் என்றால் உடல். அன்னம் என்றால் உணவு. உணவால் இந்த உடல் ஆகியிருப்பதால் உடலுக்கு அன்னமய கோசம் என்று பெயர்.

அடுத்தது மனோமய கோசம். மனம் என்றால் அது ஓரிடத்தில் இருப்பதல்ல. நமது உடலில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிலும் மனம் இருக்கிறது. உடல் முழுவதும் பரவியிருக்கின்ற அணுக்கள், தன்னிச்சைப்படியே செயல்படுகின்ற இயல்புடையவை. வெளியில் இருந்து கிருமியோ அல்லது வேறேதோ வந்துவிட்டால், உங்களைக் கேட்காமலே தேவைக்கேற்ப அவை செயல்பட வல்லவை. எனவே அதற்கு ஒரு மனம் இருக்கிறது. மனம் முழுமையாகப் பரவியுள்ளது. இதற்கு மனோமய கோசம் என்று பெயர்.

அன்னமய கோசம், மனோமய கோசம் இரண்டும் செயல்படுவதற்கு சக்தி தேவை. இதனைப் பிராணமய கோசம் என்று கூறுவோம். இது 'சக்தி உடல்' ஆக இருக்கிறது.

உடல், மனம், பிராணன் மூன்றுமே பொருள் என்னும் பரிமாணத்தில் இருப்பவை. உதாரணமாக, குழல்விளக்கு பொருள்தன்மை சார்ந்தது. அதிலிருந்து வெளியேறும் வெளிச்சமும் பொருள்தன்மை கொண்டதே. அது பொருளாக இருப்பதால்தான், கையால் வெளிச்சத்தைத் தடுக்க முடிகிறது. ஆனால் இந்த வெளிச்சம் உருவாவதற்குத் தேவையான மின்சார சக்திகூடப் பொருள் தன்மையானது என்றுதான் கூறமுடியும்.

அதனால்தான் மின்கம்பி அறுந்து போனால் மின்சாரம் நின்று போகிறது.



உடல், மனம் இரண்டும் பொருள்தன்மை கொண்டவை. அவற்றுக்குப் பின்புலமாக இருக்கிற சக்தி மிகவும் சூட்சுமமானது என்றாலும் பொருள் தன்மைதான்.

அடுத்தது, விஞ்ஞானமய கோசம். இது பொருள்தன்மையிலிருந்து பொருளற்ற தன்மைக்குப் போவதற்கான இடைநிலை. அடுத்த நிலை ஒரு பொருளற்ற தன்மை.

பொருளற்ற தன்மை என்றால் உருவமோ அளவோ அற்றது. எனவே அதை நாம் விவரிக்க முடியாது. அதை நாம் அனுபவபூர்வமாக மட்டுமே பேசமுடியும். உதாரணமாக, நீங்கள் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தைக் குழந்தைகள் தொட்டுவிட்டால், அவர்கள் அதைப் பாத்திரம் என்று கூறாமல் சூடு என்றுதான் கூறுவார்கள். இதுவும் அப்படித்தான். நம் அனுபவத்தில் மட்டும்தான் பேசமுடியும். அதனுடைய தன்மை பற்றிப் பேசுகிற தகுதி நமக்குக் கிடையாது.

அது பொருளற்ற தன்மை. அதை நாம் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஏனென்றால் அது அளவு அல்லது உருவத்திற்குச் சம்பந்தப்பட்டது அல்ல. அது எதனுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் அதைத் தொட்டபோது நமக்கு அது ஆனந்தமாக இருக்கிறது. அதனை ஆனந்தமய கோசம் என்று கூறுகிறோம்.

அப்படியானால் நமக்குள் ஆனந்தம் என்பது ஒரு பலூன் மாதிரி உட்கார்ந்திருக்கிறதா? அப்படி அல்ல. இது ஒரு பொருளற்ற தன்மை; பொருள் தாண்டிய ஒரு தன்மை இருக்கிறது. அதுபற்றி நாம் எதையும் கூற முடியவில்லை. ஆனால் நமக்கு அதனோடு தொடர்பு ஏற்படும் போது ஆனந்தமாக இருக்கிறது. அது குறித்து நாம் அனுபவபூர்வமாக மட்டுமே பேச முடியும். அதனை ஆனந்தமய கோசம் என்று கூறுவோம்.

அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம் இந்த மூன்றையும் நாம் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்துவிட்டால், உள்ளிருக்கும் ஆனந்தமய கோசம் தானாகவே வெளிப்படும்.

சாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின் போது நாம் எந்த ஆனந்தத்தையும் புதிதாக உருவாக்கவில்லை. உள்ளிருக்கும் பொருளற்ற தன்மையுடன் தொடர்பு கொண்டதால் நமக்குப் பேரானந்தம் ஏற்படுகிறது.

நாம் அனுபவப்பூர்வமாக மட்டுமே அதை வர்ணிக்க முடியும். பொருள் தன்மையில் உள்ள மூன்று நிலைகளாகிய அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம் இவற்றைச் சமநிலையில் நிறுத்தி நேர்கோடாக வைத்தால், நம் உடலில் எந்த நோயும் இருக்க முடியாது. மனதில் எந்தத் துன்பமும் வேர்விட வாய்ப்பு இருக்காது.

ஆனால் மூன்று நிலைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனந்தம் வேண்டும், ஆனந்தம் வேண்டும் என்று ஜபம் செய்தால் ஆனந்தம் ஏற்படாது. இதைப்பற்றி மட்டுமல்ல. வாழ்வின் போக்கில் அனைத்துமே இப்படித்தான். நமக்கு ஒரு மரத்திலிருந்து பழம் வேண்டுமென்றால், விதையைக் கையில் வைத்துக் கொண்டு ஜபம் செய்தால் பழம் வராது. பழம் வேண்டுமென்றால், விதையை மண்ணில் ஊன்றி தண்ணீர், உரம், சூரிய வெளிச்சம் இவற்றைக் கொடுத்து கவனித்துக் கொண்டால், ஒருநாள் பழம் நம் கைகளில் விழும். வாயிலிட்டால் இனிப்பாக இருக்கும். வாழ்க்கையும் இப்படித்தான் நிகழ்கிறது.

அதனால் நீங்கள் 'ஆனந்தம் ஆனந்தம்' என்று ஜபம் செய்யத் தேவையில்லை. நீங்கள் இந்த மூன்று தன்மைகளையும் ஒரே நேர்க்கோட்டில் நிலைநிறுத்தினால், அந்த நிலையில் ஆனந்தமாக இருப்பதைத் தவிர வேறு எப்படியும் இருக்க முடியாது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com