வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக, பொங்கல் விழா ஜனவரி 23, 2005 அன்று, சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் நடந்தேறியது. கடந்த டிசம்பர் 26ம் தேதி, சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையால் தமிழ்நாட்டிலும், இந்தியப் பெருங்கடலின் பிறநாடுகளிலும் ஏற்பட்ட கடுமையான பேரிழப்பினை கருத்தில் கொண்டு, இவ்விழா நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் குழந்தைகள் மெழுகு வர்த்தி ஏற்றி வர, சுனாமியால் உயிர் இழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தேவாரப் பாடலை மணி மணி வண்ணன் அவர்கள் முழங்க, கலந்து கொண்ட உறுப்பினர் அனைவரும் தங்கள் மௌன அஞ்சலியைச் செலுத்தினர். பொங்கல் திருநாளைக் குறிக்குமாறு பொங்கி வரும் பொங்கல் பானை, கரும்பு, விளக்கு, போன்றவற்றை முகப்பிலும், மேடையிலும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள் ஆஷா மணிவண்ணன், சுபாஷினி பாலாஜி, மற்றும் நளாயினி குணநாயகம்.

மறைந்த இசைக் குயில் எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ·ப்ரீமாண்ட் ஸ்ருதி ஸ்வரலயாவின் நிறுவனர் அனுராதா சுரேஷ் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. அஞ்சலியைத் தொடர்ந்து, கல்கி குடும்பத்து உறுப்பினரும், எம் எஸ், சதாசிவம் அவர்களின் பெயர்த்தியுமான காஞ்சனா, தன் பாட்டியின் நினைவுகளை அவையோருடன் பகிர்ந்து கொண்டார். எம்.எஸ். அவர்களின் திரை இசைப் பாடல்களின் காட்சிகளும், கச்சேரிகளும் திரையிடப்பட்டன.

தொடர்ந்து, வட கலி·போர்னியா தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த ஈழத்தமிழ்ச் சிறுமியர் தங்கள் தாயகத்தில் பொங்கல் கொண்டாடும் இனிய சூழலைச் சித்தரிக்கும் வண்ணம் நாட்டியமாடினர்.

சுனாமியால் நிவாரண நிதி திரட்டத் தமிழ் மன்றம் வளைகுடாப் பகுதிக் கலைஞர்கள் சன்ஹிதி நாட்டியக்குழுவின் நடனம் மற்றும் முன்னணி இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஜனனி சீனிவாசன் ஒருங்கமைத்த நாட்டிய நிகழ்ச்சி பரத நாட்டியத்தில் தொடங்கி நாட்டுப்புற நடனங்கள், காவடி, மற்றும் பல பழைய மற்றும் புதிய திரை இசைப் பாடல்களுக்கான நாட்டி யங்கள் என்று களைகட்டியது. நாட்டியக் குழுவினரின் பிரமாத ஒத்திசைவும், ஒயிலான நடனங்களும், பார்வையாளர்களின் ஏகோ பித்த வரவேற்பைப் பெற்றன. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராஜீவ், தனது நகைச் சுவைப் பேச்சுக்கள் மூலமாகவும், உற்சாகமான தொகுப்பின் மூலமாகவும் ஒவ்வொரு நடனத்தின் மூலமும், பார்வையாளர் களிடமிருந்து ஒரு பெரும் நிதியினை, சுனாமி நிவாரண நிதிக்காகச் சேகரித்துக் கொடுத்தார்.

நடனங்களைத் தொடர்ந்தது இன்னிசை நிகழ்ச்சி. பிரபு பாடிய 'கடல் மேல் பிறக்க வைத்தான்' பாடல் பார்வையாளர்களின் கண்களில் நீர் வரவைத்தது. நிகழ்ச்சியில் முகுந்த் நரசிம்மன், பிரபு, ராஜாமணி, ஜெயஸ்ரீ, ரஞ்சினி, ஆகியோர் தங்களது மயக்கவைக்கும் குரல்களால் பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப் போட்டனர். பிரபுவின் மகள் செல்வி ஸ்ருதி தந்தையோடு இணைந்து பாடிய பாடல் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜயா ஆசுரி ஒவ்வொரு பாடலையும் ரசிகர்களிடம் ஏலம் விட்டு, தனது உற்சாக மான பேச்சினால் கணிசமான நிதியைத் திரட்டினார்.

பொங்கல் மற்றும் சுனாமி அஞ்சலி நிகழ்ச்சியின் மூலமாக கிட்டத்தட்ட 29,000 டாலர்கள் நிதி திரட்டப் பட்டது. இந்த நிதி பல்வேறு சேவை நிறுவனங்களுக்கும், ஆக்க பூர்வமான திட்டங்களுக்கும் பிரித்து வழங்கப் படும். சுனாமிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி என்பதால் சன்னிவேல் கோவில் நிர்வாகத்தினர், அரங்கத்தை இலவசமாக அளித்திருந்தனர். வளைகுடாப் பகுதி தமிழர்களின் பெருந்தன்மையான நன்கொடையின் மூல மாக ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சி நடந்தேறியது.

ராஜன் சடகோபன்

© TamilOnline.com