ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தென்றல் வாசகர்கள் நன்கு அறிந்த முகம், ஏன் குரலும்கூட. அவரது தமிழ் ஆடியோபுக்ஸ்.காம் உலக அளவில் தமிழர்களிடையே மிகப் பிரபலமான தளம். பாட்காஸ்டிங், ஆடியோ புக், மின்னூல் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவருடன் உரையாடினோம். அதில் இருந்து...

★★★★★


கே: வணக்கம். உங்கள் இளமைப் பருவத்தை நினைவு கூருவோமா?
பதில்: வணக்கம். நான் பிறந்தது சென்னை திருவல்லிக்கேணியில். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் அருகிலுள்ள தெருவில் வசித்தேன். புகழ்பெற்ற ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். உ.வே. ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் அவர்களிடம் காலை வேளையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்றேன். மாலையில் ஸ்தலசயனம் ஐயங்காரிடம் ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் போன்ற பல தோத்திரப் பாடல்களைக் கற்றுக்கொண்டேன். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் போன்றோரின் கதாகாலக்ஷேபங்கள் ஹிந்து ஹைஸ்கூலில் நடக்கும். அதற்குப் பாட்டி, அத்தைகளுடன் செல்வேன்.

இவையெல்லாம் பின்னாளில் எனக்கு ஆன்மீகப் பற்று அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பள்ளியில் பகவத்கீதை, ஸஹஸ்ரநாமம் மற்றும் மனப்பாடப் பாடல் ஒப்பிக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். கிரிக்கெட் பொழுது போக்காக இருந்தது. பின்னர் நங்கநல்லூரில் வசித்தோம். ஆலந்தூர் நிதி ஹைஸ்கூலில் மேல்நிலைக் கல்வி. ஏ.எம். ஜெயின் கல்லூரியில் கணிதப் பட்டப் படிப்பு. லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தேன்.

ராமானுஜராக ஸ்ரீகாந்த்



கே: அருமை. நாடக ஆர்வம் வந்தது எப்படி?
ப: சென்னை 'ஹ்யூமர் க்ளப்'பில் உறுப்பினர் ஆனேன். அதில் பொறுப்பாளராக இருந்த கவிதாலயா கோவிந்தராஜன் சார் என்னை மிகவும் ஊக்குவித்தார். பல மேடைகளில் நகைச்சுவை அரங்குகளில் பேசினேன். அதுதான் ஆரம்பம். ஆர்.எஸ். மனோகர், ஒய்.ஜி. மகேந்திரன், மௌலி, எஸ்.வி. சேகர், கிரேஸி மோகன் போன்றோரின் நாடகங்களால் நாடக ஆர்வம் வந்தது. மெரீனாவின் தனிக்குடித்தனம், கால்கட்டு போன்ற நாடகக் கேசட்டுகள், வானொலிகளில் ஒலிபரப்பாகும் நாடகங்கள் போன்றவற்றைக் கேட்டு நாடக ஆர்வம் அதிகமானது.

நடிக்கும் ஆர்வம் வந்தது. கல்லூரியில் படிக்கும் போது பிரிட்டிஷ் கவுன்சிலில் நடக்கும் ஆங்கில நாடகங்கள் சிலவற்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட நடிகர் விக்ரமுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். 'வாய்ஸ் கல்சர்', 'வோகல் டெக்னிக்' எல்லாம் அப்போது கற்றுக் கொண்டேன். அது இப்போது எனக்கு மிக உதவியாக இருக்கிறது.



கே: அமெரிக்காவிற்கு எப்போது வந்தீர்கள், அப்போதைய அமெரிக்க வாழ்க்கை எப்படி இருந்தது?
ப: 25 வருடங்களுக்கு முன், Big 5 Consulting மூலமாக வேலை கிடைத்து அமெரிக்கா வந்தேன். புலம்பெயர்ந்து வருபவர்களுக்கான மனநிலை எனக்கும் இருந்தது. முதல் மூன்று வருடம் மிகவும் பிஸியாக இருந்தேன். நிறையப் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. அதில் தமிழர்களைச் சந்திக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய நட்புகள் உருவாகின. அமெரிக்கா பற்றிய புரிதல் மெல்ல மெல்ல ஏற்பட்டது.

ஸ்டான்ஃபோர்ட் கல்லூரியில் வானொலி நிகழ்ச்சி ஒன்று செய்யும் வாய்ப்பு, நண்பர் சுதாகரனின் mostly tamil மூலம் கிடைத்தது. பின்னர் 2005 முதல் 2016 வரை 11 வருடங்கள், 550க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நானே செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பல தரப்பட்டவர்களைச் சந்திக்க முடிந்தது. நாடகம், விளையாட்டு, அரசியல் என்று எல்லாமே செய்தோம். அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பேச்சை ஒலிபரப்பும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மறக்க முடியாதது. Project management certification செய்தேன்.

பாரதி தமிழ் சங்கம், பே ஏரியா தமிழ் மன்றம், இட்ஸ் டிஃப் போன்றவற்றின் மூலம் பொதுத் தொண்டு செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன. பல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளைச் செய்தோம். The most listened Show in Bay Area is ITSDIFF Radio. கலை, கலை சார்ந்த முயற்சிகள், பொதுத் தொண்டுகள் என்பதாக எனது அப்போதைய அமெரிக்க வாழ்க்கை இருந்தது.

சேர மன்னனாக ஸ்ரீகாந்த்



கே: அமெரிக்காவில் உங்கள் நாடக அனுபவங்கள் குறித்து...
ப: இளவயதிலேயே இருந்த நாடக ஈடுபாடு, அமெரிக்கா வந்தபின்னும் தொடர்ந்தது. மணி மணிவண்ணனின் 'பாரதி நாடக மன்றம்' அதற்கு உறுதுணையாக இருந்தது. தீபா ராமானுஜம் நாடகங்கள், ப்ரியா க்ரியேஷன்ஸ் நாடகங்கள், அலெக்ஸ்பாபு நாடகங்கள் என்று பலவற்றில் நாடகங்களில் நடித்தேன்.

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை நாடக ஆக்கம் செய்த மதுரபாரதி ஐயா, கவிதையை எப்படிக் கவிதையாகப் படிப்பது, அதையே எப்படி வசனமாகச் சொல்வது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அவரே பீஷ்மராக நடித்தார். நான் துரியோதனனாக நடித்தேன். சகுனியாக சிவா சேஷப்பன் நடித்தார். பொன்னியின் செல்வன் நாடகத்தில் சுந்தர சோழனாக நடித்தேன். இந்திரா பார்த்தசாரதியின் ஸ்ரீ ராமானுஜர் நாடகத்தில் ராமானுஜராக நடித்தேன். பாரதியாரின் பேத்தி எழுதிய 'அக்கினிக் குஞ்சு' நாடகத்தில் பாரதியாராக நடித்தேன். பாலாஜி சீனிவாசனின் நாடகத்தில் கணிதமேதை ராமானுஜமாக நடித்தேன்.

இவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். மக்களிடமிருந்து மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த அனுபவங்கள், பின்னாளில் நான் ஆடியோ புத்தகங்கள் தயாரிக்கும் போது பலவகைக் குரல்கள் கொடுக்க உதவியது. 12 நாடகங்களில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

இயக்குநர் பாலசந்தர் வாழ்த்துகிறார்



கே: பாஞ்சாலி சபதம் நாடகத்தில் பல பாத்திரங்கள் இருக்க, நீங்கள் துரியோதனன் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
ப: நான் உயரமாக இருப்பேன். தமிழை நன்கு உச்சரிப்பேன். டயலாக் டெலிவரியைச் சிறப்பாகச் செய்வேன். துரியோதனன் பாத்திரத்திற்கு நிறைய வசனம் இருந்ததும், அது ஒரு முக்கியமான பாத்திரம் என்பதும் தான் காரணம். மற்றபடி துரியோதனன் பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கக் குறிப்பான காரணம் என்று எதுவுமில்லை. சொல்லப் போனால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க நிறையப் போட்டி இருந்தது. என் வசன உச்சரிப்பால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மற்றபடி நான் பள்ளி நாட்களில் பாஞ்சாலி சபதம் நாடகத்தில் தர்மராக நடித்திருக்கிறேன்.

கே: ஆஹா... உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: அதற்குக் காரணம் சிறு வயதில் பள்ளி மனப்பாடப் போட்டிகளில் கலந்துகொண்டது தான். அப்போது பெற்ற பயிற்சிகள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவின. அதுபோல என் தந்தையார் சொன்ன குட்டிக் குட்டி சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் இன்றைக்கும் நினைவில் உள்ளன. தொடர் பயிற்சிதான் நினைவாற்றலுக்கு முக்கியக் காரணம். இப்போதும் என்னால் பாஞ்சாலி சபத நாடகத்தில் துரியோதனன் பேசிய வசனங்களைப் பேச முடியும். (பேசிக் காண்பிக்கிறார்)

கல்கியின் பொன்னியின் செல்வன்
நண்பர் ஒருவர், 'கல்கியின் பொன்னியின் செல்வன்' நாவலை நீங்கள் படிக்கலாமே என்று சொன்னார். நானும் மெல்ல மெல்ல ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து வலையேற்றினேன். அதற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

நான் 2009-ல் விளையாட்டாகப் படிக்க ஆரம்பித்தது. அது இந்த அளவுக்குப் பிரபலமாகும் என்பது அப்போது தெரியாது. எல்லாப் பாத்திரங்களுக்கும் - கிட்டத்தட்ட 40 பாத்திரங்கள் - நானே குரல் கொடுத்தேன். வர்ணனைகளுக்கு ஏற்ற மாதிரியும் பாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரியும் குரலில் வித்தியாசம் காண்பித்து, ஏற்ற இறக்கத்துடன் படித்தேன். வேலைப்பளு, குடும்பம், குழந்தைகள், அலுவலகப் பயணங்கள் என்று எல்லாவற்றையும் சமாளித்து நேரம் ஒதுக்கிப் படித்தேன். எனது முதல் புத்தகம் என்று அதைச் சொல்லலாம். சுமார் 75 மணி நேரம் அது கேட்கக் கிடைக்கிறது. 1.7 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ் spotify தளத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாஸா என்ற பெயரில் அதனைக் கேட்கலாம். Storytel, I tunes, Apple Music, Google Play, Aurality Audio எனப் பல தளங்களில் கிடைக்கிறது.

பொன்னியின் செல்வனை, முதன் முதலாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் கேட்கும்படி ஒலிப்புத்தகமாக வெளியிட்டது நான்தான். இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', புதுமைப்பித்தன், லா.ச. ராமாமிர்தம், ராஜம் கிருஷ்ணன், ஆதவன் என்று பலரது நூல்களை ஒலிப்புத்தகம் ஆக்கியிருக்கிறேன்.
- ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா


கே: அருமை. தமிழ் ஆடியோபுக்ஸ்.காம் தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் எண்ணம் வந்தது?
ப: தமிழ் ஆடியோபுக்ஸ்.காம் - இதை 2009ல் ஆரம்பித்தேன். 2005ல் வானொலி நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கும்போது அவ்வப்போது சில கதைகளை வாசிப்பதுண்டு. அப்படித்தான் ஆரம்பித்தது தமிழ் ஆடியோ புக்ஸ்.காம் ஆரம்பத்தில் அது எனக்கு ஒரு ஹாபியாகத்தான் இருந்தது. அலுவலக வேலை முடித்து வந்ததும் நேரம் கிடைத்தால் நாடகம், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இது போன்று குரல் பதிவு பற்றிய சிந்தனை வந்தது. வார இறுதி விடுமுறை நாட்களில் கதைகளைப் படித்து ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

நண்பர்கள் அதனை ஊக்குவித்தனர். 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறேன். உ.வே.சா., அவரது காலகட்டத்தில் ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்துப் புத்தகங்களாக வெளியிட்டார். டாக்டர் கல்யாணசுந்தரம், 'ப்ராஜெக்ட் மதுரை' திட்டத்திற்காக, தன்னார்வக் குழுக்களைக் கொண்டு, நூற்றுக்கணக்கான புத்தகங்களை டிஜிடல் வடிவில் கிடைக்கச் செய்தார். இதெல்லாம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். ஏன் நம்முடைய டெக்னாலஜியைப் பயன்படுத்தி தமிழுக்கு ஏதாவது செய்யக் கூடாது என்று தோன்றியது. இட்ஸ் டிஃப்.காம் வலைத்தளத்தில், அதன் விரிவாக, தமிழுக்காக தமிழ் ஆடியோ புக்ஸ்.காம் என்பதனைத் தொடங்கினேன். அப்படி ஆரம்பித்தது இன்றைக்கு ஒரு பெரிய நெட்வொர்க் ஆக வளர்ந்து இருக்கிறது.

தாயார் பானுமதி மற்றும் பேரா. ஞானசம்பந்தனுடன்



கே: இதற்கான புத்தகங்களை எப்படி நீங்கள் தேர்ந்தேடுக்கிறீர்கள்?
ப: தமிழில் நிறையப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. டிஜிடல் யுகம் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இவற்றைப் பலரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இவற்றை நான் மட்டுமே படித்தால் முடியாது. அதனால் இதனை நண்பர்கள் பலரும் வாசித்து அனுப்புகின்றனர். நான் அந்த முயற்சியை ஒருங்கிணைக்கிறேன். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களைப் படிப்பது, ஆசிரியரின் அனுமதி பெற்றுப் படிப்பது என்ற நோக்கத்தில் நான் செயலாற்றி வருகின்றேன். இதனை வாசிப்பவர்களுக்கு லகர, ளகர, ழகர உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக வைத்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் என் குழுவில் இருக்கின்றனர்.

கட்டுரை அல்லது கதையை ஆண் குரலில் சொன்னால் நன்றாக இருக்குமா, பெண் குரலில் சொன்னால் நன்றாக இருக்குமா என்றெல்லாம் பரிசீலித்து ஆசிரியர்களிடம் உரையாடி அனுமதி பெற்றுச் செய்கிறேன். அதனை வாசிப்பவர்களுக்கும் வெறுமனே வாசிப்பதற்கும், ஒலிநூலுக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, பயிற்சி அளிக்கிறேன். உச்சரிப்புச் சுத்தம், நாடகத்தன்மை எல்லாம் இருக்க வேண்டும். சென்னை, லண்டன், சிங்கப்பூரில் இருந்தெல்லாம் இந்தத் தளத்திற்கு வந்து வாசிக்கிறார்கள். அவர்களில் இல்லத்தரசிகள் உண்டு. கல்லூரி செல்பவர்கள் உண்டு. முனைவர் பட்ட மாணவியர் உண்டு. பலதரப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் இதில் பங்கெடுக்கிறார்கள்.

தென்றலும் நானும்
தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் தென்றலுக்கு என்னை எழுதச் சொன்னார். அதற்காக 'டயலாக்ஸ்' என்ற தலைப்பைத் தந்து பக்கங்கள் ஒதுக்கினார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக அது. அப்புறம் 'போட்டோ கார்னர்' செய்தேன். பின்னர் ஒரு பக்கக் கதை. ஒரு சில கதைகள் எழுதியிருக்கிறேன். புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு தென்றல் ஒரு வரப்பிரசாதம். தென்றலின் ஆசிரியரான அசோக் சுப்ரமணியன் எனது நன்றிக்குரியவர். அவருடன் இணைந்து ஸ்டான்ஃபோர்டு ரேடியோவில் 'தமிழ் இசைப் பயணம்' என்ற நிகழ்ச்சியைச் செய்திருக்கிறேன்.

தென்றலில் வந்த மகான்கள் பற்றிய ஆன்மீகக் கட்டுரைகளை சி.கே.யின் அனுமதி பெற்று ஒலி வடிவில் அளித்தேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு. தென்றல் எடிட்டர் மதுரபாரதி அவர்களிடமிருந்து நாடகம் குறித்து நிறையக் கற்றுக் கொண்டேன். பாகீரதி சேஷப்பன் அவர்களுடனும் நல்ல அறிமுகம் உண்டு. நான் வானொலி நிகழ்ச்சிகள் அளிக்கும்போது அவர் நிறையத் தயாரித்துக் கொடுத்தார். பாரதியாராக நடித்தது, எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜராக நடித்தது, பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் ஆக நடித்தது இவையெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.
- ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா


கே: ஒலிப் புத்தகங்களின் இன்றைய தேவை மற்றும் எதிர்காலம் குறித்துச் சொல்லுங்களேன்!
ப: கோவிட் சூழலில் பலருக்கும் வாழ்வாதார உதவியாக இந்த ஆடியோ புத்தகங்களை வாசிப்பது இருந்தது. வேலை இழந்த பலர் புத்தக வாசிப்புக்கு வந்து வாசித்து அதற்கான சன்மானம் பெற்றனர். இப்படிப் பலருக்கும் இந்த ஒலிப்புத்தகம் பொருளாதார ரீதியாகவும் மிக உதவியது. ஆசிரியர்களுக்கு நான் 'ராயல்டி' கொடுக்கிறேன்.

இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. சேவை நோக்கத்துடன் செய்கிறேன். நான் 2009-ல் இதனைத் தொடங்கும்போது இதெல்லாம் அவ்வளவு பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. தற்போது பலராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது. கண் பார்வையற்றவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உடைய முதியோருக்கும் இந்த ஒலி நூல்கள் வரப்பிரசாதம். தமிழ் புரியும்; ஆனால் படிக்கத் தெரியாது என்பவர்களுக்கும் இந்த ஆடியோ புத்தகங்கள் பயன் தருகின்றன. இதன் எதிர்காலம் மிக மிகச் சிறப்பாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். இன்றைக்கு எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் மக்கள் ஆடியோ புக்கைக் கேட்கிறார்கள். வாக்கிங் போகும்போது, கார் ஓட்டும்போது, வீட்டு வேலை செய்யும்போது, தூங்குமுன்பு என்று பலரும் பல நேரங்களில் ஒலிநூல்களைக் கேட்கிறார்கள். அந்த அளவு இன்று ரசனை வளர்ந்துள்ளது. இனி இன்னமும் வளரும்.

இதற்காக Aurality Audio என்னும் Audio Platform Release செய்யப் போகிறேன். இதில் பாட்காஸ்டிங், ஒலிநூல், மின்னூல் எல்லாவற்றையும் தமிழுடன், பாரதப் பாரம்பரியம், இந்திய இலக்கியங்கள், பாரத கலாசாரத்துடன் சேர்த்துச் செயல்படுத்தத் திட்டம் உள்ளது. முதலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். அடுத்தடுத்துப் பிற மொழிகளில் தொடர உத்தேசம்.

மனைவி ஜானகி மற்றும் பேரா. ஞானசம்பந்தனுடன்



கே: அடடா, பெரிய திட்டம்தான். உங்கள் 'ஆடியோ புக்ஸ்.காம்' தளத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன?
ப: அம்புலிமாமா கதைகள், திருக்குறள் விளக்கங்கள், 108 திவ்ய தேசங்கள், சிவ ஸ்தலங்கள் என்று பல தலைப்புகளிலும் இலக்கியம், க்ரைம் கதைகள், ஆன்மீகம் என்றும் பல பொக்கிஷங்களைக் குரல் வடிவில் சேர்த்திருக்கிறோம். ஆடியோ மூலம் நிர்வாகவியல் பற்றிச் சொல்வதில் எனக்கு விருப்பம் அதிகம். மகான்கள், ஞானியர்களின் வாழ்க்கையை, சத் வாக்கியங்களைச் சொல்ல விருப்பம் அதிகம். 24 மணி நேரப் புத்தகமும் வெளியிட்டுள்ளேன். 24 செகண்டில் ஷார்ட்ஸும் வெளியிட்டுள்ளேன்.

யூட்யூபில் 7800 பேருக்கு மேல் எனக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். கதைகளோடு நிறைய ஆன்மீக விஷயங்களை, பேட்டிகளை அதில் பகிர்ந்து வருகிறோம். சமீபத்தில் அனந்தபத்மநாப சுவாமி என்னும் ஏ.பி.என். சுவாமி, துஷ்யந்த் ஸ்ரீதர், குடந்தை வெங்கடேஷ் போன்ற உபன்யாசகர்களின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறோம். சென்னை அஷ்டலக்ஷ்மி கோவிலில் தலைமைக் குருக்களாக இருக்கும் ஸ்ரீதரன், கோயிலில் ஆகம முறைப்படி எப்படிப் பூஜை செய்வது என்பதை ஜெயாக்கிய சம்ஹிதை மூலமாகப் பாடமாக நடத்தி வருகிறார். இதனை ஏ.பி.என். சுவாமிகள் ஒருங்கிணைத்தார்.

சமீபத்தில் எழுத்தாளர் திவாகர் அவர்களின் நூல்களை ஒலிப்புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். ஜெயராமன் ரகுநாதன் அவர்களின் டாக்டர் வைகுண்டம் கதைகள், கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் வம்சவிருத்தி நாவல் என்று பல நூல்களை ஒலிநூல் ஆக்கியுள்ளோம்.

வாழ்க்கையில் ஒன்று நாம் சுயமாகக் கற்றுக் கொள்வது. இன்னொன்று அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்து நாம் கற்பது. பெரியவர்கள் வாயிலாகக் கற்பது. பொதுவாக, அன்றாட வாழ்வில் நாம் படிப்பினைகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். 'பாசிடிவ் திங்க்கிங்' வேண்டும். வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் இம்மாதிரி பாட்காஸ்டிங் ஆகவோ, ஆடியோ புக் ஆகவோ பகிர்ந்துகொள்ள வேண்டும். அது வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் உதவும். இது தமிழில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் சாத்தியமாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நூலாசிரியர்களுக்கு வேண்டுகோள்
உங்கள் எழுத்தை ஒலிநூலாக்க விருப்பமா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி இதோ: tamilaudiobooks@gmail.com
- ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா


கே: உங்கள் ஒலிநூல் தளத்துக்குக் கிடைத்த வரவேற்பு, விமர்சனங்கள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: ஆடியோ புத்தகங்களுக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. மிகவும் நெகிழ வைக்கக் கூடிய கருத்துக்கள் உண்டு. "எங்க அம்மாவுக்கு நான் புடவை வாங்கிக் கொடுக்கலாம். நகை வாங்கிக் கொடுக்கலாம். நான் உங்க ஆடியோ புக்கை வாங்கிக் கொடுத்தேன். ஒரு ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு அவர் கேட்கக் கேட்கக் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இதைவிட வேறு என்ன சார் வேண்டும்?" என்று ஒருவர் என்னிடம் கேட்டார். இன்னொருவர், "சார் கோவிட் 19 காலத்தில் வாழ்க்கையே ஜெயில் மாதிரி இருந்தது. மன அழுத்தத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்போதெல்லாம் நான் உங்கள் புத்தகத்தைத் தான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது மிகவும் ஆறுதலாக இருந்தது" என்றார்.

இன்னொருவர், "உங்கள் பொன்னியின் செல்வன் ஆடியோ கேட்டதும் என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நான் சிறுவனாக இருக்கையில் அம்மா பொன்னியின் செல்வன் கதை சொல்வார்கள். அப்போது எனக்கு அதிகம் தெரியாது, புரியாது. ஆனால், இப்போது உங்கள் குரலில் அந்தக் கதைகளையும் விளக்கத்தையும் கேட்கும்போது எனக்கு என் அம்மா ஞாபகம் வருகிறது." என்றார். இன்னொருவர், "எப்படி சார் குரல் கொடுத்தீங்க. ஆழ்வார்க்கடியான் வாய்ஸ் பெஸ்ட் வாய்ஸ்" என்றார்."வானதிக்கு எப்படிப் பேசினீங்க, ஆணுக்கு ஒரு குரல், பெண்ணுக்கு ஒரு குரல்.. குழைவு, நளினம், கம்பீரம் என்று மாறிப் பேசினது ஆச்சரியம்" என்றார். இப்படிப் பல்வேறு பாராட்டுக்கள், கருத்துக்கள், விமர்சனங்கள். அவை இன்னமும் சிறப்பாக எப்படிச் செய்யலாம் என்று உத்வேகம் அளிப்பவையாக உள்ளன.

கே: உங்கள் பணிகளினூடே இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது?
ப: காரணம் என்னுடைய தனிப்பட்ட ஆர்வம்தான். வார இறுதி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பேன். 15 நிமிடம், அரைமணி நேரம் கிடைத்தால் ஒரு கதையை வாசித்து விடுவேன். நாம் ஒன்றை ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு செய்ய முன்வந்தால், அதற்கான நேரம் தானாகக் கிடைக்கும். அப்படித்தான் 100 புத்தகங்களை இதுவரை வாசித்துள்ளேன். 1000 புத்தகங்கள் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். ஆனால், podcasting என்று பார்த்தால் ஆயிரத்திற்கு மேல் செய்தாகி விட்டது.



கே: உங்கள் முயற்சிகளுக்குத் துணையாக இருந்தவர்கள் குறித்து..
ப: முதலில் எனது குடும்பம். எனது மனைவி குழந்தைகளுக்குக் கண்டிப்பாக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஆஃபீஸிலிருந்து வருவேன். வந்ததும் இன்று என்ன கதை படிக்கலாம் என்று படிக்கப் போய்விடுவேன். நேரம் போவதே தெரியாது. மனைவிதான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள். அதுபோல என் குழந்தைகளும் ஆதரவாக இருப்பார்கள். அம்மாவும் எனது பணிகளுக்கு உறுதுணை. உறவினர்கள், நண்பர்கள் என்று நிறையப் பேர் எனக்குத் துணை நின்றார்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னுடன் இந்தப் பணியைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழுக்குச் சேவை செய்வது, தமிழ் மூலம் சேவை செய்வது என்பது ஊர்கூடித் தேர் இழுப்பது போன்றது. இதற்குப் பலருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். நமது இலக்கியங்களை, கலை, கலாசாரப் பண்பாடுகளை, வரலாறுகளை, ஆன்மீகப் பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செய்வதில் எனக்கு மனநிறைவு.

ஆடியோ தளங்கள்
தமிழ் மின்னூல் தளம்: tamilaudiobooks.com
தமிழ் மின்னூல் யூட்யூப்: Youtube
தமிழ் மின்னூல் ஃபேஸ்புக் பக்கம்: Facebook

மின்னஞ்சல் முகவரி: itsdiff@gmail.com


கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: மின்னூல் ஒன்று தயார் செய்து கொண்டிருக்கிறோம். அரிதான புத்தகங்களைக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. வீடியோ செய்யும் ஆசையும் இருக்கிறது. Motivational speech எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை வருங்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க எண்ணம் இருக்கிறது. இந்தியர்களின் தொன்மை, கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டை வரும் தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறேன்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com