ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி
மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை; ராமர், ஆத்மாராமர் என்று அறியப்படுகிறார். அப்படியிருக்க, ராமருக்கு உரிய அரியாசனத்தை பரதன் எப்படிப் பறித்துக்கொள்ள முடியும்? ராமர் நாட்டைத் துறக்க, அந்தப் பிரிவுத் துயரால் மனமுடைந்து தசரதர் உயிர்நீத்த சமயத்தில் அவனும் சத்ருக்னனும் கேகய நாட்டில் இருந்தனர். அவனுக்குச் செய்தி அனுப்பப்பட்டது. நகரின்மீது துயரப் போர்வையைப் போர்த்திய இந்த இரட்டைத் துயரங்களை அறியாமல் அவன் அரண்மனைக்குள் நுழைந்த போது, அங்கே ஏதோ பெருஞ்சோகம் கவிந்திருப்பதை உணர்ந்தான். அரசனில்லாமல் நாடு இடர்ப்படுகிறது என்பதால் குலகுரு வசிஷ்டர் பரதனை அரியணை ஏறக் கூறினார்.

"நான் பிரார்த்திப்பவரும் எனது இடைவிடாத துதிகளை ஏற்பவருமான தெய்வத்திடம் செல்ல அனுமதியுங்கள்" என்று பரதன் கேட்டுக்கொண்டான். அது தந்தையின் ஆணை, குருவின் ஆலோசனை என்று வசிஷ்டர் கூறினார். "என் பெற்றோர், மக்கள், குரு மற்றும் அயோத்தியில் உள்ள அனைவரும் என்மீது கொண்டுள்ள மிகுந்த வெறுப்புக்கு இதுவே அடையாளம், இல்லையென்றால் இப்படி ஒரு கொடுமையான பாவத்தைச் செய் என்று என்னைச் சொல்ல மாட்டார்கள்" என்றான் பரதன். வசிஷ்டர்முன் கைகூப்பி நின்றுகொண்டு "என் தந்தையைக் கொன்ற, என் அன்னையரை விதவைகளாக்கிய, உயிரினும் மேலான என் அன்புக்குரிய அண்ணனை அவருடைய பேரன்புக்குரிய அரசியாரோடு, அரக்கர்கள் நிரம்பிய காட்டுக்கு அனுப்பிய, இறுதியாக, என் தாயாருக்கு அழிக்க முடியாத களங்கம் ஏற்படுத்திய இந்த நாட்டினை ஆளும் ராஜ்ய பாரத்தை என்மீது சுமத்துகிறீர்களே, இது தர்மமா? இது நியாயமா? ராமன் அரசாளுகின்ற எனது இதயமே எனது சாம்ராஜ்யம், என் இதயமோ அவனுடைய மஹிமைக்கு மிகச்சிறியது" என்று கூறினான். ராமன்மீது கொண்ட அன்பினால் நிரம்பியவன் என்பதை பரதன் என்கிற பெயரே காண்பிக்கிறது. ('ப' என்றால் பகவான், அதாவது ராமர்; 'ரத' என்றால் மகிழ்கிறவன், விரும்புகிறவன், பற்றுக் கொண்டவன்).

பரதனைப் போலவே உங்களுக்குள்ளும் பகவான் மீதான அன்பு தழைக்கட்டும். ஓர் அரியாசனத்தையே ஒதுக்கித் தள்ளிய அந்த பக்தி உங்களுக்குள் செழிக்கட்டும். அப்போது நீங்கள் உங்கள் நாட்டுக்கு, கலாச்சாரத்துக்கு, உங்கள் சமுதாயத்துக்கு, உங்கள் மதத்துக்கு, உங்கள் சமூகத்துக்கு எல்லாவற்றுக்கும் மிகுந்த பயனுள்ளவர் ஆகமுடியும். இல்லையென்றால், இந்த சத்சங்கத்திற்கு வரவும், இந்த ஆன்மீகப் பேருரையைக் கேட்கவும், ஆன்மீக நூல்களை வாசிக்கவும் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரே அன்றி வேறில்லை.

நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2022

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com