தென்றல் பேசுகிறது...
இந்தியா என்றாலே மந்திரவாதிகள், பாம்புகள், எலும்பு தெரியும் பிச்சைக்காரர்கள் என்று உலகம் நினைத்த காலம் உண்டு. அது மாறிவிட்டது. "மேற்கத்திய நாடுகள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இனியும் நடவாது" என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறது இன்றைய பாரதம். 2022 டிசம்பர் 1ஆம் தேதியன்று G20 நாடுகளுக்குத் தலைமை ஏற்று 'வசுதைவ குடும்பகம்' (ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்) என்ற பாரதப் பாரம்பரியத்தை உலகுக்கோர் இலக்காகக் கொடுத்த நாள் அது. G20 நாட்டுத் தலைவர்களின் 18-வது உச்சி மாநாடு இவ்வாண்டு செப்டம்பர் 9, 10 நாட்களில் புது தில்லியில் நடக்க உள்ளது. 'தற்சார்பு கொண்ட இந்தியா' (ஆத்மநிர்பர் பாரத்) இப்படிப் புத்தெழுச்சி காண்பதற்கு, தன்னலமற்ற, தேசத்தையும் தெய்வத்தையும் இரண்டு கண்களாகப் போற்றுகிற, நாட்டு மக்களின் நலனையே கருதி ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் உழைக்கிற தன்னேரிலாத் தலைவரே காரணம். உலக நாடுகள் அவரை வியந்து பார்க்கின்றன. உலகத் தலைவர்கள் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார். பெயரைச் சொல்லவும் வேண்டுமோ!

★★★★★


கற்றறிந்தோருக்கும் உழைக்க அஞ்சாதோருக்கும் புத்தாக்க ஆர்வலருக்கும் கனவுபூமியாக இருந்து வந்தது அமெரிக்கா. இன்றைக்கு? எந்த முன்னேற்றத்தையும் தடுக்கவென்றே ஒரு கூட்டம்! போராட்டங்கள், நீதி மன்றங்கள், ஊடகங்கள், தன்னார்வக் குழுக்கள், அரசியல், லாபியிஸ்ட் எனப்படும் காசுக்குப் பேரம்பேசும் நபர்கள் என எல்லா வழிகளையும் பயன்படுத்தி முட்டுக்கட்டை போடுவதில் இவர்கள் வல்லவர்கள். "இன்றைய அமெரிக்கா ஒரு 'build nothing' தேசம்" என்கிறார் நோவா ஸ்மித் என்ற பொருளாதார நிபுணர். சுற்றுச்சூழல் சட்டங்களைப் பயன்படுத்தி பெர்க்கலியில் மாணவர்களுக்கான விடுதிகளைக் கட்டவிடாமல் செய்ததை இதற்கு உதாரணமாகச் சொல்கிறார். நாம் வளர்ச்சியை ஆதரிக்கப் போகிறோமா? போராளி என்ற போர்வையில் உலவும் கருங்காலிகளையா? இதுதான் நம்முன் இருக்கும் கேள்வி.

★★★★★


சைவ சித்தாந்தத்திலும் தமிழிலும் தேர்ந்த முனைவர் மஞ்சுளா அவர்களின் நேர்காணல் அமிழ்தனையது. ஸ்ரீ மா ஆனந்தமயி, ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், வாணி ஜெயராம் குறித்த சொற்சித்திரங்கள் மகளிர் இதழில் பதித்த மாணிக்கங்கள். மனிதநேயத்தைப் படம் பிடிக்கிறது 'ஒரு மழைநேர இரவில்' சிறுகதை. இந்த இதழில் இன்னும் உங்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் காத்திருக்கின்றன.

வாசகர்களுக்கு யுகாதி மற்றும் ஸ்ரீராம நவமி வாழ்த்துகள்!

தென்றல்
மார்ச் 2023

© TamilOnline.com