மிச்சிகனில் பொங்கல் விழா
ஜனவரி 22, 2005 அன்று டிராய் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவைக் காண்பதற்குத் தொடர்ந்த பனிப்புயலின் ஊடே, ஓரடி உயரப் பனிப்பொதி வழியே நடக்க வேண்டியிருந்தது. வந்தோரின் உற்சாகம் இவற்றை மீறியதாக இருந்தது.

காலையிலேயே இறைவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சுனாமியில் பலியானவர்களுக்காகவும், இசைமேதை எம்.எஸ்.ஸ¤க்காகவும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாள் முழுதுமான இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகளை அங்கத்தினர் உற்சாகத்துடன் வழங்கினர். மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் இசை மற்றும் நடன மாணவர்கள் வழங்கிய 'இசை முன்னுரை' சுவையானது. வித்யா கிருஷ்ணமூர்த்தியின் லாஸ்யா நடனப் பள்ளி வழங்கிய 'வண்ணங்கள்' நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடி மற்றும் அசோக சக்கரத்துடனான நடனம் மனதைக் கவர்ந்தது.

ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களுக்கு ரூபா ஷியாமசுந்தர் குழுவினர் அபிநயம் பிடித்தது, பொங்கலுக்கு முந்தைய மார்கழி மாதத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. பிரபா ராமமூர்த்தியின் பயிற்றலில் குழந்தைகளின் கோலாட்டம் கண்ணுக்கு அழகு.

நடன அமைப்பாளர் ராதிகா ஆசார்யா கற்பனையோடு அமைத்திருந்த மகரசங்கராந்தி நடனத்தால் தமிழர்களைப் பாஞ்சாலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார். இவை தவிர நாட்டுப்புற நடங்கள், வாத்திய இசை, செவ்விசை-நாட்டிசை-ஹிப்ஹாப் கலந்த கூட்டிசை ஆகியவையும் இருந்தன.

'ஆட்டோகிராப்' என்ற நீளமான ஓரங்க நாடகம் ஒரு தமிழ்ப்பெண்ணின் இளவயது நினைவுகளை மனக்கண்ணில் பார்ப்பதாக அமைந்திருந்தது. நாட்டிய மயூரி, நித்ய ஸ்வர்ண பூஷண சுதா சந்திரசேகர், நாட்டிய அமைப்பாளர் சந்தியா ஆத்மகுரி ஆகியோ ரின் மாணவர்களும் நடன உருப்படிகள் வழங்கினர்.

அரவிந்த் கே. ரமேஷ்

© TamilOnline.com