தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன, நிஜமாகவே துயரத்தில் இருந்தார். முகம் வீங்கி வெளிறி இருந்தது. ருக்மிணி, சத்யபாமா மற்றும் பிற ராணிமார் பலவகை மருத்துகளையும் வலி நிவாரணிகளையும் எடுத்துக்கொண்டு நடமாடினர். எதுவுமே பலன் தரவில்லை. இறுதியில் நாரதரை அணுகினர். அவர் கிருஷ்ணர் படுத்திருந்த அறைக்குள் சென்று, எந்த மருந்து குணப்படுத்தும் என்று அவரையே கேட்டார்.

கிருஷ்ணர் கொண்டுவரச் சொன்ன மருந்து எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உண்மையான (தன்னலமில்லாத) பக்தன் ஒருவனின் பாதத்திலுள்ள புழுதியைக் (அடிப்பொடியை) கொண்டு வரும்படிக் கூறினார். ஒரு கணத்தில் நாரதர் சில பிரபலமான பக்தர்களின் முன்னே தோன்றினார். ஆனால், அவர்களோ தமது பாத தூளியைக் கடவுளுக்கு மருந்தாகக் கொடுப்பதா என்று அடக்கத்தோடு தயங்கினர்!

அதுவும்கூட ஒருவரை அகங்காரமே. நான் தாழ்ந்தவன், அற்பன், சிறியவன், பயனற்றவன், ஏழை, பாவி, கீழானவன் - இத்தகைய எண்ணங்கள் அகந்தையானவை. அகங்காரம் போய்விட்டால் நீ மேலாகவோ கீழாகவோ உணர்வதில்லை. யாருமே பிரபு கேட்ட புழுதியைக் கொடுக்கவில்லை. அவர்கள் தம்மை மிகவும் அற்பர்கள் எனக் கூறிக்கொண்டார்கள். பிறகு கிருஷ்ணர், “நீங்கள் பிருந்தாவனத்தில் வசிக்கும் கோபியரைப் போய்க் கேட்டீர்களா?” என்று நாரதரைக் கேட்டார். இதைக் கேட்டு ராணிமார் சிரித்தனர். “அவர்களுக்கு பக்தியைப் பற்றி என்ன தெரியும்?” என்று நாரதர்கூட ஏமாற்றத்துடன் கேட்டார். ஆனாலும் அவர் பிருந்தாவனத்துக்கு விரைந்தார்.

கிருஷ்ணருக்கு உடல்நலமில்லை, அவர்களின் பாததூளி அவருக்கு நிவாரணம் தரக்கூடும் என்று கேட்ட மாத்திரத்திலேயே அவர்கள் தமது கால்களை உதறி, புழுதியினால் நாரதரின் கையை நிரப்பிவிட்டார்கள். நாரதர் துவாரகைக்குத் திரும்பி வந்து பார்த்தால், தலைவலி போயிருந்தது. தன்னைத் தானே பழித்துக் கொள்வதும் அகங்காரம்தான். எல்லா பக்தர்களும் பிரபுவின் ஆணைக்குத் தாமதமின்றிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்பிப்பதற்கான ஐந்து நாள் நாடகம் அது.

(நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2022)

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com