பாலைவனச் சோலை (அத்தியாயம் - 2)
அன்றைய தினம் அருணுக்கு மிகவும் வேகமாகப் போனதுபோல இருந்தது. காலை வகுப்புகள் படபடவென்று சென்றன.

மதிய உணவு வேளை பட்டென்று வந்ததுபோல இருந்தது சாப்பிடும் போது நண்பர்களுடன் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினான். அவனது தோழி சாராவும் அருணோடு சேர்ந்து கொண்டு தனக்கு தெரிந்த புதிய விஷயங்களைப் பேசினாள்.

"டேய் சாம், லேடஸ்ட் ஸ்பேஸ் மிஷன் பத்தி உனக்குத் தெரியுமா?" சாரா, சாமைக் கேட்டாள். சாம் அதில் ஆர்வம் காட்டமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும்.

அருண் மெதுவாக சாராவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். சாம் பற்றி எல்லோருக்குமே தெரியும். அங்கிருந்த மற்ற நண்பர்கள் சாம் என்ன சொல்லப் போகிறான் என்று காத்திருந்தார்கள்.

"என்ன சாம், உனக்குகூடத் தெரியலேனா அப்புறம்..." சாரா வேண்டுமென்றே சீண்டினாள்.

சாம் ஒன்றும் பேசவில்லை. அவன் லபக் லபக் என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவன்தான் சாப்பாட்டு ராமன் ஆச்சே!

"ம்… என்ன கேட்ட சாரா?" சாம் வாயில் இருந்த சாப்பாட்டை மென்றுகொண்டே சாராவைப் பார்த்துக் கேட்டான். "Latest Space Missions? Well, Space-X or Blue Origin missions? Well, NASA is always there. China and India too. எதுபத்தித் தெரியணும் உனக்கு? உன் அளவுக்கு எனக்கு அவ்வளவு தெரியாது. இந்தியா இப்ப ஸ்பேஸ் தொழில்நுட்பத்துல எங்கயோ போயிடுச்சு."

அங்கே இருந்தவர்களுக்கு சாம் பேசியதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. அருணும் சாராவும் பிரமித்துப் போனார்கள், நம்ம சாமா இப்படி எல்லாம் பேசறான்னு!

"Dude, how do you know this?" சாரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "எப்படி, உனக்கு இதெல்லாம் தெரியும், சாம். வாவ்!"

சாம் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தான். சாராவுக்கு ஒருவிதமான பொறாமை தோன்றியது. அவளுக்குத் தன்னை மிஞ்சி யாருக்கும் அதிகம் விஷயம் தெரியாது என்று கர்வம் இருந்தது. அது அருணாக இருந்தால் கொஞ்சம் தாங்கிக் கொண்டிருப்பாள். சாம்… அதுவும்… சாம்! சாராவால் பொறுக்க முடியவில்லை. அவள் சாம் என்றால் மிகத் துச்சமாக நினைப்பாள், பொது அறிவு மற்றும் படிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில்.

மணி அடித்தது. எல்லோரும் வகுப்பு நோக்கிச் சென்றார்கள். "என்ன சாரா, சைலண்ட் ஆய்ட்ட? Are you upset?' அருண் கேட்டான்.

சாரா ஒன்றுமே பேசவில்லை. அருணும் சாராவும் மதிய வகுப்புகளுக்காக உள்ளே சென்றார்கள்.

மாலை பள்ளி முடிந்து மணி அடித்தது. சாராவும் அருணும் வகுப்பை விட்டு வெளியே வந்தார்கள். சாரா மௌனமாக இருந்தாள். சாதாரணமாக அவள் லொடலொட என்று பேசிக்கொண்டே இருப்பாள். "என்ன சாரா, உம்முன்னு இருக்க?" அருண் அக்கரையுடன் கேட்டான்.

சாரா ஒன்றும் சொல்லாமல் தோளைக் குலுக்கினாள். நடந்து பைக் நிறுத்துமிடம் பக்கம் வந்து சேர்ந்தார்கள். "சாரா, நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?" அருண் பட்டென்று கேட்டான். சாரா பதில் கொடுக்கும் முன், 'சாரா, நீ கொஞ்சம் புரிஞ்சுக்கணும். நீதான் எல்லா விஷயத்திலேயும் எக்ஸ்பர்ட்டா இருக்கணும்னு இல்லை. ஏன் நம்ம சாமுக்கு உன்னவிட எதோ ஒண்ணு கொஞ்சம் அதிகம் தெரிஞ்சா தப்பா என்ன? அதனாலதான நீ இப்படி உம்முன்னு இருக்க?"

சாரா வியப்போடு அருணைப் பார்த்தாள். "What do you mean, Arun? Are you saying I am a jerk?" சாரா கோபத்தோடு கேட்டாள்.

"Of course, you are. நீ சாம் ஒரு முட்டாள்னு நினைச்சிட்டு இருந்த. அவன் மட்டும் இல்ல, இன்னும் நிறைய பேரப் பத்தியும் உனக்கு அந்த நினைப்புதான். ஏன் மத்தவங்க முன்னேறக் கூடாதுன்னு நினைக்கிற? யாரும் எதையும் கத்துக்க முடியும். இது இன்டர்நெட் யுகம். அவ்வளவு free resources இருக்கு. முயன்றால் எதையும் சாதிக்கலாம். நீதான் பெரிய பிஸ்தாவா என்ன? Get over it, Sarah. It is for your good."

பதிலுக்குக் காத்திருக்காமல் அருண் பைக்கை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.

"என் அம்மாவோட இன்னிக்கு ஒரு important discussion இருக்கு. நாளைக்கு பாக்கலாம். Bye." அருண் நொடியில் காணாமல் போனான்.

★★★★★


வீட்டுவாசலில் அம்மாவின் கார் நிற்பதைப் பார்த்தான் அருண். அப்பாவின் வண்டியைக் காணவில்லை. அப்பா வீட்டுக்கு வர நேரமாகும் என்று தெரியும். பைக்கைப் பூட்டிவிட்டு வேகமாக வீட்டுக் கதவைத் தனது சாவியால் திறந்தான்.

"அம்மா, அம்மா, நான் வந்தாச்சு." வீட்டின் உள்ளே நுழைந்தவுடனே அம்மாவைத் தேடினான். ஒரு பதிலும் அவனுக்கு கிடைக்கவில்லை.

"அம்மா…அம்மா."

பக்கரூ அவன்மீது தாவியது. அதைச் சட்டை செய்யாமல் மாடிக்குப் படிகளில் தாண்டிக் குதித்துச் சென்றான். டமால் டமால் என்று அறைக் கதவுகளைத் திறந்தான். அம்மா எங்கும் தென்படவில்லை. பக்கரூவும் அவன் பின்னாலேயே வந்தது.

படிகளில் தடதடவென்று இறங்கினான். பின்புறக் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அங்கே ஓடினான். அங்கே கீதா தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். குதூகலத்தோடு அம்மாவிடம் ஓடினான்.

"அம்மா…அம்மா, செய்தித் தாள் பாத்தீங்களா இன்னிக்கு?" ஓடிவந்ததில் மூச்சு வாங்கியது. வீட்டுக்குள் ஓடி கையில் அன்றைய பேப்பரை எடுத்து வந்தான்.

"அருண் கண்ணா, கை கால் கழுவினியா?"

"அம்மா…இங்க பாருங்க" அவன் காண்பிக்க நினைத்த பக்கத்தைத் திறந்தான்.

"கை, கால் கழுவினியா?"

"செய்யறேன் மா. இதைப் பாருங்களேன்."

"அருண். கை கால் கழுவணும். அப்புறமா சாப்பாட்டுப் பாத்திரத்தைத் தேய்க்கப் போடு. பால் குடி. இன்னும் மேல சொல்லணுமா? வயசாகலே உனக்கு. போப்பா, போ. எதுக்கு அவசரம். நான் இங்கதானே இருக்கேன். எங்கேயும் ஓடிப்போயிட மாட்டேன் கவலைப்படாதே."

அம்மாவின் கண்டிப்பு அவனுக்கு நன்றாகத் தெரியும். அத்து மீறினால் வாலை ஓட்ட நறுக்கிவிடுவார். அருண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு முணுமுணுத்தபடி திரும்பிப் போனான். கீதா வேலையைத் தொடர்ந்தார்.

அரைமணி நேரம் போனது. கீதா தோட்ட வேலையை முடித்துவிட்டு மணி பார்த்தார். கை, கால் கழுவிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார். அருண் டைனிங் டேபிளில் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தான். அவனது காதில் ஹெட் ஃபோன் இருந்தது. அவன் கேட்டுக் கொண்டிருந்த பாட்டு கீதாவிற்கு கேட்டது. அவ்வளவு சத்தம்.

கீதாவின் வந்தது தெரிந்தவுடன் அருண் கைகள் இரண்டையும் தூக்கிக் காட்டினான். பின்னர், தன் கால்களையும் தூக்கிக் காட்டினான். பாத்திரம் கழுவுமிடத்தில் டிஃபன் பாக்ஸ் இருப்பதையும் சுட்டிக் காட்டினான். கீதாவிற்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மறுபக்கம் பாவமாக இருந்தது.

டைனிங் டேபிள் மேல் இருந்த அன்றைய செய்தித் தாளை எடுத்தார் கீதா. "எந்தப் பக்கம் கண்ணா?" அருணைப் பார்த்துக் கேட்டார்.

அவன் கை விரலால் '6' என்று காட்டினான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com