வள்ளிமலை முருகன் ஆலயம்
வள்ளிமலை, தமிழ்நாட்டில் காட்பாடி தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூர். வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பெண்ணை நதிக்கு அருகில் அமைந்துள்ள முருகன் தலமாகும்.

மலைக்கோயிலில் சுப்பிரமணியர், குடைவரை சன்னதியில், வள்ளி-தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் பிறந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினைமாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படும். வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் வள்ளி மலை என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார். அந்த மான் ஓர் அழகான பெண் குழந்தையை வள்ளிக் கொடி நடுவே ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவர் தலைவன் நம்பிராஜன், அந்தக் குழந்தையை எடுத்து வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தான். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணியைச் செய்தாள். நாரத முனிவர் முருகனிடம் வள்ளியைப் பற்றிக் கூறினார். அதன்பிறகு முருகப்பெருமான் அவள் மனதைக் கவரச் சென்றார். பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக விநாயகப் பெருமானின் உதவியால், வள்ளியும் முருகப் பெருமானும் ஒன்றுபட்டனர்.

மலைப்பாதை நுழைவாயில் | தேர்த்திருவிழா



இக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக ஒரு சிலை உள்ளது. குழந்தை இல்லாத பக்தர்கள் இக்கோயிலில் வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. மூலவர், சுப்பிரமணியர். தலவிருட்சம்: வேங்கை. தீர்த்தம்: சரவணப் பொய்கை. கோவிலின் புராணப் பெயர்: சின்ன வள்ளிமலை.

வள்ளி பறவைகளை விரட்டுவதற்காகக் கையில் கவண்கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு நம்பிராஜன் வந்துவிட்டான். எனவே முருகன் வேங்கை மரமாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டாராம். இந்த மரமே இத்தலத்தில் தலவிருட்சமாக அமைந்துள்ளது.

சேஷாத்ரி சுவாமிகளின் வழிகாட்டுதல்படி, திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்த ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் இங்கு இருந்தபடிதான் தமது திருப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் இங்கு அடிக்கடி வருகை தந்ததோடு பல்வேறு திருப்பணிகளையும் செய்துள்ளார். 'திருப்புகழ் சாமியார்' என்று பக்தர்கள் அன்போடு அழைத்த ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அமைத்த திருப்புகழ் ஆசிரமமும் இங்கேதான் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தேரோட்டம் நான்கு நாட்கள் ரதவீதி மலைப்பாதையைச் சுற்றி நிலைக்கு வருகிறது. வழியில் வேடுவ மக்கள், தங்கள் வீட்டுப் பெண்ணான வள்ளிக்குச் சீதனமாக அரிசி, தானியம், வெல்லம், காய்கறிகள், தேங்காய், பழங்கள், ஆடைகள் அளிக்கின்றனர். விழாவின் கடைசி நாளான மாசி பௌர்ணமி அன்று வள்ளி திருமணம் நடக்கிறது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கிறது. அன்று முருகன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இங்கு வைகாசி விசாகம், கிருத்திகை விழாக்கள், கந்த சஷ்டி, சித்திரை பவுர்ணமி, விஜயதசமி, திருக்கார்த்திகை, தமிழ்ப் புத்தாண்டுப் படிவிழா போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வள்ளி தெய்வானையுடன் முருகன் அலங்காரக் கோலம்



அருணகிரியார் இத்தலத்தின் மீது 11 பாடல்கள் அருளியுள்ளார்.

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை ...... யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல ...... மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே


(வள்ளிமலை திருப்புகழ்)

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com