அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு
நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன் அளவு என்ன என்று பார்க்கலாம்.

குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்கேற்றது மொத்தம் 18 அக்குரோணி சைனியம். இதில் பதினோரு அக்குரோணி கௌரவர்களுடையது; ஏழு அக்குரோணி பாண்டவர்களுடையது. ஒவ்வொரு அக்குரோணிக்கும் ஒரு விகிதாசாரம் உண்டு. ஒரு அக்குரோணியின் மிகச்சிறிய அளவு என்பது யானை, தேர், குதிரை, காலாள் என்னும் அங்கங்களில் 1:1:3:5 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாள். இந்த சிறிய அலகு படிப்படியாகப் பெரிதாகும். ஒவ்வொரு நிலையிலும் ஒரு பெயரால் குறிப்பிடப்படும். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு அக்குரோணியில் மொத்தம் 21870 தேர்கள்; 21870 யானைகள்; 65610 குதிரைப் படையினர்; 1,09,350 காலாட்கள் இருப்பார்கள். விகிதாசாரத்தைக் கணக்கிட்டுச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இதைப் பதினொன்றால் பெருக்கினால் துரியோதனன் பக்கம் போரிட்ட படையின் அளவு; ஏழால் பெருக்கினால் பாண்டவர்களுடைய சைனியத்தின் அளவு. இது போரில் நேரடியாக ஈடுபடுபவர்களின் கணக்கு. போரில் ஈடுபடாத அல்லது உபரி ஆட்களின் கணக்கு தனி. ஒவ்வொரு தேருக்கும் ஒரு சாரதி, இரண்டு-மூன்று உபரி சாரதிகள்; ஒவ்வொரு யானைக்கும் ஒரு போர் வீரன், ஒரு மாவுத்தன்; ஒவ்வொரு தேரிலும் பூட்டப்பட்ட இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகள் என்று மீதக் கணக்கை எடுத்தால் யுத்தகளத்தில் இருந்தவர்களுடைய கணக்கு கற்பனைக்கே எட்டாததாக இருக்கும். இவ்வளவு பேருக்கும் மேல் Scouts, medicals, operatives என்று போரில் நேரடியாக ஈடுபடாத, ஆனால் போர்க்களத்தில் இருந்தவர்கள் என்று பல வகையானவர்களைப் பற்றி பாரதம் பேசுகிறது. இவ்வளவு பேர் நிற்பதோடு மட்டுமல்லாமல் அங்குமிங்கும் ஓடியும் சுழன்றும் போர்புரிய வேண்டுமென்பதால் இந்தச் சைனியங்கள் போரிடுவதற்கான இடப்பரப்பு எவ்வளவு தேவைப்பட்டிருக்கும்?

இது ஒரு அக்ஷௌஹினி அல்லது ஒரு அக்குரோணியின் கணக்கு. இதன்படி குருக்ஷேத்திரப் போர்க்களத்தின் அளவு, குறைந்தது, பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையிலுள்ள சுமார் 145 கிலோமீட்டராவது இருந்திருக்கவேண்டும். (இந்தத் தூரக் கணக்குக்கு இன்றைய கூகிள் தேடல் உதவாது. இடங்களின் பரப்புகள் மாறியபடி இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்)

பாரதம் சொல்லும் போர்க்களப் பரப்பின் கணக்கு மூச்சையே நிறுத்திவிடும். அதாவது, இந்தக் கணக்கு பேசப்படுவது பதினான்காம் நாள் யுத்தத்தின் தொடக்கத்தில். பதினெட்டு நாள் யுத்தத்தில் மூன்றில் இரண்டு பங்குக்குச் சற்று அதிகமாக முடிந்திருந்தது. இரண்டு பக்கத்திலும் பெருமளவில் வீரர்கள் மடிந்திருந்தனர்; யானை, குதிரை, தேர்கள் அழிந்திருந்தன.

பாதிக்குமேல் சைனியம் அழிபட்ட நிலையில் துரோணர் ஏற்படுத்திய வியூகத்தின் முதலடுக்கு சக்கர வியூகம். அதாவது வட்டமான அமைப்பு. இந்த அடுக்குக்கு உள்ளே ஒரு சகட வியூகம். அதாவது முளை அல்லது செருகுக் கட்டையைப் போன்ற வடிவம். முதலில் சக்கர வியூகத்தைப் பிளந்துகொண்டு உள்ளே பிரவேசித்தால் அடுத்ததாக சகட வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையும் பிளந்துவிடுகிறான் என்று வைத்துக்கொண்டால், இந்த இரண்டு அடுக்குகளுக்குள்ளே ஒரு 'ஸூசீ வ்யூகம்' அமைக்கப்பட்டிருக்கும். ஸூசி என்றால் ஊசி என்று பொருள். ஊசியைப் போல நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு file formation என்று கொண்டால், இந்த ஊசியின் காதுப் பகுதியில் ஒரு சிறிய, நாலுபக்கமும் பாதுகாக்கப்பட்ட வெற்றிடம் கிடைக்கிறது அல்லவா? அந்த வெற்றிடமான காதுப் பகுதிக்குள் ஜயத்ரதன் நிறுத்தப்பட்டிருந்தான். இந்த ஊசியின் கூர்முனையில் கிருதவர்மா. போரின் முடிவில் துரியோதனன் பக்கத்தில் உயிரோடு எஞ்சியிருந்த மூவரில் ஒருவன் இந்தக் கிருதவர்மா. ஊசியின் மறுபக்கத்தில் காம்போஜன், ஜலஸந்தன், துரியோதனன், கர்ணன் ஆகிய நால்வர் சூழ்ந்திருந்தனர். மிக வலுவான பாதுகாப்பு.

இப்போது இந்த சைனியம் நிறுத்தப்பட்டிருந்த பரப்பளவைப் பார்ப்போம். பாரதம் சொல்கிறது: "பாரத்வாஜராலே ஏற்படுத்தப்பட்ட சக்ரவியூகத்தை நடுவில் கொண்ட சகட வியூகமானது பின்பக்கத்தில் ஐந்து கவ்யூதி அகன்றும் பன்னிரண்டு கவ்யூதி நீண்டும் இருந்தது" (வியாச பாரதம், கும்பகோணம் பதிப்பு, தொகுதி 5, ஜயத்ரத வத பர்வம், அத். 87: பக். 290) இதில் தூரக் கணக்கில் குரோசம் என்று ஒரு அளவும் கவ்யூதி என்று ஒரு அளவும் சொல்லப்படுகின்றன. நம் காலக் கணக்கில் இதன் அளவு என்னவாக இருக்கும் என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் Bhandarkar Oriental Research Institute வெளியிட்டிருக்கும் Critical Edition கிடைத்தது. மிகவும் கறாரான பதிப்பு என்று பெயர்பெற்றது இது. பிபேக் தேப்ராய் (Bibek Debroy) இந்தப் பதிப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதைத் தவிர இந்தப் பதிப்புக்கு முன்னதாகவே வெளிவந்த கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பும் இருக்கிறது.

இவர்கள் இருவருமே இந்தக் கணக்கீட்டு விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள். இவர்கள் சொல்கின்ற கணக்கின்படி இரண்டு க்ரோசம் கொண்டது ஒரு கவ்யூதி. ஒரு க்ரோசம் என்பது இரண்டு மைல். அல்லது சுமாராக 3.22 கிலோமீட்டர். அப்படியானால் ஒரு கவ்யூதிக்கு நான்கு மைல். ஐந்து கவ்யூதி அகலம், பன்னிரண்டு கவ்யூதி நீளம் என்றால் இருபது மைல் அகலம்; நாற்பத்தெட்டு மைல் நீளம். தோராயமாக 960 சதுர மைல் அல்லது 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு! இது கௌரவ வீரர்கள் நிற்கும் போர்க்களத்தின் பரப்பளவு மட்டும். பாண்டவ வீரர்கள் நிற்கும் பரப்பளவையும் எடுத்துக்கொண்டால் இந்த பரப்பளவு இதில் பாதியாவது அதிகரிக்கும். ஆனால் நாம் அர்ஜுனனுக்கு எதிரே உள்ள களத்தை மட்டும்தான் கணக்கிடுகிறோம் என்பதால், நமக்கு வியாச பாரதம் கொடுக்கும் அளவுகளே போதுமானவை.

இவ்வளவு பெரிய பரப்பில் பின்னலாக அமைக்கப்பட்ட இரண்டு வியூகங்களில் ஆற்றலும் சீற்றமும் நிறைந்த யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாட்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டு உள்ளே பிரவேசித்தால் மூன்றாவது அடுக்கான ஊசி வியூகத்தில் ஒரு கூர்முனை; ஒரு காதுப் பகுதி. காதுப் பகுதியின் நடுவே, முற்ற முழுக்கப் பாதுகாக்கப்பட்ட நிலையில் ஜயத்ரதன். இருப்பதோ மாலையில் சூரிய அஸ்தமனம் வரையில் உள்ள காலம்தான். சூரியன் காலை ஆறு மணிக்கு உதித்து, மாலை ஆறு மணிக்கு மறைகிறது என்றால் பன்னிரண்டு மணி நேரம். காலை ஆறு மணிக்கே போரைத் தொடங்கிவிட முடியாது. காலைக் கடன்கள் போன்ற அவசியமான ஆரம்பத் தொல்லைகளுக்கு இரண்டு மணிநேரத்தை ஒதுக்கிவிட்டால் எஞ்சுவது பத்து மணி நேரம்தான். பன்னிரண்டு மணி நேரம் என்றே வைத்துக்கொண்டாலும், வைக்கோல் போரில் தொலைந்த ஊசியைத் தேடுவதைப்போல இத்தனை பெரிய பரப்பளவுள்ள போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ள கணக்கற்ற ரதிகன், அதிரதன், மஹாரதிகளை எல்லாம் போரிட்டுக் கடந்து வந்து, இரண்டு வியூகங்களை உடைத்து, மூன்றாவதாக உள்ள ஊசி வியூகத்தின் மையப் பகுதியிலுள்ள ஜயத்ரதனைப் போரிட்டுக் கொல்ல இந்த நேரம் போதுமா?

போதுமானதாக இருந்தது என்ற விடையை நாம் அறிவோம். ஆனால், இந்தப் பன்னிரண்டு மணிநேரத்தை அர்ஜுனன் எப்படி நிர்வகித்தான், அதற்குக் கண்ணன் எப்படி உதவினான்? பார்ப்போம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com