கவிதையும் செய்யுளும்
('கவிதையியல்' நூலில் இருந்து ஒரு பகுதி)

கவிதை வேறு, செய்யுள் வேறு, பாட்டு வேறு. ஒரு வகையை இன்னொன்றுடன் சேர்த்துக் குழப்பலாகாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இம் மூன்றிற்குமான வேறுபாடுகள் தெள்ளத் தெளிவாகத் தமிழில் குறிக்கப்படவில்லை அல்லது அறியப்படவில்லை. ஏறத்தாழ இம்மூன்றும் ஒன்றாகவே தமிழில் கருதப்பட்டு வந்தன. மேற்கத்திய இலக்கிய வகைகளின் வருகையும், இலக்கியக் கொள்கைகளின் வருகையும், இம் மூன்றையும் வேறுபடுத்தி நோக்குவதற்கான தேவையை அளித்தன. குறிப்பாகப் புதுக்கவிதையின் வருகை, உரைநடையிலும் கவிதை எழுதப்படலாம் என்பதையும், செய்யுள் அல்லது யாப்பு வடிவத்தில் எழுதப்பட்ட அனைத்தும் கவிதையல்ல என்பதையும் தெளிவாக்கியது. செய்யுளுக்கும் (verse) கவிதைக்குமான வேறுபாட்டினை இங்கே விதந்துகூற அவசியம் இல்லை. ஏற்கெனவே கைலாசபதி போன்றோர் அதனைத் தெளிவாகவே செய்துள்ளனர். கைலாசபதி, 'பாக்காவது கமுகம்பழம் பருப்பாவது துவரை' என்ற செய்யுளையும்,

அண்ணன் என்பவன் தம்பிக்கு மூத்தவன்
கண்ணன் என்பவன் கண்ணிரண் டுள்ளவன்
திண்ணை என்பது தெருவினில் உள்ளது
வெண்ணெய் என்பது பாலினில் உறைவதே.


என்ற செய்யுளையும் எடுத்துக்காட்டி, இவை கவிதையல்ல, யாப்பிலமைந்த செய்யுட்கள் என்று விளக்கியுள்ளார். (கவிதைக்கும் செய்யுளுக்குமான வேறுபாடுகளை நோக்கவேண்டுவோர், க. கைலாசபதியின் 'கவிதை நயம்' என்ற நூலைப் பார்க்கவும்). இவற்றை ஏற்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இன்று கவிதையாக ஏற்கப்படுகின்ற நூல்களிலும் செய்யுளாக உள்ள சிலவற்றை அவர் எடுத்துக் காட்டியிருப்பின் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு செய்வதில் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் இன்னொரு எல்லைக்குச் சென்றுவிட்டார். கம்பராமாயணத்திலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாக்களில், உணர்ச்சி பாவம் குறைந்தவற்றை (செய்யுட்களாக அவர் கருதியவற்றை) ஒதுக்கி, ஏறத்தாழ ஆயிரத்துச் சொச்சம் பாடல்கள்தான் கம்பர் எழுதியவை என்று பதிப்பித்துவிட்டார்.

இங்கு எட்கர் ஆலன்போவின் கருத்து ஓரளவு பயன்படும். ஆலன்போ சிறுகதையின் தந்தை மட்டுமல்ல. கவிதையிலும் வல்லுநர். 'தி ரேவன்' என்ற தமது கவிதையைத் தாம் எப்படி எழுதினார் என்பதை விவரிக்கும் கட்டுரையில் (The philosophy of composition) எந்தச் சிறந்த கவிஞனாயினும் நூறு அடிகளுக்குமேல் தொடர்ந்தாற்போல் கவிதையாகவே எழுத முடியாது என்கிறார். எனவே காப்பியங்களை, நீண்ட தொடர்நிலைச் செய்யுட்களை இயற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ள கவிஞர்கள், சிறந்த கவித்துவம் உடைய பாடல்களுக்கிடையே சற்றே கவித்துவம் குறைந்த, அல்லது கவித்துவமற்ற செய்யுட்களையும் இட்டு நிரப்பவேண்டி வருகிறது என்பது அவர் கருத்து.



கவிதையும் பாட்டும்
பாட்டின் விஷயம் வேறு. கவிதையையும் (poetry) பாட்டையும் (lyric, song) பிரித்துநோக்கவேண்டிய தேவை இன்று உள்ளது. இன்றுவரை நாம் கவிதைக்குச் சமமான சொல்லாகப் பாட்டு என்பதை வேறுவழியின்றிப் பயன்படுத்தி வருகிறோம். (நானும்கூட இந்நூலில், பல இடங்களில் கவிதை என்பதற்குச் சமமான சொல்லாகப் பா அல்லது பாட்டு என்பதைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆயினும் மிகச் சரியான கலைச்சொல் என நோக்கினால், பாட்டும் கவிதையும் ஒன்றல்ல). ஒரு கவிதையைக் குறிப்பிட்டு இது சங்கப்பாட்டு என்கிறோம். கம்பருடைய கவிதை ஒன்றை எடுத்துக்காட்டி, இது கம்பரின் பாடல் என்கிறோம். இம்மாதிரிப் பயன்பாட்டினால், கவிதை என்பதற்கும் செய்யுள் என்பதற்கும் வேறுபாடு துலக்கமாகத் தெளிவுபட்டதுபோல், கவிதைக்கும் பாட்டிற்குமான வேறுபாடு துலக்கமாக வெளிப்படத் தவறிவிட்டது.

இதன் விளைவு, தமிழில் பாட்டு எழுதுபவர்கள் யாவரும் குறிப்பாக ஜனரஞ்சகப் பாட்டு எழுதுபவர்கள் (pop-song writers) அனைவரும் தங்களைக் கவிஞர்கள் (கவிஞர்கள் என்றாலாவது பரவாயில்லை, கவியரசர்கள், கவிப்பேரரசுகள் என்றெல்லாம்) கருதிக்கொள்ளலானார்கள். தீவிரமான இலக்கிய மாணவர்களானாலும், சாதாரண மக்களானாலும், அவர்கள் எழுதும் பாடல்களையே கவிதை என்றும் கருதலானார்கள். கவிதை-பாட்டு என்பதன் வேறுபாட்டையே தமிழில் இந்நிலை அழித்துவிட்டது. இதனால் இந்தியஅளவிலேயே நோக்கினாலும் தமிழ்க்கவிதை தரங்குறைந்துவிட்டது.

மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநில மீதிதுபோற் பிறிதிலையே


என்பது பாரதியார் பாடிய பாட்டு. ஆனால் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்று அவர் எழுதியது கவிதை.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னைப்போல அவனைப்போல
எட்டுசாணு உயரமுள்ள மனுசங்கடா


என்பது, இன்குலாப் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியுறப் பாடிய பாட்டு. இதைக் கவிதை என்று சொல்லக்கூடாது.

ஆனால்,

இந்த உண்மையை உச்சரிக்க
எனது எழுதுகோல் முனைந்தபோது
அதில் தீப்பொறிகள் பறந்தன
ஒடுக்கப்பட்ட மானிடம்
அந்தத் தீக்கொழுந்துகளில்
தன் முகம் பார்த்துக்கொண்டது


என்று அவர் எழுதுவது கவிதை (மிகையுணர்ச்சி கொண்டதாக இருந்தாலும்).

கவிதைக்கும் பாட்டிற்கும் சில பொதுத்தன்மைகள் இருந்தாலும், இரண்டின் அடிப்படைக் குணங்களும், நோக்கங்களும் வேறானவை.

கவிதை-பாட்டு வேறுபாடுகள்
பாட்டு இசைக்கலையின் அடிப்படையிலானது. பாடப்படுவதே அதன் முதல் நோக்கம். இசை அல்லது ஸ்வர அமைப்புக்கேற்பவே சொற்கள் அதில் அமைகின்றன. ஆனால் கவிதையில் சொற்கள்தான் முக்கியம். இசைக்கென அல்லது பாடப்படுவதற்கெனக் கவிதை எழுதப்படுவதில்லை. சான்றாக, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கவிதையைக் காம்போதியில் பாடுவதா கரகரப்பிரியாவில் பாடுவதா என்ற சர்ச்சை முக்கியமல்ல. சில பாடகர்கள் திருக்குறளையும் (குறிப்பாகக் கடவுள் வாழ்த்து) இதுபோன்ற சங்கக் கவிதைகளையும் சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் சில பகுதிகளையும் பாடியுள்ளனர் என்றாலும், இவற்றின் உள்ளடக்கம்தான் முக்கியம். பாட்டில் உள்ளடக்கம் முக்கியமில்லை. சொற்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் ஏதேனும் ஓசையைப் போட்டு (லா லா லா, ஆ ஆ ஆ போன்று, டண்டக்க ரெண்டக்க போன்று, நிறையப் பாடல்களில் 'தான்' என்ற சொல்லைப் போட்டு நிரப்புவது போன்று) நிரப்பிவிடலாம்.

பாட்டு, கவிதை இரண்டிலுமே தாளக்கட்டு உண்டு. கவிதையின் தாளக்கட்டு உள்ளார்ந்தது. சந்தப்பாக்களில் மட்டுமே வெளிப்படக்கூடியது. பிறவற்றில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. ஆனால் பாடலின் ஜீவன் ஸ்வரக் கோவை. ஸ்வர மாதா, லய பிதா என்பார்கள் இசைக்கலைஞர்கள். ஸ்வரம், தாளம் இரண்டும் இணையும்போதுதான் இசை உருவாகிறது. ஸ்வரம் என்ற பகுதியை முற்றிலுமாக விடும்போதுதான் கவிதைக்கலை உருவாகிறது. தாள அமைப்பையும் மிக நுட்பமாக - அர்த்த அமைப்பு நோக்கிப் பயன்படுத்துவது கவிதைக்கலை. ஆனால் இசை தாள அமைப்பை நடைக்கேற்பவே பயன்படுத்துகிறது. ஒரு பாட்டில் ஆதி தாளம், ரூபக தாளம் என்பதற்கு அர்த்தமுண்டு. கவிதையில் ஆதி தாளம், ரூபக தாளம் என்பது தேவையில்லை. யாப்புக்கேற்ற நுட்பமான ஒலிநயம்தான் அங்குத் தேவைப்படுகிறது.

கவிதையின் அடிப்படை செறிவு, இறுக்கம். ஆழ்ந்து சிந்தித்தலாகிய அனுபவத்தை நோக்கியே கவிதை எழுதப்படுகிறது. பாட்டு முதன்மையாகக் கேட்கப்படுவதை நோக்கித்தான் எழுதப்படுகிறது. எனவே பாட்டில் செறிவு சாத்தியமில்லை. மிக எளிமையான விஷயங்களைத்தான் பாட்டில் கொண்டுவர முடியும். செறிவான வாழ்க்கை அனுபவங்களைப் பாட்டில் கொண்டு வருவது கடினம். அதற்குப் படிப்பின் வாயிலான ஆழ்ந்த ஈடுபாடுதான் தேவை.

பாட்டின் அடிப்படை பன்னுதல் அல்லது மிகைத் தன்மை. திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுதல் (பல்லவி போன்றவற்றால்) பாட்டின் இயல்பு. கவிதையில் கூறியதைத் திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை.

பாட்டின் வாயிலாக மிகச்சில அனுபவங்களை மட்டுமே புலப்படுத்தமுடியும். காரணம், கொடுக்கப்பட்ட சூழ்நிலைக்கும் மெட்டுக்கும் ஏற்பவே பாட்டு அமையும். தன் உண்மையான ஈடுபாட்டைக் கவிஞன் உணர்த்துவதற்கில்லை. கவிதை உள்ளத்தில் கனன்றுகொண்டிருக்கும் ஆவேசத்தின் விளைவு. 'நீ இதைச் சொல்; இதைச் சொல்லியே தீரவேண்டும்' என்று உள்ளம் இடையறாது உந்துவதன் விளைவு கவிதை.

பாடல்-கவிதை குழப்பத்திற்கு மேலும் ஒரு காரணம், தமிழ்நாட்டில் சில கவிஞர்கள் பாடலாசிரியர்களாகவும் அமைந்து அவர்கள் பாடலும் இயற்றியதுதான். பாரதியார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் எழுதிய பாடல்களில் சில நல்ல கவிதைகளாகவும் அமைந்துவிட்டன. (சான்றாகக் 'காணிநிலம் வேண்டும்' போன்ற பாடல்கள்). இதனால் பாடல்கள் யாவுமே கவிதைகள் என்று நினைத்துவிடும் தவற்றினைச் செய்யலாகாது. சில பாடல்களும் அபூர்வமாகக் கவிதையாகும் என்று மட்டுமே கொள்ளவேண்டும். மனிதனுக்கு இருகால்கள் உண்டு என்றால் தவறில்லை. இருகால் கொண்டவை யாவும் மனிதர்களே என்றால் தவறல்லவா?

அவ்வாறு பாடல்களும் கவிதையாகவேண்டும் என்றால், பாரதி செய்ததுபோலக் கவிஞன் உள்ளத்தெழுச்சியாக அவை பிறந்திருக்கவேண்டும். பிறர் தந்த எந்தச் சூழலுக்கும் ஒரு நல்ல கவிஞன் கவிதையோ பாட்டோ எழுதமாட்டான். அது அவனாகவே வரையறுத்துக்கொண்ட சூழலாக இருக்கவேண்டும். எவ்வாறாயினும் ஒரேமாதிரிச் சூழல்களைத் தந்து எழுதச் சொல்லும் திரைப்படத் துறைக்கான பாடல்கள் கவிதையல்ல.

தமிழ்த் திரைப்படங்களின் சூழ்நிலைகள் மிகவும் வரையறுக்கப்பட்டவை. காதலன்-காதலி தங்கள் காதலைப் புலப்படுத்தப் பாடுதல், காதல் தோல்வியில் (அல்லது தோல்வியடைந்துவிடுமோ என்ற) சோகத்தில் பாடுதல், கதாநாயகனோ நாயகியோ விரக்தியில் புலம்பிப் பாடுதல் (இதற்குத் தமிழ்த் திரையுலகில் தத்துவப்பாட்டு என்று பெயர்!), பிறருக்கு-மக்களுக்கு அறிவுரை கூறும் பாங்கில் பாடுதல் (சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா), தன்னறிவிப்பாகப் பிரகடனமாகப் பாடுதல் (நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) என்ற வகைகளில் தமிழ்த் திரைப்படப் பாடல்களின் சூழல்கள் அடங்கிவிடும். கவிதையை இப்படி ஒருசில சூழல்களில் அடக்கிவிட முடியாது. அது வாழ்க்கையின் அத்தனைத் தளங்களையும் தொட்டுத் தழுவும் இயல்பு கொண்டது.

மேலும் முன்பு நாம் கண்ட ஒளசித்தியம் (பொருத்தப்பாடு) போன்ற சொற்களெல்லாம் திரைப்படப் பாடல்களை பொறுத்தவரை அர்த்தமற்றவை. சொல்லுவதை உருவகமாக அலங்காரமாகச் சொல்வது ஒன்றே அவற்றிற்கு முக்கியம். பெரும்பாலான பாடலாசிரியர்களுக்கு எந்தச் சூழ்நிலைக்காக எந்தத் தனிமனித அனுபவத்திற்கென ஒரு பாட்டு எழுதுகிறோம் என்பதுகூடத் தெரியாது. எதையோ எழுதி எங்கோ இணைத்து எப்படியோ உருச்செய்யும் ஒரு துக்கடா விவகாரம்தான் பொதுவாகப் பாட்டுகளும், குறிப்பாகத் திரைப்படப் பாட்டுகளும்.

பாட்டுகளில் பயன்படுத்தப்படும் சொற்களும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படுகின்ற சொற்களே இவற்றைத் தேய்ந்துபோன சொற்கள், தேய்ந்துபோன தொடர்கள், தேய்ந்துபோன உருவகங்கள் என்று சொல்வார்கள். மேலும் எதுகை மோனைக்காகவும் தேய்ந்துபோன தொடர்களையே பயன்படுத்துவர். (உதாரணத்திற்கு, 'கண்ணன்' என்று முதலடியில் வந்தால், 'மன்னன்' என்று இரண்டாமடியில் வரவேண்டும்). இவற்றை மீறிப் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் புதிய சொற்சேர்க்கைகளையும் படிமங்களையும் உருவாக்குவதற்கான கால அவகாசமும் சிந்தனைப்போக்கும் திரைப்படத்துறையில் கிடையாது. கவிதையிலே திரும்பத் திரும்பப் பயன்படுத்திய சொற்சேர்க்கைகளையே (cliche) பயன்படுத்துவது குற்றமாகும்.

க. பூரணச்சந்திரன்

© TamilOnline.com