சாகித்ய அகாதமி விருது
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருது, எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு அவர் எழுதிய 'காலா பாணி' நாவலுக்காக வழங்கப்படுகிறது.

மு. ராஜேந்திரன் எழுத்தாளராகவும் வரலாற்று ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'திருக்குறளில் சட்டக் கூறுகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து 'முனைவர்' பட்டம் பெற்றவர். வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டு செப்பேடுகள், கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார். பதிப்பாளரும்கூட. எழுத்தாளர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார்.

வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு, மதாம், 1801 போன்றவை இவரது பிற நாவல்கள். சேரர் செப்பேடுகள், சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் எனப் பல வரலாற்றாய்வு நூல்களை எழுதியுள்ளார். வந்தவாசிப் போர் - 250, ஆனந்த ரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு போன்ற பல நூல்களைத் தொகுத்துள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் திலகவதி, கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ் அடங்கிய நடுவர் குழு 'காலாபாணி' நூலை விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது செப்புப் பட்டயமும், சால்வையும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது.

மு. ராஜேந்திரனுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com