பாலைவனச் சோலை (அத்தியாயம் - 1)
"அருண்... அருண்... அரூண்!"

கீதாவின் கத்தல் வீட்டின் கீழே இருந்து வந்தது. அன்று பள்ளிக்கூட நாள். அருணின் அறையில் அலாரம் ஒரு பக்கம் அடித்துக் கொண்டிருந்தது. அந்த அலாரம் 5 நிமிடத்திற்கு ஒருமுறை அலறியது. அம்மா கீதாவுக்கு இது புதிதல்ல. பள்ளிக்கூட நாட்களில் தவறாமல் நடக்கும் கூத்துதான்.

பக்கரூ தன் பாட்டுக்கு மாடிக்கும் கீழுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பா ரமேஷ் தன் கனவுலகில் இருந்தார். அவரால் எப்படித்தான் இப்படித் தூங்க முடிகிறதோ என்று கீதாவுக்கு ஒரு பக்கம் வியப்பும், ஒரு பக்கம் எரிச்சலுமாக வந்தது.

அலாரம் நின்ற பாடில்லை. கீதா பெருமூச்சு விட்டார். மெதுவாக மாடிப்படி பக்கம் சென்றார். மெல்ல ஒரு படி ஏறினார். என்ன தோன்றியதோ, சில நொடிகள் யோசித்தபடி அப்படியே நின்றார். அவர் படி ஏறுவதைப் பார்த்து பக்கரூ துள்ளிக் குதித்து மாடிக்கு ஓடியது. கீதாவுக்காக பக்கரூ மேலே போய் எதிர்பார்ப்போடு பார்த்தது.

'லொள்...லொள்'. பக்கரூ கீதாவை அழைத்தது. கீதா முதல் படியில் நின்றபடியே பக்கரூவைப் பார்த்து புன்னகைத்தார். அது புரியாமல் விழித்தது. கீதா, புன்னகைத்தபடி அப்படியே திரும்பி சமையல் அறைக்குப் போனார். அங்கே தனது கோப்பையில் காஃபியை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து செய்தித்தாளில் குறுக்கெழுத்துப் புதிர் போட ஆரம்பித்தார். ஏதோ ஒரு ஆனந்தமான அமைதி அவரைக் கவ்விக் கொண்டது.

அலாரம் அடிப்பது நின்றது. வீடே நிசப்தம் ஆனது. கீதா குறுக்கெழுத்துப் புதிரில் முழுகிப் போனார்.

சில நிமிடங்களில் மாடியில் அருணின் அறையில் அவன் தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது. கீதா வேலையில் மும்முரமாக இருந்தார்.

"அம்மா...அம்மா." மாடியிலிருந்து அருண் கூப்பிட்டான். கீதா காது கேளாதவர்போல இருந்தார்.

"அம்மா...அம்மா... எங்கே என்னோட ஸ்கூல் பிளானர்? நேத்தி ராத்திரி இங்கதானே இருந்தது. லேட் ஆகுது அம்மா. 10 நிமிஷத்துல நான் அங்கே இருக்கணும். இந்த அலாரம் வெறும் வேஸ்டு. தேவைப்படும்போது அடிக்காது."

கீதாவுக்கு அருண் பேச்சைக் கேட்டுச் சிரிப்பாக வந்தது. சில நிமிடம் வீட்டில் ஒரு பிரளயமே வந்ததுபோல இருந்தது. அருண் மாடிப்படிகளில் குதித்து வேகமாக இறங்கி வந்தான்.

"அம்மா, எனக்கு பள்ளிக்கு லேட் ஆச்சுன்னு தெரியாதா உனக்கு? என்னை சீக்கிரமே எழுப்பி விட்டுருக்கலாமே?" அருண் தனக்கு வேண்டுமென்றால் எதையும் செய்து கொள்வான், அது மாதிரி சமயங்களில் மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட மாட்டான்.

"அம்மா, சிற்றுண்டி எங்கே? ஸ்கூல் பிளானர் கிடைச்சிட்டுது, என் பையிலேயே இருந்தது."

கீதா மௌனமாக இருந்தார்.

"அம்மா, உங்களைத்தான் கேட்டேன். காதுல விழலையா?"

கீதாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். பழைய கீதாவாக இருந்திருந்தால் வீடே அதிரும்படி ஒரு கத்து கத்திருப்பார். தற்போது சில மாதங்களாக அவர் ஜென் தியானம் செய்ய ஆரம்பித்திருந்தார். அதன் நன்மைகள் அவருக்குப் பிடித்திருந்தது. அவரால் கோபத்தை அழகாகக் கட்டுப்படுத்த முடிந்தது. தன்னால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதை மட்டுமே அவர் செய்தார். வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

சமையலறையில் அருண் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது. அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்.

"அம்மா, பீநட் பட்டர் எங்கே?" அருணின் சத்தமான கேள்வி உள்ளே இருந்து வந்தது. "அம்மா, பேஜலா பிரெட்டா, எது எடுத்துக்கணும் இன்னைக்கு?"

அருண் கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் தான் குறுக்கெழுத்தில் மும்மரமாக இருந்தார்.

"அம்மா, என்ன ஆச்சு உனக்கு? எனக்கு லேட் ஆகுதில்ல?"

தன் அருகில் இருந்த ear pod-களை எடுத்து காதில் போட்டுக் கொண்டு மொபைலில் பக்திப் பாடல் கேட்க ஆரம்பித்தார். அதை மெதுவாக வைத்திருந்ததால் சுற்றி நடக்கும் அனைத்து ஆர்பாட்டங்களும் அவருக்குக் காதில் விழுந்தது.

அப்பொழுது மாடிப்படியில் ரமேஷ் கொட்டாவி விட்டபடி இறங்கி வந்தார். "கீதா, காஃபி இருக்கா? என்ன அருண் இன்னும் கிளம்பலையா? அவன் லேட்டா போய் எச்சரிக்கை கிடைச்சா நாமதான போகணும்."

ரமேஷ் அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டார். கீதா நெடிய மூச்சு ஒன்றை விட்டுவிட்டு, தன் வேலையில் முழுகினார். அருணும், ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அருண் சைகையால் அம்மாவின் பக்கம் காட்டி, 'கப்சிப்' என்று அப்பாவிடம் காண்பித்தான். இனி ஒன்றும் ஆகாது என்று இருவரும் தமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்கள்.

அருண் நொடிகளில் பள்ளிக்குக் கிளம்பினான். "வரேன் அம்மா. சாயங்காலம் பார்க்கலாம்."

"போய்ட்டு வா கண்ணா."

வாசல் நோக்கி ஓடியவன் சட்டென்று நின்றான்.

'வாவ்! அம்மா, உனக்குக் காது கேட்டுது, கடவுளுக்கு நன்றி."

"ஆமாம், வேணும்னா கேக்கும், உங்க ரெண்டு பேர் மாதிரியே" கீதா புன்னகையோடு அருணைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.

அருண் கிளம்பிப் போனான். ரமேஷ் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு கீதாவின் அருகில் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தார். சுர்சுர் என்று காஃபியை உறிஞ்சினார். கீதா முகம் சுளித்தார். ரமேஷ் கவனிக்கவில்லை. இன்னும் உற்சாகமாகக் காஃபியை உறிஞ்சினார்.

"கொஞ்சம் சத்தம் போடாம குடிக்கலாமே?"

ரமேஷ் ஏதோ ஓர் உலகத்தில் இருந்தார். கீதா கூறியது அவர் காதில் விழவில்லை. "இதுல ஒரு ருசி இருக்கு கீதா. காஃபின்னா காஃபிதான். பேஷ், பேஷ் ரொம்ப நல்லா இருக்கே!"

தான் பாட்டுக்கு ஜோக் அடித்துச் சிரித்துக் கொண்டார் ரமேஷ். அது மட்டும் அல்லாமல், இன்னும் பலமாகவே உறிஞ்சினார். கீதாவுக்கு எரிச்சல் வந்தது. காட்டிக் கொள்ளாமல் மீண்டும் ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். கொஞ்ச நாட்களாகவே தான் செய்யும் ஜென் தியானம் அவருக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. இப்பொழுது எல்லாம் கீதா எதற்கும் கத்துவதே இல்லை.

"என்ன கீதா, குறுக்கெழுத்து போடறியா?" தன் பக்கமாக செய்தித்தாளை இழுத்தபடி கேட்டார் ரமேஷ்.

கீதா மௌனமாக இருந்தார். அது அவரது 'Me Time'. யாருடனும் பேச விரும்பவில்லை. கையில் இருந்த பென்சிலால் சில நொடிகள் தட்டியபடி இருந்தார். ரமேஷ் ஒன்றும் புரியாமல் குழந்தைபோல நடந்து கொண்டார்.

"1 down, Annoy. 3 across, Pester. 7 across, Irritate. எழுதிக்கோ கீதா" ரமேஷ் அடுக்கிக்கொண்டே போனார்.

அதற்குமேல் கீதாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஓன்றும் சொல்லாமல் பேப்பரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். பின்புறக் கதவைத் திறந்து வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தனது தியானத்தை குறுக்கெழுத்து போடுவதில் தொடர்ந்தார். ரமேஷ், ஏதோ சொல்ல நினைத்தவர் வாயை மூடிக்கொண்டார் ஏன் வம்பு என்று. ரமேஷ் மாடிப்பக்கம் சென்றார்.

சுவர்க் கடிகாரம் 8 முறை அடித்தது. கீதாவும் வேலைக்கு கிளம்பத் தயாரானார். ரமேஷ் காஃபி குடித்த கப் அப்படியே உணவு மேஜைமீது இருந்தது. அதை எடுத்து அங்கணம்வரை கொண்டு போனார். பின்னர் என்ன தோன்றியதோ, திரும்பி வந்து அதை எடுத்த இடத்திலேயே வைத்தார்.

"நான் வேலைக்காரி அல்ல. அடுத்தவர் கவனமின்மைக்கு நான் ஏன் உடந்தையாக இருக்க வேண்டும். This is Geetha 2.0. A brand new version." பெருமிதத்துடன் அங்கிருந்து நகர்ந்தார். "Zen works! What a wonderful way to start the day."

கீதா அலுவலகம் போகத் தயாராகி மாடியிலிருந்து இறங்கி வந்தார். ரமேஷ் எங்கே என்று நோட்டம் விட்டார். எங்கேயும் கண்ணில் தென்படவில்லை. ஒரு சீட்டை எடுத்து அதில் சில குறிப்புகளை எழுதினார். குளிர்பதனப் பெட்டி மீது அதைக் கண்ணில் படும்படி ஒட்டினார். கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

காரில் உட்கார்ந்து வண்டியைக் கிளப்பும் முன்னர், தற்செயலாக மொபைலைப் பார்த்தார். அதில் அருணிடம் இருந்து சில குறுஞ்செய்திகள் வந்திருந்தன. படிப்பதா வேண்டாமா என்று யோசித்தார். மணி பார்த்தார். 8.30 ஆக 5 நிமிடம் இருந்தது. அருணின் குறுஞ்செய்தியைப் படித்தார்.

"Mom. Sorry about cutting into your "me time" this morning. BTW, I noticed a press ad in our newspaper that is very interesting. I want to talk to you later this evening. BFN."

உடனேயே பதில் அனுப்பினார். தனக்குத் தானே சிரித்துக் கொண்டார்.

"No worries. Take it easy. Can't wait to talk."

அருண் குறிப்பிட்டது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி கீதா வண்டியைக் கிளப்பினார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com