அப்பா
(ஜி.டி. நாயுடுவின் சுயசரிதையிலிருந்து)..

நான் அறிந்தவரையில் அப்பாவின் வாழ்க்கையைத் திட்டவட்டமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது.

முதல் பிரிவில் அவரது இளமைப் பிராயம், கோவைக்கு வந்து தொழில் தொடங்கியது, முதல் வெளிநாட்டுப் பயணம், ஒருசில கண்டுபிடிப்புகள் எல்லாம் அடக்கம். அந்தத் தருணத்தில் இளவயதின் காரணமாகவோ என்னவோ, அப்பா முன்கோபக்காரராகவும், பொறுமை குறைந்தும் காணப்பட்டார் என்பது உண்மை.

காபி சூடாக இல்லை என்று அதைக் கொண்டு வந்த சமையல்காரர் மேலேயே காபியைக் கொட்டியதும், சாப்பாடு ருசியாக இல்லை என்று அப்படியே தள்ளிவிட்டு கோபத்துடன் எழுந்து போனதும், இன்னும் பல காரியங்கள் செய்ததும் - அந்த முதல் காலகட்டத்தில்தான். ஓயாது அலைந்து திரிந்து புதுப்புது விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும், அயராது உழைக்க வேண்டும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், நான் ஒருவன் வளர்ந்தால் மட்டும் போதாது, இந்த நாடு உயர வேண்டும், இந்த நாட்டு மக்கள் மேன்மை அடைய வேண்டும் என்கிற எண்ணங்களெல்லாம் லட்சியங்களாக பிற்காலத்தில் வளர முளைவிட்டது அந்தச் சமயத்தில்தான்.

வயிற்றுப் புண் (அல்சர்) வந்து அப்பா மிகவும் சிரமப்பட்டது முதல் கட்டத்தின் இறுதியில்தான். அல்சரால் அடைந்த வேதனை, தொடர்ந்து செய்துகொண்ட அறுவை சிகிச்சை, அதற்குப் பின் வந்த நாட்களில் அவருள் உண்டான மாற்றங்கள் - இரண்டாவது கட்டத்துக்கு வித்திட்டதாகவே நினைக்கிறேன்.

அப்பா அல்சர் உபாதையால் அல்லலுற்ற நாட்கள் தெளிவாக இல்லாவிடினும் புகைமூட்டமாக ஞாபகம் இருக்கவே செய்கிறது.

வலி… வலி… எந்நேரமும் வலியில் துடித்தாலும் வேலைகளை விடாமல் அப்பா கவனிப்பதையும், காலையில் துவங்கினால் நள்ளிரவுவரை அந்த நிலையிலும் உழைத்ததையும் - மற்றவர்கள் வியந்து பேசக் கேட்டிருக்கிறேன்.

ஒரு சமயம் அல்சர் முற்றிப்போய் ரத்தக் கசிவு உண்டாகிவிட, அப்பா உயிர் பிழைப்பது சிரமம் என்கிற நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆன பிறகு, கண்ணன் என்கிற உதவியாளரை மட்டும் அழைத்துக்கொண்டு, உடன் எந்த உறவினரும் வரக்கூடாது என்று தடுத்துவிட்டு, அவர் சென்னைக்குப் பயணமானார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நர்ஸிங் ஹோமில் டாக்டர் பண்டலா அப்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட உயிருக்கு ரொம்ப ஆபத்தான நிலையே இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்திலும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? அறுவை சிகிச்சை நடந்த ஐந்தாம் நாள் கோவையில் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் இருந்தன என்று, யாரிடமும் சொல்லாமல் கண்ணனை விட்டு தனக்கு ரயில் டிக்கெட் எடுக்கச் சொல்லி, கோவைக்கு வந்து, வேலைகளைக் கவனித்துவிட்டு, மறுபடி சென்னைக்குச் சென்று வைத்தியர் தையல்களை அகற்றவேண்டி நர்ஸிங் ஹோம் அடைந்தார்.

இரண்டு நாட்கள் அவரைக் காணாமல் நர்ஸிங்ஹோம் அல்லோல கல்லோலந்தான் பட்டுப் போயிற்று! இன்றுபோல வைத்தியத் துறை அதிகமாக வளர்ந்திராத அந்த நாளில் துணிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடன்றி, ஆபத்தான நிலையில் இருப்பதைப் பாராட்டாமல், தொழிலைக் கவனிப்பதுதான் முக்கியம் என்கிற பிடிவாதத்துடனும், 'எனக்கு ஒன்றும் ஆகாது' என்கிற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் அன்று அப்பா கோவைக்கு வந்து சென்றதைப் பல வருடங்களுக்கு உற்றாரும் சுற்றாரும் வியந்து பேசியதுண்டு. 'அது என்ன பிடிவாதம், டாக்டர் சொன்னதைக்கூடக் கேட்காத அளவுக்கு?' என்று கடிந்தவர்கள் உண்டு! 'என்ன மனோபலம், 'வில் பவர்' இருந்தால் அப்படி நினைத்ததைச் சாதிப்பார்!' என்று வியந்து பேசியவர்களும் உண்டு!

எது எப்படி ஆனாலும், இந்த அனுபவத்துக்குப் பிறகு அப்பாவிடம் அழுத்தமான மாற்றங்கள் தோன்றியதாகவே, நின்று நிதானித்து யோசிக்கும்போது விளங்குகிறது. அல்சர் தந்த வலியும், அறுவை சிகிச்சை அனுபவமும், ஆஸ்பத்திரி வாசமும் அப்பாவை வித்தியாசமாக பாதித்து, சிந்திக்க வைத்திருக்க வேண்டும். தன்னைக் குறித்து சுய அலசல் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பழைய கோபதாபங்கள், பொறுமை இன்மை ஸ்விட்ச் போட்ட தினுசில் மறைந்து, ஒரு நிதானம், அடுத்தவரின் கண்ணோட்டத்திலிருந்து எதையும் பார்க்கும் பக்குவம், சமுதாயத்தைப் பற்றின அதிகமான கவலை - இதெல்லாம் அப்பாவுக்குள் திடுமென ஜனித்தல் எங்ஙனம் சாத்தியம்?

அடுத்து வந்த வருடங்களைத்தான் அப்பாவின் வாழ்க்கையில் வசந்த காலமாக இருந்த இரண்டாவது பகுதி என்று நான் குறிப்பிடுவேன்.

அல்சர் போன்ற வியாதிகள் ஏன் வருகின்றன, இவற்றுக்கு சிகிச்சை என்ன, மனதினால் மனிதன் வளர வளர அவன் பேச்சு, நடத்தை, சிந்தனை எல்லாமே எப்படி ஆக்கபூர்வமாக மாறிப் போகின்றன - போன்ற எண்ணங்கள் எல்லாம் அப்பாவுக்குள் அலைகளாக சதா புரள முற்பட்டது அப்போதுதான்.

மேலை நாட்டுக்குச் சென்றபோது தொழில் சம்பந்தப்பட்ட விவரங்கள் தவிர, அல்சர், இதர வியாதிகள் குறித்து அங்கு பல நிபுணர்களைக் கலந்தாலோசனை பண்ணியவர், நுணுக்கமாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டதோடு, பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் தொடங்கினார்.

ஒரு தரம் சின்னப் பையனான என்னை அருகில் அழைத்து, எனக்குப் புரியுமா புரியாதா என்றெல்லாம் தயங்காமல், அல்சர் ஒருவருக்கு ஏன் வருகிறது என்பதை விளக்கினார்.

"கவலை, டென்ஷன், கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற உணர்வுகளுக்கு வயிற்றிலே சுரக்கும் அமிலத்தைத் தூண்டிவிடக் கூடிய சக்தி உள்ளது. அளவுக்கு அதிகமாய், தேவையே இல்லாதபோதுகூட உணர்ச்சிகளுக்கு உள்ளானால், சுரக்கப்படும் அமிலங்கள் இரைப்பையின் உட்சுவர்களை அரித்து புண்களை உண்டாக்கி விடுகின்றன. வெறும் வயிற்றோடு இருக்கையில் இத்தகைய கோபதாபங்களுக்கு இடம் கொடுப்பது, வயிற்று வியாதியை விலை கொடுத்து வாங்குவதே ஆகும். இதோடு அதிகக் காரம், புளிப்பு கொண்ட தவறான உணவுப் பதார்த்தங்களை உட்கொள்ளுவதும், புண்களை அதிகரிக்க வைக்கின்றன. ஆக, மனம், நடத்தை, உணவு முறைக்கு வெகுவாக சம்பந்தம் உள்ளது. முதலில் வேண்டாத கோபம், பொறாமை உணர்வுகளை அறவே ஒழிப்பது நல்லது. முளையிலேயே கிள்ளிவிட்டால் கவலை இல்லை; அவஸ்தை இல்லை."



இப்படி விளக்கியதோடு நிற்காமல், அப்படியே தானும் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து, நம்மையும் அதன்படி நடக்க வைத்தது அப்பாவின் விசேஷ குணம்.

அதிகாரிகளோ, வேறு எவருமோ, நானோ, பிற்காலத்தில் கோபத்துடன் அவர் அறைக்குள் நுழைந்தால், நாம் உணர்ச்சிவசப் பட்டிருப்பதைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, நம்மை உட்காரச் சொல்லிவிட்டு, தான் பார்த்துக் கொண்டிருக்கும் ஃபைலைத் தொடர்ந்து படிப்பார். அல்லது ஏதோ முக்கிய காரியம் இருப்பதுபோல தன் கைக்காரியத்தையே கவனிப்பார். இது வந்தவரின் கோபத்தை மட்டுப்படுத்த அப்பா கையாண்ட யுக்தி என்பது பிறகே தெரியவந்தது.

"பத்து நிமிடங்கள் அமைதியாய் உட்கார்ந்தால், கோபத்தின் வேகம் குறைந்துவிடும். படபடப்பு குறைந்ததும் யார் மேலாவது உண்டான அதிருப்தியும் மட்டுப்பட்டு, அதுநாழிகை பெரிய குறையாக, தவறாகத் தோன்றியது கூட ஒன்றும் இல்லாததாக பல சந்தர்ப்பங்களில் மாறிவிடக் கூடும்" என்று அப்பா மாணவர்களுக்குப் பின்னர் அளித்த உரைகளில் இந்த விளக்கம் கொடுத்துக் கேட்டிருக்கிறேன்.

அறுவை சிகிச்சை அனுபவம் அப்பாவுக்கு மனிதர்களை நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு பாடம் ஆயிற்று என்றுகூடச் சொல்லலாம்.

அப்பாவுக்கு நோய் கடுமையாக உள்ளது. அவர் பிழைப்பது துர்லபம் என்கிற எண்ணத்தில் தாறுமாறாய் நடந்துகொண்ட பலரை, பளிச்சென்று 'இவர் இப்படி' என்று அப்பாவுக்கு அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம்.

அந்தச் சின்ன வயதில் அப்பா என்னிடம் கூறிய இன்னொரு அறிவுரை - "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது முழு உண்மை. பணத்துக்காகப் பலர் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். நட்பை விட்டுவிடவும், இல்லவே இல்லை என்று பொய் சொல்லவும், உறவைக் காற்றில் பறக்கவிடவும்கூட பணத்துக்காகப் பலர் முன் வருவார்கள். நீ பெரியவனான பிறகு யாருக்கும் பணத்தைக் கூடுமானவரையில் இலவசமாகத் தராதே. இலவசமாகத் தரும் எதற்கும் மதிப்பு கிடையாது. உன் நண்பனோ, உறவினரோ பண உதவி கேட்டு வந்தால், 'பணம் உறவைக் கெடுக்கும்' என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உதவி செய். ஒருத்தருக்குப் பணம் கொடுக்கும்போதே அதைக் கடனாகத் தருவதாய் அவரிடம் கூறினாலும், உன்னைப் பொறுத்தவரை அதை அந்தக் கணமே மறந்துவிடு. பணம் திரும்பி வரும் என்று எதிர்பார்க்காதே. வந்தால் சந்தோஷப் படு. வராவிட்டால் 'எதிர்பார்க்கவில்லையே' என்று சமாதானம் செய்துகொண்டு உறவையோ நட்பையோ காப்பாற்றிக்கொள். அல்லது முதலிலேயே 'மன்னிக்கவும்… பணம் உறவைக் கெடுக்கும், நான் தரமாட்டேன்' என்று நிர்தாட்சண்யத்துடன் மறுத்துவிடு."

இந்த இரண்டாவது கட்டத்தில் அப்பா உலகுக்காக உழைப்பதில் சிறந்து விளங்கினார். பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்று, அரிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு வந்து நம் நாட்டில் அவற்றை உபயோகத்தில் கொண்டுவர முயற்சித்தார். நாடு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு விஞ்ஞானப் புரட்சி தேவை என்று சதா வலியுறுத்துவார். தொழில், விவசாயத் துறைகளில் நவீன மாற்றங்களை இந்தியா ஏற்றாலே ஒழிய வளர்ச்சி அடைவது சிரமம் என்பது அவர் கருத்து.

நாட்டிலே நிலவும் முறையான பட்டப்படிப்புகளில் அப்பாவுக்கு என்றைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது. 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது - இதை மறந்துவிட்டு, தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறோமோ?' என்று வருந்துவார். எதிர்காலத்தில் இந்தியாவை வளமான நாடாகப் பிரகாசிக்க வைக்க வேண்டிய இளைய தலைமுறையினர் - மாணவர் சமுதாயம் - கட்டுப்பாடின்றி இருக்க முற்படுவதும், வேண்டாத கேளிக்கை, பொழுதுபோக்கு அம்சம், தவறான பாடத்திட்டங்களால் பாதை மாறிப்போவதும் அவரை ரொம்பவும் கவலைக்குள்ளாக்கியது. 'படிப்பு அறிவை வளர்க்க உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, அதை முடக்கிவிடுவதாக இருக்கக்கூடாது - பிராக்டிகல் பயிற்சியுடன் கூடிய படிப்புதான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை. எந்தத் தொழிலானாலும் அதை கண்ணியத்துடன் ஏற்று, நேர்மை, பெருமையுடன் செய்ய இளைய தலைமுறைக்குக் கற்றுத்தர வேண்டும்' என்பார் வாய் ஓயாமல். இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய தன்னால் இயன்ற காரியமாக இந்தியாவில் முதல் பாலிடெக்னிக் தொழிற்கூடத்தை ஆரம்பித்தார். என்ஜினியரிங் கல்லூரியைத் துவக்கினார். "மூன்று வருடங்களில் வேண்டாததைக் கற்பிப்பதைத் தவிர்த்து ஆறே வாரங்களில் மாணவனுக்கு அவசியமானதைக் கற்பித்து அவனை முழுமையான அறிவுடையவனாக ஆக்குகிறேன், பார்" என்கிற ஆர்வத்துடன் அந்தப் பயிற்சிக் கூடத்தையும் தொடங்கினார்.

"நம்மிடம் ஒரு பொருள் இல்லாமல் இருந்து அடுத்தவரிடம் இருக்குமேயானால், அதுகுறித்து பொறாமைப்படுவது மோசமான வளர்ச்சி! அதைத் தவிர்த்து, அந்தப் பொருள் எப்படி மற்றவரிடம் வந்தது என்று யோசித்தால், அதன் பின்னணியில் இருக்கும் அருமையான உழைப்பு, அதன் அருமை நமக்குப் புரியவரும். நாமும் அப்படி உழைத்து அதை அடைய வேண்டும் என்று எண்ணுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அஸ்திவாரமும்" என்பதும் அப்பா மாணவர்களுக்குத் திரும்பத் திரும்பக் கூறும் அறிவுரைகளில் ஒன்று.

அப்பாவின் ஞாபகசக்தி அவரை அறிந்தவர்களை என்றைக்குமே பிரமிக்க வைத்திருக்கிறது.

தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளிகளைப் பேர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு அப்பாவுக்கு நினைவாற்றல் உண்டு. இதைத் தவிர வொர்க்‌ஷாப்பில் நடந்து செல்பவர் நின்று, 'என்ன முனுசாமி, உன் மனைவிக்கு இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுவலி உண்டானது என்றாயே, இப்போது தேவலையா?' என்பார். 'நாராயணன், உங்கள் பிள்ளை பத்தாவதுதானே படிக்கிறான்? பரிட்சை எப்படி எழுதியிருக்கிறான்?' என்பார். அப்படி நிஜமான அன்போடு கேட்பது அடுத்தவரை வாஸ்தவமாக நெகிழ்த்திவிடும். போர்க்காலங்களில் தனக்கு உதவி செய்த நண்பர்களை மறக்காமல் மீண்டும் அந்தந்த நாடுகளுக்குச் சென்று, அவர்களைத் தேடிப்பிடித்துச் சந்தித்த பல சந்தர்ப்பங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன். மொழி தெரியாது, பழக்கவழக்கம் அத்தனையிலும் மாறுபட்டவர்கள், என்றாலும் ஒருவர் கையை மற்றவர் பற்றியவாறு உருகி நிற்பார்கள். பலர் கண்களில் கண்ணீர் கோடு போட்டு, கன்னத்தில் இறங்கி நான் பார்த்து, இது என்ன பிணைப்பு என்று அதிசயித்திருக்கிறேன்.

அப்பாவின் உருவம் அப்படி, குணம் அப்படி! நெடுநெடுவென்று உயரமான உடல்வாகு, ஊன்றிப் பார்க்கும் கண்கள். நிமிர்ந்து நின்று கண்களை நோக்கி என்ன என்றால், பதில் கூற முடியாமல் ஒரு தவிப்பு ஆளைக் கட்டிப்போடும். 'காரிஸ்மாடிக் பர்ஸனாலிடி' என்பார்களே, அதற்குச் சரியான உதாரணமாய்த்தான் தனது நடுவயதுப் பிராயத்தில் திகழ்ந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் மெஸ்மெரிஸம், தந்திரம், மந்திரம், ஹிப்னாடிஸம் போன்றவற்றைப் பழகிக் கையாண்டார். அதனால்தான் யாரையும் தன்பால் வசீகரிக்கக்கூடிய ஒரு காந்த சக்தி அவரிடம் காணப்பட்டது என்கிற அபிப்பிராயம் சிலருக்காவது உள்ளது. அப்பா கையால் நல்ல பாம்பைப் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டதையும், தேள் கடித்துவிட்டது என்று வலியுடன் வந்த பையனைப் படுக்கவைத்து, தூங்கச் செய்து, வலி உணராமல் பண்ணியதையும் பலர் பார்த்திருக்கிறார்கள்… என்றாலும் அவற்றை ஒரு பிறவி சக்தியாகவோ, பழக்கிக்கொண்ட ஹிப்னாடிக் பழக்கமாகவோ ஏற்பது கடினமாக உள்ளது.

அப்பாவுக்கு 'வில் பவர்' என்கிற மனோபலம் எக்கச்சக்கம். சுயக்கட்டுப்பாடும் அதிகம்… இவற்றின் காரணமாய் நினைப்பதை அழுத்தமாக செயலில் அவரால் காட்ட முடிந்தது. இன்றைக்கு மன இயல் நிபுணர்கள் 'ஆட்டோ சஜஷன்' - அதாவது 'சுயசிகிச்சை' என்று பரவலாகப் பேசும் சக்தியைத்தான் அன்று அவர் தனக்குத் தெரிந்த விதத்தில் செய்துவந்திருக்க வேண்டும்.

அந்த இரண்டாவது காலகட்டத்தில்தான், தான் வெகுவாக நம்பிய சித்தாந்தத்தை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தினார்.

முதல் 25 ஆண்டுகளை விஷயஞானம் பெறுவதில் செலவிட வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளில் அறிவு வளர்ச்சியை நிறுத்தாமல் அதுநாள் கற்றவற்றைப் பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க வேண்டும்; கடைசி 25 ஆண்டுகளில் மனவளர்ச்சியைத் தொடர்ந்து கொண்டே சம்பாதித்த பணம், புகழ், பெருமைகளைச் சரியான முறைகளில் செலவழிப்பதன் மூலம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் - என்பது கடைசிவரை அப்பா பின்பற்றிய கொள்கை என்றுகூடச் சொல்லலாம்.

வெளிநாடுகளில் அப்பாவின் புகழ் கொடிகட்டிப் பறந்ததும், இந்திய நாட்டுக்காக ஓயாமல் உழைக்க முன்வந்ததும், ஒத்துழைப்பு கிட்டாமல் பல திட்டங்கள் முடக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

★★★★★


நன்றி: அப்பா, சிவசங்கரி; புஸ்தகா டிஜிடல் மீடியா வெளியீடு

எழுத்தாக்கம்: சிவசங்கரி

© TamilOnline.com