அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர்
தலச்சிறப்பு
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த திருவிழாவுக்குக் காரணமான தலம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்தி எதிர்ப்புறமாகத் திரும்பி உள்ளது. நவக்கிரகங்கள் இத்தலத்தில் இல்லை. அர்த்தமண்டப வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவார பாலகர்களாக நிற்கிறார்கள். இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 48வது தலம்.

கோயில் அமைப்பு
இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்தால் நந்தி, நம்மை நோக்கித் திரும்பி இருப்பதைக் (கிழக்கு நோக்கி) காணலாம். உள்கோபுர வாயிலில் நுழைந்தால் வாயிலின் இடப்பக்கம், வேடன் வில்வ பூஜை செய்த கதை (அடுத்த பத்தியில் இந்தக் கதை உள்ளது) சுதைச் சிற்பமாக உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சப்தகன்னியர் சன்னிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சன்னிதியும், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் சன்னிதியும் காணலாம்.



தலபுராணம்
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு ஒரு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன், முனிவரைத் தாக்கினான். உடனே சிவபெருமான் புலிவடிவம் எடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தின் கீழேயே அமர்ந்துகொண்டது. இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று அஞ்சிய வேடன், ஒவ்வொரு வில்வ தளமாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

அவை புலி வடிவிலிருந்த சிவன்மீது விழுந்தன. அன்று மஹா சிவராத்திரி. ஊண் உறக்கமின்றிச் சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையும் அறியாமல் கிடைத்ததால், இறைவன் அவனுக்குக் காட்சி தந்து மோட்சம் அளித்தார்.

அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்தது. யமன் அங்கு வந்தான். நந்தி தேவர் இதைப் பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி யமனை விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்திமீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனைத் தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க, அவன் விடுதலை பெற்றான். பின்பு ஆலயம் எதிரில் குளம் அமைத்து, சிவனை வழிபட்டுச் சென்றதாகக் கூறுகிறது தலபுராணம்.



வழிபாடு
வில்வவனேசுவரரை வழிபட்டால் துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். மன அமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பக்தர்களுக்கு அது நிறைவேறும்.

வேதமொடு வேள்விபல வாயினமி
குத்துவிதி ஆறுசமயம்
ஓதியுமு ணர்ந்தும் உளதேவர்தொழ
நின்றருள்செய் ஒருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்க அழகால்
மாதவி மணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே.

- திருஞானசம்பந்தர்


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com