'லாஸ்யா'வின் உயிர்கொண்ட சிற்பங்கள்!
'சித்திரம் பேசுதடி!' என்று பாடினார் கவிஞர். 'சிற்பமும் பேசுமா?' என்று நீங்கள் கேட்டால், லாஸ்யா நடனக் குழுமம் மார்ச் 12, 2005 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின் லூயி பி. மேயர் அரங்கில் வழங்கவிருக்கும் 'உயிர்கொண்ட சிற்பங்கள்' (Living Sculptures) நடன நிகழ்ச்சிக்கு வாருங்கள்.

இந்த நடன நிகழ்ச்சி, இந்தியாவின் பிரபல கோவில்கள் பலவற்றில் விளங்கும் சிற்பங்கள் சொல்லும் அற்புதக் கதைகளை நமக்குக் கூறவிருக்கிறது. கிழக்குக் கரையில் அமைந்த 'கொனாரக்' சூரியக் கோவில் கூறும் கதை, சிதம்பரத்தில் நடராசப் பெருமானின் நாட்டியம் கூறும் ரகசியம், அஜந்தா ஓவியங்கள் அமைதியாய்க் கூறும் 'ஜாதக'க் கதைகள், மேலும் ஹலேபீடு மற்றும் கஜுராஹோ கோவில்களின் அற்புதச் சிற்பங்கள் வழங்கும் காவியங்கள் - இவற்றையெல்லாம் நாட்டிய வடிவில் கண்முன்னே பார்க்க 'உயிர் கொண்ட சிற்பங்கள்'.

லாஸ்யா இயக்குனர் வித்யா சுப்ரமணியனின் நடன அமைப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்நிகழ்ச்சியில் அவருடன், லாஸ்யாவின் மாணவியர் பலரும் இணைந்து வழங்குகின்றனர். சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி நாட்டியக் கலைஞர் ராதிகா சங்கர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆஷா ரமேஷின் இனிய குரலுடன் சாந்தி நாராயணன் (வயலின்), ராஜா சிவமணி (வீணை), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் பின்னணி வழங்குவர். மீனாட்சி ஸ்ரீனிவாசன் நட்டுவாங்கம் செய்யவிருக்கிறார்.

சிற்பங்கள் உயிர்பெற்று உலாவுவதைக் கண்டு, நீங்கள் கல்லாய்ச் சமைந்தால் வியப்பதிற்கில்லை. வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

அருணா

© TamilOnline.com