பா. செயப்பிரகாசம்
எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா. செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய செயப்பிரகாசம், தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றினார். ஆனந்த விகடன், கணையாழி, தினமணி, காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தாமரை, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இடதுசாரி இலக்கிய இதழான மன ஓசையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவரது ஒரு ஜெருசலேம், காடு, மூன்றாவது முகம் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானவை. பள்ளிக்கூடம், மணல் என்பன இவரது நாவல்கள். .தெக்கத்தி ஆத்மாக்கள், வனத்தின் குரல், கிராமங்களின் கதை போன்ற கட்டுரைத் தொடர்கள் வாசக வரவேற்பைப் பெற்றன. சூரியதீபன் என்ற புனைபெயரிலும் இயங்கிவந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், 23 அக்டோபர் 2022 அன்று பா. செயப்பிரகாசம் காலமானார். (இவரைப்பற்றி வாசிக்க)

© TamilOnline.com