அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள்
தோற்றம்
அம்மணி அம்மாள், பொதுயுகம் 1735ல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரத்தில், கோபால் பிள்ளை-ஆயி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் அருள்மொழி.

சிவமும் தவமும்
இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு தனித்திருந்து தியானம் செய்து கொண்டிருப்பார்.

அம்மணி அம்மாளின் இயல்பைக் கண்டு பெற்றோர் அஞ்சினர். பருவம் வந்ததும் இவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய முயன்றனர். ஆனால், அம்மணி அம்மாளுக்கு அதில் நாட்டமில்லை. பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே, வேதனை தாங்காமல், சிவ நாமத்தை உச்சரித்தவாறே ஊரில் இருந்த குளத்துக்குள் குதித்துவிட்டார். பெற்றோர் பதறினர். ஊர் மக்கள் குளத்துக்குள் இறங்கிப் பலமணி நேரம் தேடினர். அம்மணி அம்மாள் குளத்துக்குள் இல்லை.



அற்புதச் சித்தர்
மூன்று நாட்கள் கழிந்த பிறகு அதே குளத்தில் இருந்து எழுந்து வந்தார் அம்மணி அம்மாள். ஊரார் வியந்தனர். பெற்றோர் அயர்ந்தனர். அம்மணி அம்மாளின் அருள்நோக்கத்தை உணர்ந்தனர். அந்த நாள்முதல் அம்மணி அம்மாள் சொல்லும் வாக்கு பலித்தது. தொடர் தவத்தால் பல சித்தாற்றல்கள் அவருக்கு வசப்பட்டன. மண்ணை எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுப்பார். அவை அவல் பொரியாகவும், இனிப்பு மிட்டாய்களாகவும் மாறிவிடும். நாடி வந்தவர்களின் நோய் போக்கிப் பல்வேறு அற்புதங்கள் செய்தார். பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலை அறிந்து சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தது. பிறர் அறியாமலேயே அவர்கள் மனதில் நினைப்பதை உணரும் ஆற்றலும் கொண்டிருந்தார். அவரது அளவற்ற ஆற்றலைக் கண்ட மக்கள் அனைவரும் வியந்து அவரைப் போற்றி வணங்கினர்.

அண்ணாமலையில்...
ஒரு சமயம் திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்த அம்மணி அம்மாள் அங்கேயே தங்கிவிட்டார். பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டார். பெண் துறவியாகத் தனித்து வாழ ஆரம்பித்தார். எப்போதும் சிவனையே தியானம் செய்து வந்தவருக்கு நாளடைவில் சிவ தரிசனமும் கிடைத்தது.



அம்மணி அம்மாளின் ஆலயத் திருப்பணி
அண்ணாமலை ஆலயச் சீரமைப்புப் பணியை மன்னர்கள் உட்படப் பலரும் மேற்கொண்டனர். ஆனால், ஆலயத்தின் வடபுறம் உள்ள கோபுரப் பணிகள் மட்டும் தடைப்பட்ட வண்ணமாகவே இருந்தன. பல முயற்சிகளை மேற்கொண்டும் அது பூர்த்தியாகாமலேயே இருந்தது.

அண்ணாமலையில் தங்கியிருந்த அம்மணி அம்மாளுக்கு அந்தக் கோபுரப் பணி நிறைவேறாமல் இருந்தது பெரும் குறையாகப் பட்டது. தானே முயன்று அதனைப் பூர்த்தி செய்ய உறுதி பூண்டார். தியானத்தில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் அனுமதியைப் பெற்றுச் செயலில் இறங்கினார்.

கோபுரப் பணிகளுக்காக வசதியுள்ள ஒவ்வொருவரிடமும் சென்று அதற்கான பொருளுதவி வேண்டுவார். சில செல்வந்தர்கள் பணத்தை ஒளித்து வைத்துவிட்டு இல்லை என்று பொய் புகல்வர். அதற்கு அம்மணி அம்மாள், "உள்ளே இந்தப் பெட்டியில், இந்தப் பையில், இந்த இடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது. நகைகளாக இவ்வளவு பொருள்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் இல்லையென்று பொய் புகன்றால் அது நியாயமாகாது. ஆலயத் திருப்பணிக்கு உதவுவது உங்கள் கடமை. அது குடும்ப வளர்ச்சிக்கும் உதவும்" என்பார். அவர்தம் ஆற்றலை அறிந்த செல்வந்தர்கள், உடனடியாக இயன்ற பொருள் கொடுத்து உதவுவர். அம்மணி அம்மாள் அவர்களுக்குத் திருநீறளித்து ஆசிர்வதிப்பார்.

அம்மாள் செய்த அற்புதம்
தினந்தோறும் ஆலயத் திருப்பணிகள் முடிந்தவுடன் வேலையாட்களுக்கு கூலிக்குப் பதிலாக விபூதியை அளிப்பார் அம்மணி அம்மாள். அவர்கள் அதனைப் பெற்று, வீட்டிற்குச் சென்று பார்த்தால், வேலைக்கேற்ற கூலித் தொகையாக அது மாறியிருக்கும். அந்த அளவிற்கு அற்புதமான அருளாற்றல் பெற்றவராக அம்மணி அம்மாள் விளங்கினார்.



அம்மணி அம்மாள் கோபுரம்
அம்மணி அம்மாளின் அயராத முயற்சியின் விளைவால் கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. 171 அடி உயரமுள்ள அந்தக் கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. காரணம், இரண்டு கோபுரங்களிலும் தலா 13 கலசங்கள் இருக்கின்றன. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள மேற்குக் கோபுரமும் (144 அடி) அம்மணி அம்மாள் கோபுரத்தை விட உயரம் குறைந்தவை ஆகும்.

தன்னந்தனியாக ஒரு பெண் செய்த திருப்பணியால் விளைந்த அக்கோபுரம் அவர் பெயராலேயே 'அம்மணி அம்மாள் கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது.

மகா சமாதி
அம்மணி அம்மாள், தன் வாழ்நாளில் பல்வேறு சித்துக்களைச் செய்தார். பலரது நோய்களை நீக்கினார். பலரது வாழ்க்கை உயரக் காரணமாக அமைந்தார். தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து நிறைவெய்திய இவர் 1875ம் ஆண்டு தைப்பூச தினத்தன்று, திருவண்ணாமலையில் மகாசமாதி ஆனார்.

சமாதி அமைவிடம்
இவரது ஜீவசமாதி, திருவண்ணாமலையில் அஷ்டலிங்கங்களில் ஒன்றான ஈசான்ய லிங்கத்தின் எதிரே, ஈசான்ய ஞான தேசிகர் மடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகள் உடையதாக இச்சமாதிக் கோவில் காட்சி தருகிறது. இங்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு அளிக்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், நோய்களை நீக்கிப் பல்வேறு வாழ்க்கைப் பேறுகளை அருள்வதாகவும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள் திருவடிக்கே சரணம்!

பா.சு. ரமணன்

© TamilOnline.com