யோக நரசிம்மர் ஆலயம், சோகத்தூர்
அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் பழைய சாலையில் தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர் யோக நரசிம்மர், தாயார் அமிர்தவல்லி. தீர்த்தம்: லட்சுமி சரஸ் தீர்த்தம். கோயில் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பழமையானது. இங்கு இறைவன் நித்திய கருட சேவையாக, சிறிய சிலையில் உள்ளார். இந்த கோவில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தலப்பெருமை
அசுரர்களிடம் வேதங்கள் அனைத்தையும் இழந்த சோகத்துடன் இத்தலத்திற்கு வந்த பிரம்மதேவர், லஷ்மி சரஸ் தீர்த்தத்தில் நீராடி வேதங்களைத் திரும்பப் பெற மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். பகவான் விஷ்ணு பிரம்மாவிற்கு தரிசனம் அளித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் சோகத்தைத் தீர்த்து வைத்த தலம் என்பதால் இந்த இடம் 'சோஹ பகத் ரூபம்' என அழைக்கப்பட்டது. நாளடைவில் பல மாற்றமடைந்து, தற்போது 'சோகத்தூர்' என்று அழைக்கப்படுகிறது.

ஆலயம், காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பெருமாளுக்கு அதிகாலையில் திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. சுவாதி உற்சவத்தில் ஏராளமான அடியவர்கள் இறைவனைத் தரிசனம் செய்கின்றனர். டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் மார்கழி, வைகுண்ட ஏகாதசி மற்றும் ஹனுமத் ஜெயந்தியிலும் இவ்வாலயத்தில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.



இத்திருவிழாக்களில் புடவைகளைச் சமர்ப்பித்து அமிர்தவல்லித் தாயாரிடம் பிரார்த்தனை செய்து பக்தர்கள் நல்ல பலன்களை அடைகின்றனர். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரும் விசேஷமானவர். புதன், சனிக் கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால் எதிரிகள் தொல்லை ஒழியும்; மனதில் தைரியம் பிறக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை.

மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் நரசிம்மருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. திருமணத் தடை, தோஷங்கள் நீங்க, இங்குள்ள லஷ்மி சரஸ் தீர்த்தத்தில் நீராடி, நரசிம்ம ஸ்லோகம் சொல்லி, பானகம் நைவேத்தியம் செய்து மனமுருகிப் பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

யோக நரசிம்மர் சாந்த நரசிம்மராக இவ்வாலயத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. திருமணத்தடை நீங்க, வியாதிகள் நீங்கி மேன்மை அடைய, பகைவர்கள் தொல்லை ஒழிய பக்தர்கள் இங்கு வேண்டி வழிபடுகின்றனர்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்லோகம்:
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே


முயற்சிகள் நிறைவேறாமல் தடங்கல்கள் ஏற்பட்டால் பக்தியோடு இந்த மந்திரத்தைச் சொன்னால் பலன் கிட்டும்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com