பூண்டி அரங்கநாத முதலியார்
தோற்றம்
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூரில் பூண்டி சுப்பராய முதலியாரின் மகனாக 1844ல் அரங்கநாத முதலியார் பிறந்தார். தந்தை சுப்பராய முதலியார் உயர்கல்வி கற்றவர். சென்னை ராஜதானி நீர்ப்பாசனக் கால்வாய் கம்பெனியின் மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை இருப்புப்பாதை நிறுவனத்தின் தலைமைக் கணக்கராக நியமனம் செய்யப்பட்டு அவிநாசிக்கு மாற்றப்பட்டார். அங்கு கொள்ளையர்களால் அனைத்துப் பொருட்களையும் இழந்ததால் மீண்டும் சென்னைக்குக் குடியேறினார்.

கல்வி முயற்சிகள்
அரங்கநாத முதலியாருக்கு வீட்டிலேயே பாடங்கள் சொல்லித் தரப்பட்டன. தமிழும் ஆங்கிலமும் கற்றார். 13 வயதில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். நன்கு பயின்று சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற்றார். 1863ல், மெட்ரிகுலேஷன் படிப்பில் பள்ளியில் முதலாவதாகத் தேறினார். அதே ஆண்டு பச்சையப்பன் கல்லூரி நிர்வாகிகள் அளித்த பொருளுதவி மூலம் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. பயின்றார். கல்லூரியின் தலைவராக இருந்த எட்வர்ட் தாம்ஸன் அரங்கநாதன் மீது மிகுந்த அக்கறை காட்டினார். ஆங்கிலம், கணிதம் இரண்டிலும் வல்லவரானார் அரங்கநாத முதலியார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் வென்றார்.

பணி வாய்ப்புகள்
தொடர்ந்து பி.ஏ. பட்டம் பெற்ற அரங்கநாத முதலியார், தாம் பயின்ற மாநிலக் கல்லூரியில் உதவி கணக்காசிரியராக நியமிக்கப்பட்டார். 1870ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அடுத்து, கும்பகோணம் கல்லூரியில் கணக்காசிரியராகச் சேர்ந்தார். சில காலம் அங்கு பணியாற்றிய பின் பெல்லாரி மாவட்டப் பள்ளி ஒன்றில் முதல்வராக நியமிக்கப்பட்டார். அங்கு சில காலம் பணியாற்றியவர் மீண்டும் சென்னைக்கு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்ப்பட்டார்.

பூண்டி அரங்கநாத முதலியார் கணிதம் மட்டுமல்லாது ஆங்கிலம், தமிழ் , வரலாறு, தத்துவம் போன்றவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார்.

கடவுள் உண்டா?
தம் இல்லத்தில் அடிக்கடி புலவர்களைக் கூட்டி இலக்கியக் கூட்டங்களை நடத்துவார். ஒரு சமயம் இவரது இல்லக் கூட்டத்தில் அரங்கநாத முதலியார் உரையாற்றினார். அவ்வுரையில், "எல்லாம் இயற்கையே; கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை வேண்டுவதன்று" என்று கூறினார். அந்தக் கூட்டத்திற்கு வள்ளலாரின் தலைமை மாணவராக இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வந்திருந்தார். அவர், அரங்கநாத முதலியாரின் கூற்றை மறுத்து, கடவுளின் தன்மை, பெருமை, மேன்மைகளைப் பற்றி விளக்கிக் கூறி, கடவுள் கொள்கையைத் திறம்பட நாட்டினார்.

அதனைக் கேட்ட அரங்கநாத முதலியார், அங்கேயே பலர்முன் அதனை ஏற்றுக் கொண்டார். வேலாயுத முதலியாரை வணங்கி, அவரையே தனது ஆசானாகக் கொண்டார். அவரிடமிருந்து மேலும் பல இலக்கண, இலக்கியங்களைக் கற்றறிந்தார். திருமணம் செல்வக்கேசவராய முதலியாரின் தந்தையான திருமணம் சுப்பராய முதலியாரிடமிருந்தும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவர்கள் மட்டுமல்லாது காஞ்சிபுரம் சபாபதி முதலியார், புரசைவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார் போன்றோரை அணுகி உரையாடித் தமது ஐயங்களைப் போக்கிக் கொண்டார். ஒருமுறை கேட்டவற்றை மறவாமல் நினைவில் நிறுத்தும் திறமை அரங்கநாத முதலியாருக்கு இருந்தது.கச்சிக் கலம்பகம்
பல தமிழறிஞர்களுடன் பழகித் தமிழறிவு வாய்க்கப் பெற்ற பூண்டி அரங்கநாத முதலியார் 'கச்சிக் கலம்பகம்' என்ற செய்யுள் நூலை இயற்றினார். அதனை சென்னை தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் அக்காலத் தமிழ்ப் புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார். தொடர்ந்து ஆறு நாட்கள் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தது. முதல் செய்யுளை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரின் மாணவர் திருவாரூர் சின்னசாமிப் பிள்ளை அரங்கேற்றம் செய்தார். இரண்டாம் நாளில், புலவர் தண்டலம் பாலசுந்தர முதலியார் அரங்கேற்றம் செய்தனர். மூன்றாம் நாள் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மயிலாப்பூர் முருகேச முதலியாரும், நான்காம் நாள், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரும், ஐந்தாம் நாள் திருமணம் சுப்பராய முதலியாரும் அரங்கேற்றினர். சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள் ஆறாம் நாளில் அரங்கேற்றத்தை முடித்து வைத்தார். உ.வே. சாமிநாதையர் உள்ளிட்ட பலரால் மிகவும் பாராட்டப்பட்ட நூல் 'கச்சிக் கலம்பகம்.' அதற்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் உ.வே.சா. இந்த நூல் பின்னர் கல்லூரி வகுப்பிற்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்டது.

பொறுப்புகள்
அரங்கநாத முதலியாரின் கணித மேதைமையையும், ஆங்கிலப் புலமையையும் கண்டு வியந்த ஐரோப்பியர்கள் பலர் அவருக்கு நண்பர்களாகினர். அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடியும், டென்னிஸன், ஷேக்ஸ்பியர் போன்றோரது படைப்புகளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசியும் அவர்களது நன்மதிப்புக்கு உள்ளானார் அரங்கநாத முதலியார். வில்லியம் வில்சன் ஹண்டர் உருவாக்கிய 'இந்திய கெஸட்டீயர்' (The Imperial Gazetteer of India) நூல் தொகுப்புக்குப் பல விதங்களிலும் முதலியார் உறுதுணையாக இருந்தார். 1890-ல், சென்னை மாகாண நிர்வாகத்தால் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைத்தலைவராகப் பூண்டி அரங்கநாத முதலியார் நியமனம் செய்யப்பட்டார். 1892-ல் சென்னை நகரின் ஷெரீஃப் ஆகப் பதவியேற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் செனட் சின்டிகேட் உறுப்பினராக இருந்தார். சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசரால் செப் ஆக நியமிக்கப்பட்டார். அதுநாள்வரை அப்பதவி ஆங்கிலேயர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. முதன்முதலில் அப்பதவி அளிக்கப்பட்ட இந்தியர் மற்றும் தமிழர் பூண்டி அரங்கநாத முதலியார்தான்.

பி.ஏ. பட்டதாரிகள் சங்கத்தை முதன்முதலில் அமைத்தவர் பூண்டி அரங்கநாத முதலியார். இவர், சென்னை கல்விச்சபை உறுப்பினர், நேஷனல் இந்தியன் அசோசியேஷன் சென்னைக் கிளையின் செயலர், திராவிட பாஷை சபையின் தலைவர், விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டின் உறுப்பினர், சென்னை பாடநூல் கழக உறுப்பினர், லிடரரி சொசைட்டி உறுப்பினர், சிலம்ப விளையாட்டுச் சங்கத்தின் தலைமை உறுப்பினர் என இவை உள்படப் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். காஸ்மோபாலிடன் கிளப், யுனைடெட் நேவி கிளப் ஆகியவற்றில் அங்கத்தினராக இருந்தார். பில்லியர்ட்ஸ் விளையாட்டில் மிகத் தேர்ந்தவர்.

"அரங்கநாத முதலியாருடைய செல்வாக்கும் அரங்கேற்றப் பிரசங்கமும் சேர்ந்து எனக்குப் பலவகை நன்மைகளை உண்டாக்கின" என உ.வே.சா. தமது 'என் சரித்திரம்' நூலில் குறிப்பிட்டுள்ளார். உ.வே.சா.வுக்குத் தமிழறிஞர்கள் பலரின் தொடர்பு கிடைக்க அரங்கநாத முதலியார் உறுதுணையாக இருந்தார். உ.வே.சா.வின் சிந்தாமணி நூல் விற்பனைக்கும் உதவியிருக்கிறார். நன்கொடை திரட்டி அளித்துள்ளார். அக்காலத்தில் மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கான பாட நூல்களைப் பதிப்பிக்கும் பணி ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையை மாற்றி, தமிழ்ப் பண்டிதர்களுக்கு அத்தகுதி உண்டு என்று செனட் சபையில் வாதிட்ட அரங்கநாத முதலியார், மெட்ரிகுலேஷன் படிப்பிற்கான தமிழ்ப் பாடத்தைப் பதிப்பிக்கும் பணியை உ.வே.சா.வுக்கு வழங்கச் செய்தார். முதன்முதலில் அவ்வாய்ப்புப் பெற்றவர் உ.வே.சா.தான். பூண்டி அரங்கநாத முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார் உ.வே.சா. அக்காலத்து நீதிபதி சர். டி. முத்துசாமி ஐயர், டாக்டர் வில்லியம் மில்லர், டாக்டர் டங்க்கன் துரை உள்ளிட்ட பலர் அரங்கநாத முதலியாரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்ட பூண்டி அரங்கநாத முதலியார், டிசம்பர் 10, 1893-ல் காலமானார்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com