அக்டோபர் 2022: வாசகர்கடிதம்
செப்டம்பர் தென்றல் இதழில், சரியான லட்சியத்தை தேர்ந்தெடுத்து அதைச் சாதிக்க வாழ்நாள் முழுவதும் எடுக்கும் என்று தெரிந்தாலும் பூரண நம்பிக்கையோடு அதை தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தி பிரம்மாண்டமான வளர்ச்சி கண்டு, வெள்ளிவிழாக் கொண்டாடும் ஸ்ருதி ஸ்வர லயாவின் நிறுவனர் திருமதி அனுராதா சுரேஷ் அவர்களின் நேர்காணல் படித்தேன். அவருக்கு எமது வெள்ளிவிழா வாழ்த்துக்கள்.

ஜகதி கிருதி வழங்கும் பக்தி இசை காணொலியான 'அபிராமி அந்தாதி'யை யூடியூபில் கேட்டு ரசித்தேன். பாடல்களை அமைத்திருக்கும் ஒவ்வொரு ராகமும் அருமையாகவும் பொருத்தமாகவும் இருப்பதோடு மனக்கண்முன் அப்படியே ஒன்றிவிடுகிறது. இந்தச் சிறப்பான யோசனைகளைத் திறம்பட செயல்பட்டு செவியிற் சுவையூட்டுவது இசையின் பேராற்றல். வீணை இசையில் தேர்ந்த விதூஷி திருமதி சீதாலக்ஷ்மி, தமிழ் கவித்திறனும் கர்நாடக இசைத்திறனும் கொண்ட இசைக்கவிஞர் திரு அஷோக் சுப்ரமணியன், திருமதி காமாக்ஷி கல்யாணசுந்தரம், செல்வி ஸஹானா ஆகியோருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லி மகிழ்ச்சியடைகின்றோம்.

இலக்கிய உலகின் அனைத்துத் தளங்களிலும் பங்களிப்புச் செய்த தாமரைமணாளன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அவர்தான் பொன். பாஸ்கர தொண்டைமான் என்பது தெரியாது. அந்தக் காலத்திலேயே அவரின் படைப்புக்களை மிகவும் விரும்பிப் படிப்பேன். தென்றலுக்கு நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com