கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 10)
கீதாவிற்கும் அருணுக்கும் தூக்கிவாரிப் போட்டது. அந்த நூல்நிலைய அதிகாரி ஒரு பதட்டமும் இல்லாமல் இவர்கள் தேடிவந்த பிரதிகள் பற்றிக் கூறியதை அருணால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

"சார், அதெப்படி? நம்ம ஊர்ல பண்ற பொதுவேலை குறித்த ரெக்கார்டுகள் பொதுமக்களுக்குக் கிடைக்கிற மாதிரி இருக்கணுமே? இல்லேன்னா சட்டப்படி அது தப்பு, இல்லையா சார்? எங்களுக்கு இப்ப கருமலை பக்கத்துல நடக்கிற ஆய்வுபத்தித் தெரிஞ்சுக்கணும். எங்கேயுமே அதைப்பத்தி எந்த விஷயமும் இல்லை. என்னமோ ஒரு ரகசிய ஆய்வு மாதிரி இருக்கு."

அந்த நூல்நிலைய அதிகாரி பதில் சொல்லவில்லை. அருணால் கோபத்தை அடக்க முடியவில்லை.

"Sir, with due respect. This is not okay. நம்ம ஊர் அரசு வேலை ஆவணப் பிரதிகள்கூட நாம வச்சிக்கலைன்னா, ஏதோ சரியில்லை சார்."

"I am sorry, young man. உன்னுடைய கோபம் எங்களுக்கு புரியுது. எங்களால முடிந்த வரைக்கும், இருக்கிற எல்லா ஆவணங்களையும் சிறப்பா பராமரிக்க ராப்பகலா வேலை செய்யறோம். சமயத்துல இந்த மாதிரி இடைஞ்சல்கள் வரலாம்."

கீதா அந்த நூல்நிலைய அதிகாரி சொல்வதில் நியாயம் இருப்பதாக நினைத்தார். அருணை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

"அருண், வாப்பா வீட்டுக்குப் போகலாம். இவர்தான் விளக்கமா சொல்ராறே."

"இல்லைம்மா, இல்லை. நான் ஒத்துக்க மாட்டேன்."

கீதா நூல்நிலைய அதிகாரியைப் பார்த்து தர்மசங்கடமான நிலையில் தான் இருப்பதை ஒரு புன்னகையால் தெரிவித்தார்.

"சரி, அப்ப நான் கிளம்பறேன். வேற ஏதானும் வேணும்னா அந்த பெண்மணி கிட்ட கேட்டுக்கோங்க. ஆவணப் பிரதிகள் எங்களுக்குக் கிடைச்ச உடனேயே உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறோம்."

அந்த நூல்நிலைய அதிகாரி அங்கிருந்து கிளம்பினார். கீதாவைப் பார்த்து ஒருவிதப் பெருமிதம் கலந்த புன்னகை செய்துவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

இரண்டு அடி நடந்திருப்பார் அந்த அதிகாரி. அதற்குள் அருண், "சார், ஒரே ஒரு கேள்வி..."

"கேளப்பா."

"இந்த பிரதிகள் எடுக்கறதை நீங்க குறிப்பிட்ட கால இடைவெளிகள்ல பண்ணுவீங்களா?"

அருணின் கேள்வி அந்த அதிகாரிக்கு பிடித்திருந்தது. சந்தோஷமாக பதில் அளித்தார் அவர். "அநேகமா அப்படித்தான். ஆனா, அதுக்குப் பண ஒதுக்கீடு கிடைக்கணும். சில சமயத்துல நாங்க எதிர்பார்க்காம பண ஒதுக்கீடு கிடைச்சு ஒரு சில ஆவணங்களைப் பராமரிக்கச் சொல்லி வேண்டுகோள் வரும்."

"வேண்டுகோள்?" அருண் சந்தேகத்தோடு கேட்டான். "அப்படீன்னா?"

அதிகாரி தொடர்ந்தார். "அதுவா, சில சமயம் நம்ம ஊராட்சி மையத்திற்கு மிகவும் முக்கியமான கோப்புகள் ஏதுவாவது புதுப்பிக்கணும், இல்ல க்ளீன் அப் பண்ணணும்னா, எங்களுக்கு ஒரு மிக அவசர வேண்டுகோள் வரும். அந்த மாதிரி கோப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்."

அருணுக்கு எங்கிருந்தோ ஒரு பிடிப்பு கிடைத்தது. "சார், நாங்க தேடி வந்திருக்கிற கோப்புகளுக்கு வேண்டுகோள் வந்ததா? சும்மா தெரிஞ்சக்கலாம்னுதான்..."

"Correct, young man. நீங்க தேடி வந்த கோப்புகளுக்கு போன வாரம்தான் திடீரென்று பெரிய அளவில நிதி ஒதுக்கீடு கிடைச்சு எங்களுக்கு வேண்டுகோள் வந்தது."

"என்னது, போன வாரம்தானா?"

அருணும் கீதாவும் ஒருசேர அதிர்ச்சியுடன் கேட்டார்கள்.

"ஆமாம். அப்ப நான் கிளம்பட்டுமா? வரேன்."

அருணும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகத் தோன்றியது. அதெப்படி இணையத்தில் ஒருவிதமான செய்தியும் இல்லாமல் இருக்கும்? அதெப்படி திடீரென்று பெரிய போலீஸ் படையே கருமலைக்கு இவர்கள் போனபோது வரும்? எப்படி? எப்படி? எப்படி?

அருணுக்கு ஆயிரம் கேள்விகள் மனதில். ஒரு சிக்கல் என்னவென்றால், எதையும் திடமாகச் சொல்ல முடியவில்லை. எல்லாம் ஒரு யூகமாகத்தான் இருந்ததே ஒழிய, எந்தவித தடயமும் இல்லை.

வேறு எந்த விதத்தில் கருமலை ஆய்வுபற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று தெரியாமல், இருவரும் வீடு திரும்பினார்கள். அருணுக்கு வழியெல்லாம் அழுகையும் கோபமுமாக வந்தது.

"அம்மா, இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கம்மா."

"எனக்கும் அப்படித்தான் தோணுது கண்ணா. ஆனா, நம்ப எதையும் சாட்சியம் காட்டுற மாதிரி நம்மகிட்ட ஒன்றுமே இல்லையே."

"அம்மா, உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாராவது இருக்காங்களா, இது பத்தி கேக்கறதுக்கு?"

"யாருமே கிடையாதே கண்ணா. என் நண்பர்கள் எல்லாம் என்னை போன்ற விஞ்ஞானிகள்தான். யாரும் ஊராட்சி மையத்தில் வேலை பார்க்கிறவங்க கிடையாது."

"அப்ப, நம்மளால ஒன்னும் பண்ண முடியாது அம்மா. வேற வழி எதுவும் இல்லையா?"

அருண் மிகவும் வருத்தத்தில் இருந்தான். ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து தற்போதுவரை ஒரே ஆக்‌ஷன் மூவி போலே ஒன்று பின்னே ஒன்றாக அவர்களுக்கு வியப்பூட்டிக்கொண்டே இருந்தது. அவர்கள் கார் வீட்டுக்குள் திரும்பி வரும்போது, மிஸ் கிளென் கிட்டயிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருப்பதைப் பார்த்தார் கீதா.

"கீதா, நான் சாயந்திரமா பக்கரூவை வீட்டுல கொண்டுவந்து விடறேன். எனக்கு விடுவதுக்கு இன்னும் மனசே வரலை. :-)"

அருண் வண்டியிலிருந்து இறங்கினான். கீதா இன்னும் சில குறுஞ்செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார் வண்டியில் இருந்து. சோர்வோடு வீட்டுப்படி ஏறிய அருண், வீட்டுக் கதவிடுக்கில் ஓர் உறை சொருகி இருப்பதைப் பார்த்தான். அவனுக்குள் அடக்க முடியாத உற்சாகம் பீறிட்டது. அவன் நினைத்தபடி... அவன் ஆசைப்பட்டபடி... வந்த கடிதம்.

நெஞ்சு படக் படக் என்று எதிர்பார்ப்பில் அடித்துக்கொள்ள, அருண் அந்த உறையைக் கையில் எடுத்தான்.

"அன்புள்ள அருணுக்கு..." என்று அதன் மேலே எழுதி இருந்தது.

"அம்மா! அம்மா! லெட்டர்!"

அருணின் குரல் கேட்டதும் கீதா காரைவிட்டு இறங்கி வேகமாக அவன் அருகில் வந்தார். அருண் உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தான்.

"அன்புள்ள அருண்,

உனக்கு நான் மீண்டும் கடிதம் எழுதும் சமயம் வந்துவிட்டது. நீ அசகாய சூரனப்பா. உன்னை மிஞ்சி இந்த ஊருல ஒண்ணும் நடந்திட முடியாது. அந்தக் கருமலை பகுதியில இருக்கிற இயந்திரங்களைப் பார்த்து உனக்கு சந்தேகம் வந்திருக்கணுமே? அதைப்பற்றி உனக்கு ஒரு தகவல்கூட கிடைச்சிருக்காதே? நூல்நிலையத்தில் கூட தடயமே இருந்திருக்காதே?

காரீய விஷம் (Lead Poisoning) குறித்த ஆய்வு என்ற பெயரிலே ஒரு பெரிய மோசடி நடந்திட்டு இருக்கு. என்ன சொல்லு பார்ப்போம்? Yes, Fracking! பாறைகளின் கீழே இருக்கிற இயற்கை எரிவாயு (natural gas) எல்லாம் எடுக்கப் போறானுங்க. அதனால வரப்போகும் தீங்குகள் பத்தி ஒரு பயலுக்கும் கவலை கிடையாது. இதுக்குப் பின்னாடி யாருன்னு நினைக்கிற? நம்ம ஹோர்ஷியானா முதலாளி டேவிட் ராப்ளேயின் தம்பிதான். அவருக்காக இதையெல்லாம் கமுக்கமா யாருக்குமே தெரியாம பண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஊராட்சி மைய வேலையாள் ஒருத்தர் உன்போல ஆளு. ஆனா, ரொம்ப பயந்தவரு. அந்த ஊழியர் இந்தப் பொய் ஆய்வுபத்தி சந்தேகப்பட்டு கேள்விமேல கேள்வி கேட்கப்போய் அவரை வலுக்கட்டாயமா ராஜினாமா செய்ய வெச்சுட்டாங்க. பாவம் அந்த மனிதர், கிட்டத்தட்ட 40 வருடம் வேலை பார்த்து, இன்னும் சில வருஷதத்துல ஒய்வு எடுத்துக்க இருந்தாரு. இப்ப அவர் ராஜினாமா பண்ணினதுனால அவருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வுகால வெகுமானத் தொகை எல்லாம் போச்சு.

அவர்கிட்ட போய் இந்த லெட்டரைக் காட்டு. அவர் உனக்கு வேண்டிய உதவி எல்லாம் கமுக்கமா செய்து, இந்த மோசடி நடக்காம இருக்க உதவி பண்ணுவாரு.

இப்படிக்கு,
என்றும் உன் அபிமானன்

P.S. உனக்கு இன்னொரு தபால் மூலமாக அந்த ஊழியர் பற்றிய விவரம் வரும். யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. அவரே லெட்டர் அனுப்புவார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com