அபிமன்யு திருமணமும் போர் ஏற்பாடுகளும்
சௌரமான-சந்திரமான காலக் கணக்குகளில் ஏற்படும் கால வித்தியாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அஸ்தினாபுரப் பகுதியிலும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற இடங்களிலும் சந்திரமான மாசம் என்ற முறையில் காலம் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற பகுதிகளில் சௌரமான மாசம் என்ற முறை பின்பற்றப்படுகிறது, சௌரமான மாசம் எனப்படும் கணக்கீட்டு முறை, சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சந்திரமானமாசம் என்ற முறையில், காலம், சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திரனைப் பின்பற்றினால், அது மாதத்துக்கு முப்பது நாளாக இருக்காது; மாறாக 27 அல்லது 28 நாட்களாக இருக்கும். இதன் காரணமாக சந்திரமான மாசத்தைப் பின்பற்றுவோருக்கு ஒரு ஆண்டுக்கு 365 நாட்களுக்கு பதிலாக, 360 நாட்கள் மட்டும்தான் இருக்கும். இந்த வித்தியாசம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை 'அதிக மாசம்' என்று கணக்கிடப்பட்டு, சமன் செய்யப்படும் இப்போது, பீஷ்மர் சொல்வதை (கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பின் தமிழ் வடிவத்தை) பார்ப்போம். பீஷ்மர் சொன்னார், 'கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதின்மூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பன்னிரண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.'

காலச் சுழற்சியின் கணக்கில் ஏற்படும் வேறுபாடுகள் இவை. பாண்டவர்கள் வனவாசத்துக்கும் அக்ஞாத வாசத்துக்கும் போவதாய் ஒப்புக்கொண்டபோது, தருமபுத்திரர், அவர்கள் பகுதியில் வழங்கிவந்த சந்திரமானமாசக் கணக்கீட்டுப்படியே ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திலுள்ள காலக்கணக்கீடுகனைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர், சற்று அதிக காலம் எடுக்கும் சௌரமான மாசக்கணக்கையே அனுசரித்தார். இதனால், ஒப்புக்கொண்ட காலத்துக்குச் சற்று அதிகமாகவே பாண்டவர்கள் வனவாச, அக்ஞாத வாச காலத்தைப் பின்பற்றினர். இந்த உண்மையை தருமபுத்திரர் மட்டுமே அறிந்திருந்தார். மற்ற பாண்டவர்களுக்கு இந்தக் காலவித்தியாசம் பற்றித் தெரிந்திருந்ததா என்பதுபற்றிக் குறிப்பில்லை.

,இந்தக் கணக்கீட்டு வித்தியாசங்களைப் புரிந்துகொள்வதற்காக, ஓர் எளிய உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு கைதிக்கு ஒரு நீதிபதி பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்குப்படி, பத்தாண்டுகளுக்கு 3650 நாட்கள் ஆகின்றன. ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு வருவதால், அந்த ஆண்டு மட்டும் 366 நாட்கள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் குறைந்தது இரண்டு லீப் ஆண்டு வரும். ஒருவேளை தண்டனைக் காலத்தின் ஆரம்பமே லீப் ஆண்டாக இருந்துவிட்டால், மூன்று முறையும் இப்படி வரக்கூடும். ஆக, 3650 நாட்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூடுதலாக சிறைத் தண்டனையை அனுபவிக்கிறான்.

இந்த உதாரணத்தின் துணையோடு பாரதத்தின் காலக்கணக்கீட்டுக்குத் திரும்புவோம். பாண்டவர்கள் வனவாச, அக்ஞாதவாசங்களுக்குப் போக ஒப்புக்கொண்டது, அவர்கள் பகுதிக் கணக்கான சந்திரமான மாசக் கணக்குப்படி. பாண்டவர்கள் பின்பற்றிய சந்திரமான மாசக் கணக்குப்படிதான் அவர்கள் வனவாசம், அக்ஞாத வாசம் என மொத்தம் 13 ஆண்டுகள் நாட்டைத் துறந்து காடுகளிலும், யாருக்கும் தெரியாத வகையில் மறைவாகவும் வாழ ஒப்புக்கொண்டார்கள். ஆனால் சூரியனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காலக் கணக்குப்படி அவர்கள் வனவாசத்தையும் அக்ஞாத வாசத்தையும் கழித்திருப்பதனால் சந்திரமான மாசக் கணக்குப்படி அவர்களுடைய 'ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதின்மூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பன்னிரண்டு நாட்களும் அதிகமாக வரும். ஒருமுறைக்கு இருமுறை வாசித்து, இந்தப் பகுதியை விளங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படி, ஒப்புக்கெண்ட காலத்துக்கு மேலேயே பாண்டவர்கள் வனவாசத்தில் மாதக்கணக்கில் கழித்திருந்தபோதும், துரியோதனன் அவனே போட்ட சூதாட்ட நிபந்தனையின்படி, நாட்டைத் திரும்பக் கொடுக்க மறுக்கிறான். (உத்தியோக பர்வத்தில், கண்ணன் தூது வரும்போது, இதுவே, 'ஊசிமுனை குத்தும் அளவுக்கு ஓர் இடத்தையும் தரமாட்டேன்' என்று துரியோதனன் மறுப்பது வரும்.) அப்படியானால், பாண்டவர்களுக்குப் போரைத் தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை, அல்லவா?

பாண்டவர்கள், விராட நகரின் உபப்பிலாவியம் என்ற நகரில் தங்கியிருந்தார்கள். டாக்டர் K.N.S. பட்நாயக் அவர்களுடைய Chronology of Mahabharat கணக்கின்படி அவர்கள் ஒரு வருடம், 2 மாதம், 17 நாட்கள் உபப்பிலாவியத்தில் தங்கியிருந்தார்கள். அங்கு தங்கியிருந்த போதுதான் அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்காக, கண்ணபிரான், பலராமர், அபிமன்யு, சுபத்திரை போன்றோரை அழைத்து வந்தார். துந்துபிகள் முழங்க விராடன் அனைவரையும் வரவேற்றான். கண்ணபெருமானை நெடுங்காலம் பிரிந்திருந்த பாண்டவர்கள் அவரைத் தழுவிக்கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அவரைக் கண்டதும், திரௌபதி ஓடோடி வந்து அவர் காலில் விழுந்தாள். கண்ணீர் உகுத்தாள். பெருமான் அவளைத் தூக்கி நிறுத்தி, 'கல்யாணி, அழவேண்டாம். விரைவில் கௌரவர்கள் அழிவார்கள். யுதிஷ்டிரர் நாட்டை அடைவார். உங்கள் துன்பங்கள் நீங்கும். இது சத்தியம்' என்று உறுதியளித்தார். அப்போது இரண்டு அக்குரோணி சேனைகளை அழைத்துக்கொண்டு காசி மன்னன் அங்கே வந்தான். துருபதமன்னன் மூன்று அக்குரோணி சைனியங்களுடன் வந்தான். திருமணத்தின்போதே போருக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. யார்யார் எந்தப் பக்கம் என்று கட்சி பிரிவதும் நடந்தது. கிருஷ்ணர் முன்னிலையில், அபிமன்யு-உத்தரை திருமணம் இனிதே நடைபெற்றது. பலராமர், கிருஷ்ணர் போன்ற விருஷ்ணிகளும் பாண்டவர்களும், விராட நாட்டினரும் ஆசிகூறினர். விராட மன்னன் ஏராளமான பொருட்களையும் படைக்கலங்களையும் யானை, குதிரை போன்றவற்றையும் சீர் வரிசையாகக் கொடுத்தான். கண்ணபெருமான் தன் மருமகனுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொடுத்தார். அந்தணர்களுக்குத் தானம் வழங்கப்பட்டது. பாண்டவர்களும் விருஷ்ணிகளும் விராட நாட்டினரும், பாஞ்சால தேசத்தவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com