தென்றல் பேசுகிறது...
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரங்களில் மாணவர், சுற்றுலா போன்ற விசாக்களுக்காகக் காத்திருக்கும் நாட்கள் 800 நாட்களுக்கு, அதாவது 2 வருடங்களுக்கும், அதிகமாக இருப்பது பலருக்கும் பல நடைமுறைப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளது. அதிலும் பெருந்தொற்றுக் காலத்தில் ஏறக்குறைய 3 ஆண்டுகள் யாரும் எதற்காகவும் நாடுவிட்டு நாடு போக முடியாமல் இருந்தபின், இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பது அதிகச் சங்கடத்தைத் தருகிறது. அண்மையில் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பிலும் இது குறித்துப் பேசப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மட்டும் காத்திருப்புக் காலம் சுமார் 29 நாட்கள்தாம் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

இதற்கு நடுவில், 2022-ன் கோடைப் பருவத்தில், உலக நாடுகளிலேயே மிக அதிகமாக, அதாவது 82,000 மாணவர் விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். இது அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த விசாக்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் ஆகும். இதுவொரு நல்ல முன்னேற்றம்தான்.

★★★★★


கருக்கலைக்கும் உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துப் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் "மணமானவரோ மணமாகாதவரோ, பாதுகாப்புடனும் சட்டரீதியாகவும் தமது கருவைக் கலைத்துக்கொள்ள எல்லாப் பெண்களுக்கும் உரிமை உண்டு" என்று அழுத்தந் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத் தக்கது. சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இன்றைய பாரதம் தொலைநோக்குடன் தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

★★★★★


"இது போருக்கான யுகமல்ல. ராஜதந்திரம் மற்றும் கலந்து பேசுதல் மூலம் பிணக்குகளைத் தீருங்கள்" என்று பிரதமர் மோதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் நேரடியாகக் கூறிய திமிர்ந்த ஞானச்செருக்கை நாம் வரவேற்கிறோம். அதை அடுத்து உக்ரெய்ன் அதிபர் ஜெலன்ஸ்கி இணையம் வழியே ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதை ஆதரித்து, ரஷ்யாவுக்கு எதிராக, வாக்களித்தது. இந்தியா எந்த நாட்டின் கைப்பாவையும் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் இந்தச் செயல்பாடுகள் உலக அரங்கில் இந்தியர்களை நெஞ்சுநிமிர வைக்கின்றன.

★★★★★


ஓவியத்தையே தனது உயிர்மொழியாகக் கொண்ட தெய்வாவின் அழகிய படங்களும் நேர்காணலும் இந்த இதழுக்கு அணி சேர்க்கின்றன. ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளின் வியக்க வைக்கும் ஆன்மீக வாழ்க்கை, எழுத்தாளர் கு. ராஜவேலு குறித்த கட்டுரை, தி.சு. அவிநாசிலிங்கம் அவர்களின் மகாத்மா காந்தியுடனான நேரடி அனுபவம், ஹரிமொழி ஆகியவையும் படிக்கவும் சுவைக்கவும் பக்குவமானவை.

வாசகர்களுக்கு காந்தி ஜெயந்தி, விஜயதசமி, தீபாவளிப் பண்டிகை, நன்றி நவிலல் நாள் வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2022

© TamilOnline.com