பிளசன்டன்: பாரத சுதந்திர தின விழா
ஆகஸ்ட் 15, 2022 அன்று பிளசன்டனில் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இது பிளசன்டனில் கொண்டாடப்படும் முதலாவது இந்திய சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. மேயர் திரு. கார்லா பிரவுன் தலைமையில் நடந்த இந்த விழாவில், மாண்புமிகு பேராசிரியர் மற்றும் 'UPMA குளோபல்' சங்கத் தோற்றுநர் நீலு குப்தா அவர்கள் இந்தியக் கொடியை ஏற்றினார். நீலு குப்தா இந்திய ஜனாதிபதியிடம் பெருமைமிக்க 'ப்ரவாஸி பாரதீய சம்மான்' பெற்றவர் ஆவார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பல சமூக சிந்தனையாளர்களும் கலந்துகொண்டனர்.சாரணர் குழு கண்காணிப்பில் அமெரிக்க மற்றும் இந்தியக் கொடிகள் விதிமுறைப்படி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் பாடப்பட்டது. 500க்கும் மேல் இந்தியர்கள் கண்டு களிக்க வந்திருந்தார்கள். எல்லோருக்கும் லட்டு வழங்கப்பட்டது. நடனக் குழுவினர் இந்தியக் கொடியின் வண்ணத்தில் ஆடை உடுத்தி நடனம் ஆடினர். பாடல்கள், ஃப்ளாஷ் மாப் நடனம் ஆகியவை கோலாகலத்துடன் இடம்பெற்றன. இரண்டே வாரத்தில் முடிவெடுத்து நடந்தேறிய இந்த இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னால் 15 பேர் கொண்ட குழுவின் அயராத உழைப்பு மற்றும் திட்டமிடல் இருந்தது. இதை உதாரணமாக வைத்து மற்ற நகரங்கள் அடுத்த ஆண்டில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட ஆர்வம் காட்டியுள்ளனர்.

தகவல்: சங்கீதா,
பிளசன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com