பிரக்ஞானந்தா புதிய சாதனை
அமெரிக்காவின் மயாமியில் 'சாம்பியன்ஸ் செஸ் டூர்' நடைபெற்றது. தொடரின் ஒரு பகுதியாக 'கிரிப்டோ' கோப்பைக்கான மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் நடந்தது. ஐந்து முறை தொடர்ந்து வென்று சாதித்த 'உலக சாம்பியன்' நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட உலகின் முன்னணி வீரர்கள் எட்டு பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். ஆறு சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் (15), பிரக்ஞானந்தா (13) புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடத்தில் இருந்தனர்.

நான்கு போட்டிகள் கொண்ட ஏழாவது சுற்றில் கார்ல்சன், பிரக்ஞானந்தா மோதினர். இதில் நடைபெற்ற பல்வேறு சுற்றுக்களில் இருவரும் மாறி மாறி வென்றனர். இதனால் ஏழாவது சுற்று 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்வதற்காக, ஏழாவது சுற்று டை பிரேக்கருக்குச் சென்றது. முதல் போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 63வது நகர்த்தலில் கார்ல்சனை மீண்டும் வென்றார். அடுத்த போட்டியிலும் 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கார்ல்சனை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். மொத்தம் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் கோப்பையைக் கைப்பற்றினார். 15 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

ஏற்கனவே பிரக்ஞானந்தா, கார்ல்சனை 'ஆன்லைன்' வழியாக நடந்த 'ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ்', 'செஸ்சபிள் மாஸ்டர்ஸ்' தொடரில் இருமுறை வென்றிருந்தார். . தற்போது முதன் முறையாக இருவரும் நேருக்கு நேர் மோதினர். இதில் 'டை பிரேக்கர்' உட்படத் தொடர்ந்து மூன்று போட்டிகளில் கார்ல்சனை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார், பிரக்ஞானந்தா. (நிகழ்வைக் காண)

இளம் சாதனையாளருக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள்

© TamilOnline.com