சாகித்ய அகாதமி விருதுகள்: யுவபுரஸ்கார்
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை சாகித்ய அகாதெமி நிறுவனம் வழங்கிக் கௌரவித்து வருகிறது. 35 வயதுக்கு உட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க யுவபுரஸ்கார் விருது வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன், லக்ஷ்மி சரவணக்குமார், மனுஷி, சுனீல் கிருஷ்ணன், சபரிநாதன், ஷக்தி, கார்த்திக் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார் ப. காளிமுத்து .

தனது 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' கவிதைத் தொகுப்புக்காக இவ்விருது பெறுகிறார் அவர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள தானாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர், பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 25 வயதான காளிமுத்துவின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த நூல். டாக்டர் ஆர். ராஜேந்திரன், டாக்டர் டி. பெரியசாமி, டாக்டர் எம். வான்மதி உள்ளிட்ட நடுவர் குழு இப்படைப்பை விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.

விருது செப்புப் பட்டயமும் ரூ.50000 பரிசுத் தொகையும் அடங்கியது. விருது நிகழ்வு டெல்லியில் வரும் நவம்பர் 14 அன்று நடைபெற இருக்கிறது.

விருதாளருக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com