சாகித்ய அகாதமி விருதுகள்: பால புரஸ்கார் விருது
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சாகித்ய அகாதமி, 'பால புரஸ்கார்' விருதினை வழங்கி வருகிறது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கொ.மா. கோதண்டம், யெஸ். பாலபாரதி, மு. முருகேஷ் இவர்கள் வரிசையில் 2022ம் ஆண்டுக்கான விருது ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'மல்லிகாவின் வீடு' என்னும் நூல் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஜி. மீனாட்சி பத்திரிகையாளர். தினமணி, புதிய தலைமுறைக் கல்வி, மங்கையர் மலர் போன்ற இதழ்களில் பணியாற்றியவர். தற்போது ராணி வாராந்திரியின் ஆசிரியராக இருக்கிறார். இவர் ஏற்கனவே தனது படைப்பு முயற்சிகளுக்காக, 'சரோஜினி நாயுடு' விருது, 'கவிதை உறவு' இலக்கிய விருது, இலக்கிய வீதி அமைப்பின் 'அன்னம் விருது', சிறந்த பத்திரிகையாளருக்கான 'நாரதர் விருது', 'மகாத்மா காந்தி நூலக விருது' உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல், பெரியோர்களுக்கும் எழுதி வருகிறார்.

கவிஞர், எழுத்தாளர் செல்லகணபதி, டாக்டர் வேலு சரவணன், டாக்டர் வி. கட்டளைகைலாசம் உள்ளிட்ட நடுவர் குழு இப்படைப்பை விருதுக்கெனத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்விருது ரூ.50000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் கொண்டது.

விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் வரும் நவம்பர் 14 அன்று நடைபெற இருக்கிறது.

மீனாட்சிக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள்.

© TamilOnline.com