குரு நமசிவாயர்
ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. இவர் எங்கு பிறந்தார், எப்போது பிறந்தார் என்பது பற்றிய முழுமையான விவரம் கிடைக்கவில்லை. பிறவியிலேயே ஞானம் வாய்க்கப் பெற்றிருந்த அவர் தனக்கு ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தார். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் திருவண்ணாமலையை அடைந்தார். சதா பிரம்மத்தில் லயித்த பார்வை, உடல், உடை என்ற உணர்வுகளின்றித் தன்னை மறந்த தவத்தில் ஆழ்ந்து இருந்த குகை நமசிவாயரைக் கண்டார். அவரே தனக்கான குரு என முடிவு செய்த இளைஞர் நமசிவாயம், அவர் சென்ற இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றார்.

குகை நமசிவாயருக்குப் பசித்தால் ஏதாவது வீட்டின் முன் போய் நிற்பார். கையை மெல்லத் தட்டுவார். 'அருணாசலம்! அருணாசலம்!' என்பார். அவ்வீட்டில் உள்ளவர் வெளியே வருவர். குகை நமசிவாயரின் அகல விரிந்த திருக்கரங்களில் அவ்வீட்டுப் பெண்கள் கூழோ பழங்கஞ்சியோ ஊற்றுவர். அதனை இவர் உறிஞ்சிக் குடிப்பார். பின் போய்விடுவார். சில சமயம் அந்தக் கை வழியே மிகுதியான கஞ்சி கீழே வழியும். அதனைக் கையேந்திக் குடிப்பார் இளைஞர் நமசிவாயர். குரு உண்டு எஞ்சிய 'குரு சேஷத்தை' எந்தவித மன வேறுபாடும் இல்லாமல், 'குருப் பிரசாதம்' என்று கருதிக் குடிப்பார்.

இப்படியே நாட்கள் நகர்ந்தாலும் குகை நமசிவாயர், இளைஞர் நமசிவாயத்தைச் சீடராக ஏற்றுக் கொள்ளவுமில்லை. வேண்டாம் என்று புறந்தள்ளவும் இல்லை.

சமயங்களில் மலையில் அமர்ந்திருப்பார் குகை நமசிவாயர். சில சமயம் படுத்துக் கொண்டிருப்பார். இளைஞர் நமசிவாயமோ, குகை நமசிவாயரின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பார். அவர் உறங்கிய பின்தான் உறங்கச் செல்வார்.

ஒருநாள்... குருவின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார் இளைஞர் நமசிவாயம். பின் திடீரென்று பெருங்குரலில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். திடுக்கிட்ட குகை நமசிவாயர், "நமசிவாயம், ஏன் சிரித்தாய், என்ன விஷயம்?" என்றார் சற்றே கோபமாய்.

"ஒன்றுமில்லை குருவே! திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் சதிர்க் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே வேகமாக நாட்டியமாடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டாள். அதனைப் பார்த்த மக்கள் எல்லாம் சிரித்தார்கள். அதுதான் நானும் சிரித்தேன்" என்றார்.

திகைத்துப் போனார் குகை நமசிவாயர். "இவன் இருப்பது இங்கே! ஆனால் காட்சி என்னவோ அங்கே! என்ன ஆச்சர்யம்!" என்று நினைத்தவர், "நமசிவாயம் நீ இப்போது இருப்பது வேறு நிலை!" என்று கூறி ஆசிர்வதித்தார். அதுமுதல் சீடராக இளைஞர் நமசிவாயத்தை ஏற்றுக் கொண்டார்.

தில்லை திரைச்சீலையில் தீ
ஒருநாள்... ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார் குகை நமச்சிவாயர். அருகே பவ்யமாக இளைஞர் நமசிவாயம் நின்று கொண்டிருந்தார். திடீரென தன் வேஷ்டி நுனியை இரண்டு கைகளாலும் கசக்கினார். எரிந்து கொண்டிருக்கும் எதையோ அணைப்பது போல பாவனை செய்தார்.

குகை நமசிவாயருக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னப்பா இது, என்ன ஆயிற்று? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" கேட்டார்.

"குருவே, தில்லைக் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியை ஒரு எலி இழுத்து வந்து திரைச்சீலை அருகே போட்டுவிட்டது. அதனால் திரைச்சீலை தீப்பற்றியது. அதைக் கண்ட குருக்கள் அந்தத் தீயை அணைத்தார். உடனே நானும் அது மேலும் எங்கும் பற்றிப் பரவி விடாமல் இருக்க அணைத்தேன்" என்றார் பணிவாக.

ஆச்சரியம் அடைந்த குகை நமசிவாயர் எழுந்து கொண்டு, "நமசிவாயம் நீ இருப்பது மிக மிக உயர் நிலையப்பா, மிக மிக உயர்நிலை" என்று சொல்லி ஆசிர்வதித்தார். இளைஞர் நமசிவாயமும், குருவின் பாதங்களில் பணிந்து வணங்கினார்சோதனையும் சாதனையும்
சோதனை இல்லாமல் சாதனை ஏது?. இளைஞர் நமசிவாயருக்கும் அவரது குருவால் மிக உச்சக்கட்ட சோதனை ஒன்று வந்தது. அது குருவின் பெருமையையும், சீடரின் உயர்வையும் உலகிற்கு உணர்த்துவதாய் அமைந்தது.

ஒருநாள் தாம் உண்ட உணவு செரிக்காமல் திடீரென உமிழ்ந்தார் குகை நமசிவாயர். அருகில் இருந்த இளைஞர் நமசிவாயம், அதைக் கீழே சிந்தாமல், உடனடியாக அருகில் இருந்த மண்கலயத்தில் தாங்கிப் பிடித்தார். பின் குரு சீடரை நோக்கி, "நமசிவாயம். இதனை மனிதர் காலடி படாத இடமாகப் பார்த்து கொட்டி விட்டு வா" என்றார். உடன் குருவின் வாக்கை, திருவாக்காக ஏற்றுக் கொண்ட, இளைஞர், அந்த மண் கலயத்தைச் சுமந்தவாறே வேகமாக வெளியே சென்றார். பின் சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.

சீடரிடம் குரு, "அப்பா, மனிதர் காலடி படாத இடத்தில் கொட்டினாயா?" என்றார்.

"ஆம் குருவே, கொட்டிவிட்டேன்..." என்றார் இளைஞர் நமசிவாயம் மிகவும் பணிவாக.

"எங்கே கொட்டினாய்?" வினவினார் குரு.

"இதோ இங்கே, இதை விட மனிதர் காலடி படாத இடம் இந்த உலகத்தில் வேறு ஏது குருவே" என்று சொன்னவாறே, தன் வயிற்றுப் பகுதியை சுட்டிக் காட்டினார் சீடர்.

அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்று விட்டார் குகை நமசிவாயர். "என்ன ஆச்சரியம். என்ன மன உறுதி, என்ன வைராக்கிய சிந்தை! எந்த அளவிற்கு இவர் என்மீது மதிப்பு வைத்திருந்தால், நான் உமிழ்ந்ததைப் பற்றிச் சிறிதுகூட அருவருப்பு இல்லாமல் இப்படிச் செய்திருப்பார்?" என்று எண்ணினார். கண்களில் கண்ணீர் பெருக்கியவாறே இளைஞர் நமசிவாயத்தைக் கட்டிக் கொண்டார் "அப்பா, நீ இனிமேல் சீடன் நமசிவாயன் இல்லை. குரு. ஆமாம் குரு நமசிவாயர்!" என்று ஆரத்தழுவி ஆசி கூறினார். பின் சீடனை நோக்கி, "அப்பா, ஆன்ம ஞானத்தைப் பொறுத்த வரையில் நீ மிக உயர்நிலையை அடைந்து விட்டாய், ஆகவே நீ இனி சிதம்பரம் திருத்தலம் சென்று அங்கேயே வசிப்பாயாக!" என்று கூறினார்.

அதைக் கேட்ட குரு நமசிவாயர் கண்கலங்கினார். "குருவே தாங்கள் தானே எனக்கு இறைவன், நான் தங்களை விட்டு எப்படிப் பிரிவேன். நான் தங்கள் காலடியில் இருக்கவே ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னை வெளியில் எங்கும் சென்று இருக்குமாறு கட்டளையிடாதீர்கள்" என்று வேண்டிக் கொண்டார். அதற்கு குகை நமசிவாயர், "அப்பனே, ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக் கட்ட முடியாது. கட்டவும் கூடாது. ஆகவே நீ சிதம்பரம் செல்வதுதான் சிறந்தது. மேலும் அங்கே உன்னால் பல வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது. ஆகவே அங்கேயே செல்க!" என்று கூறி ஆசிர்வதித்தார்.

குருவின் வார்த்தையைத் தட்ட முடியாததாலும், குரு வாக்கிற்கு மறு வாக்கு இல்லை என்பதாலும், சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் குரு நமசிவாயர். பல மைல் தூரத்தை நடந்தே சென்றார். மிகவும் களைப்புற்றார். செல்லும் வழியோ பெரும் காடாக, மனித நடமாட்டமே இல்லாது இருந்தது. எனவே அருகில் உள்ள மரத்தடியில் சற்று நேரம் இளைப்பாறினார். என்னதான் பெரிய மகான் என்றாலும், சில இயற்கை விஷயங்களுக்கு எல்லோரும் கட்டுப்பட்டுத் தானே ஆக வேண்டும்! அவருக்குப் பசித்தது. யாரை அழைப்பார் உதவிக்கு, இறைவனைத் தவிர! அழைத்தார் அந்த உண்ணாமுலை அம்மனை, ஆண்டவனுக்கே அருள்பாலிக்கும் அன்னலட்சுமியை, அகில உலகுக்கும் படியளக்கும் அன்னபூரணியை உள்ளம் உருகி அழைத்தார்.

அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே
உண்ணாமுலையே உமையாளே - நண்ணா
நினைதோறும் போற்று செய நின்னடியர் உண்ண
மனைதோறும் சோறுகொண்டு வா


என்ற பாடலைப் பாடி அம்பிகையை அழைத்தார். சேய் அழைத்தால் தாய் சும்மா இருப்பளா? ஓடோடி வந்தாள். தனக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலையும், பிற உணவு வகைகளையும் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து, அயர்ந்து கிடந்த தன் அடியவரின் பசியை ஆற்றினாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. அருணாசலேஸ்வரர் ஆலயத்திலோ ஒரே களேபரம். "அம்பாளுக்குப் பிரசாதம் படைக்கப்படும் தங்கத் தாம்பாளத்தைக் காணவில்லை. யாரோ திருடிக்கொண்டு போய் விட்டார்கள்" என்று ஆலய அர்ச்சகர்கள் கூறிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே பரபரப்பு.

திடீரென அருகில் நின்றிருந்த ஆலய அர்ச்சகர் ஒருவரின் மகன்மீது ஆவேசம் வந்து, "தாம்பாளம் எங்கும் போகவில்லை. சிதம்பரம் செல்லும் வழியில், ஓரிடத்தில் குரு நமசிவாயர் தங்கி இருக்கிறார். அவர் தம் பசி போக்க உணவு படைப்பதற்காக, தங்கத் தாம்பாளம் அமுதுடன், இறைவியால் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது." என்று கூறப்பட்டது. அதைகேட்ட தலைமைக் குருக்கள் உட்பட அனைவரும் ஆச்சரியமுற்றவர்களாய் அந்த இடத்துக்குச் சென்று பார்க்க, தாம்பாளம் அங்கே இருந்தது. அனைவரும் குரு நமசிவாயரின் பெருமையையும், அன்னையின் அருளையும் எண்ணி வியந்தனர்.

இவ்வாறு செல்லும் வழியில் எல்லாம் பசி எடுத்தால் இறைவியிடம் உணவு வேண்டுவார் குரு நமசிவாயர். உணவை எடுத்துக் கொண்டு இறைவியே அங்கு வருவாள். தருவாள். பின் மறைவாள். இது இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. பல தலங்களையும் தரிசித்துவிட்டு இறுதியில் சிதம்பரத்தை அடைந்தார்.

ஆலயம் சென்று அம்பலக் கூத்தனை தரிசித்தார். கனக சபாபதிக்கு என்றும் வாடாத பாமலைகளைச் சாற்றினார். தில்லை மூவாயிரவரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆலயத்தின் அருகே உள்ள திருப்பாற்கடல் என்னும் தலத்தில் தங்கினார். பலரும் அவரைக் காண வந்தனர். பொன்னையும், பொருளையும் அவருக்குக் காணிக்கைகளாகச் சமர்ப்பித்தனர். அதனைக் கொண்டு ஆலயத் திருப்பணிகள் பல செய்தார் குரு நமசிவாயர். இறைவனுக்கு சிலம்பு, கிண்கிணி, ஆலயக் கண்டாமணி போன்றவற்றைச் செய்து அழகு பார்த்தார். தன்னை நாடி வந்த பக்தர்கள் பலருக்கும் பல நன்மைகளைச் செய்தார். ஏழைகளது துயர் போக்கினார். பல பாடல்களை எழுதினார்.

அண்ணாமலை வெண்பா
குரு நமசிவாயர் பல்வேறு பாடல்கள் புனைந்திருந்தாலும், அவரால் பாடப்பெற்ற 'அண்ணாமலை வெண்பா' மிகவும் சிறப்புப் பொருந்திய ஒன்றாகும். பகவான் ரமண மகரிஷியால் மிகவும் புகழ்ந்து பாராட்டப் பெற்ற நூல் இது. அப்பாடல்களில் தன் குருவின் பெருமையையும், அருணாசலத்தின் அருமையையும் மிக அற்புதமாகப் பாடியுள்ளார் குரு நமசிவாயர்.

சீல முனிவோர்கள் செறியு மலை...
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை...
ஞான நெறி காட்டு மலை...
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை...


என்றும்

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை - அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை


என்றும்

நீதி தழைக்கு மலை ஞானத் தபோதனரை வா என்று
அழைக்கு மலை அண்ணா மலை.


என்றெல்லாம் பலவாறாக அவர் அண்ணாமலைத் தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இவ்வாறு ஒரு சீடராக, குருவாக, பக்தராக, ஆலயத் தொண்டராக, புலவராக, மக்களுக்கு நல்வழி காட்டிய மகாஞானியாகப் பல காலம் வாழ்ந்த குரு நமசிவாயர், சிதம்பரத்தில், திருப்பாற்கடல் குளக்கரை அருகே இருக்கும் திருப்பெருந்துறையில் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி நிலையம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வெகு அருகே, ஆலயத்தின் வடபுறத்தில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஸ்ரீ மடமும் உள்ளது.

குரு நமசிவாயர் திருவருள் போற்றி!

பா.சு. ரமணன்

© TamilOnline.com