ஒருத்தியும் மகனும்
அப்போது நான் ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குப் பள்ளி இறுதி வகுப்புக்குள்ள தமிழ், ஆங்கிலப் பாடங்களையே வைப்பது வழக்கம். தமிழ்ப் பாடத் தொகுதியில் பலருடைய பாடல்களும், ஆங்கிலப் பாடத்தில் பலருடைய பாடங்களும் இடம்பெறும். எனது தமிழ்ப்பாட நூலில் அந்த ஆண்டு பல நல்ல தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றன. "ஈன்றாளுமாய் எனக்கு எந்தை யுமாய்" என்று தொடங்கும் திருநாவுக்கரசருடைய திருப்பாதிரிப்புலியூர்ப் பதிகம் முதலில் தோத்திரமாக அமைந்தது. பின் பலப்பல பாடல்கள் இருந்தன. திருக்குறளும் நாலடியும் இடம்பெற்றன. பின்னர்க் கதைப்பகுதி வந்தது. அதில் ஒரு பகுதி திருருவிளையாடற் புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் என்பது அது.

அதில் ஒரு மாதுலன் தனக்கு மகப்பேறு இன்மையால் தன் தமக்கை மகனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு பொருள் அனைத்தையும் அவனுக்கே வைத்துவிட்டுச் சிலநாள் கழித்து இறக்கவும், அவனுடைய தாயத்தார் அவன் இறந்த உடனே எல்லாச் செல்வங்களையும் தங்களுடையதாகக் கைப்பற்றி அப்பிள்ளையையும் அவனைப் பெற்ற தாயையும் திண்டாட வைத்ததாகக் கூறப்பெறுகின்றது. பின் அலமந்த அந்த அன்னை தன்னைக் கவனிப்பாரின்மையின் கவன்று, மதுரைக் கோயிலில் உள்ள இறைவனிடம் சென்று முறையிட்டு, அழுது அழுது அப்படியே உறங்கிவிட, அவள் கனவில் இறைவன் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறப்பெறுகின்றது.

அவ்விறைவன் அவளை மறுநாள் நீதிமன்றம் சென்று முறையிடப் பணித்தான். அப்படியே அவள் செய்ய, மறுநாளே இறைவன் தானே மாமனாகச் சென்று வழச்குரைத்துத் தாயத்தாரைத் தலைகுனிய வைத்து எல்லாச் செல்வத்தையும் தன் மருகனுக்கு உரிமையாக்கி மறைந்தான் என முடிகின்றது. இது வெறும் கதை போன்றதுதான். என்றாலும் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் அதில் பின்னிக் கிடக்கின்றன என்னலாம். அதில் அத்தகைய சொக்கேசர் கோயிலில் சென்று இறைவனை மனமுருகப் பாடி நைந்து நைந்து கசிந்து நின்ற பாடல் என் உள்ளத்தைத் தொட்ட ஒன்றாகும். அதுவும் என் அன்னை அதன் உள்ளாழத்தைக் காட்டிய பிறகு என்னை உணர வைத்தது என்னலாம். அது எந்தப்பாடல்!

ஒருத்தி நான் ஒருத்திக்கிந்த ஒரு மகன் இவனும் தேறும்
கருத்திலாச் சிறுவன் வேறு களைகணும் காணேன் ஐய!
அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங்கடலே எங்கும்
இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார்படிய வீழ்ந்தாள்


என்ற பாடலே அது. ஆம். இந்தப் பாடல் என் தாயின் கண்களை வற்றாக் குளமாக்கின.

பொங்கல் விடுமுறையின்போது நான் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். எனது பல பாடங்களையும் வைத்து நன்முறையாகப் படிப்பது உண்டு. அப்போது சிறு கைவிளக்கு அல்லது லாந்தர் விளக்குத்தான். அந்த நாளில் சிறிது நேரமாயினும் நான் அந்த விளக்கின் முன் உட்கார்ந்து படித்தால்தான் என்னை அன்னையார் விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் அதட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒருநாள் அவர்கள் வீட்டுத் தெருவழியில் வாயிற்படியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார்கள். நான் முறையாகப் படித்துக்கொண்டே இருந்தேன். தமிழ்ப்பாடப் புத்தகத்தை எடுத்து, அந்த 'ஒருத்தி நான்' என்ற பாடலைப் பதம் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். படுத்திருந்த அன்னையார் எழுந்து வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். ஆமாம்! இங்கு ஒன்று சொல்லவேண்டும். என் அன்னையார் தமிழை நன்கு எழுதப் படிக்கக் கற்றவர்கள். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் எல்லாம் என் பாடல்களை முறையாகப் பயில ஆசானாக இருந்து எனக்கு உதவியவர்கள். சாதாரணப் பாடல்களையெல்லாம் பதம் பிரித்து உரை காணும் அறிவு பெற்றவர்கள். ஆகவே அவர்களுக்கு நான் படித்த பாட்டு நன்கு புரிந்துவிட்டது என்னலாம்.

என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்ட அன்னையார் அந்தப் பாட்டை மறுமுறை படிக்கச் சொன்னார்கள். நான் நன்றாக நிறுத்திப் பதம் பிரித்துப் படித்தேன். அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடித்துத் தலை நிமிர்ந்தேன். அவர்கள் கண்கள் குளமாகி இருந்தன. அவர்கள் அழுதுகொண்டே இருந்தார்கள். நான் 'அம்மா' என்றே அலறி விட்டேன். வீட்டில் வேறு யாரும் இல்லை. பாட்டி கோயிலுக்குப் போயிருந்தார்கள். அம்மா அழும் காரணம் எனக்குத் தெரியவில்லை. 'ஏன் அம்மா?' என்று கேட்கத்தான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் அழுகை நிற்கவில்லை. மென்மேலும் அழுதுகொண்டிருந்தார்கள். எனக்குக் காரணம் தெரியவில்லை. பாட்டைக் கேட்டு அம்மா அழுவானேன்? குழந்தை போலானேன். எனது கேள்விக்கு அவர்கள் பதில் கூறாது மேலும் மேலும் அழுதுகொண்டே இருந்தது என்னையும் அழவைத்தது. நானும் அழுதேன். விம்மி விம்மி அழுதேன். பதினைந்து வயதுக்கு மேலான குமரப் பருவமடைந்த பத்தாம் வகுப்பு பயிலும் ஒருவனாகவே நான் இல்லை. அழ அழ அம்மா அழுகை ஓய்ந்தார்கள்.

என்னை அப்படியே தழுவிக்கொண்டு, என் கண்ணைத் துடைத்தார்கள். அவர்கள் முகத்தை நோக்கினேன். இன்னும் தெளிவு பெறவில்லை. கண்கள் நீரை உகுத்துக்கொண்டே இருந்தன. விம்மலுக்கு இடையில் "ஏனம்மா?" என்று கேட்டேன். அவர்கள் ஒரு பெருமூச்சுடன் நீண்ட கண்ணீரையும் நிலத்து உதிர்த்துப் பேசினார்கள்.

"குழந்தாய் நீ படித்த பாட்டைப்பற்றி நினைத்தாயா? அது நம் வாழ்வைப் போன்று அல்லவா இருக்கிறது. இக்கதையை முன்னே புராணிகர் மூலம் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இந்தப் பாட்டை நான் கேட்டதில்லையே; குழந்தாய்! உன்னையும் என்னையும் அப்படியே ஒன்றாக அல்லவா இந்தப் பாட்டில் பிணைத்து வைத்திருக்கிறது. என்ன படித்தாய்? மறுபடியும் படி" என்றார்கள். நானும் "ஒருத்தி நான் ஒருத்திக்கு இந்த ஒரு மகன் இவனும் தேறும் கருத்திலாச் சிறியன் வேறு களைகணும் காணேன் ஐய" என்று படித்தேன். அம்மா என் வாயைப் பொத்தி விட்டு அலறியே அழுதுவிட்டார்கள். பிறகு மெள்ளத் தெளிந்து, 'குழந்தாய், இன்று நாம் வாழும் வாழ்க்கையை அல்லவா இந்த இரண்டு அடிகளும் காட்டுகின்றன. நான் ஒருத்தியாக இதோ வாழ்கின்றேன். எனக்கு நீ ஒருவனேதான் மகன். உனக்கு உடன்பிறந்த ஆணோ பெண்ணோ இல்லையே! நீயும் நல்லது கெட்டது அறியாத சிறுவனாக அல்லவா இருக்கிறாய். மேலும் நமக்குத்தான் வேறு யார் சுற்றத்தார் இருக்கிறார்கள்? பாவம் ஒன்றுக்கும் பற்றாத பாட்டி எங்கோ மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். நாம் இன்று துன்புற்றால் வேண்டாம் என்று அழும் கண்ணீரைத் துடைப்பார் யார் இருக்கிறார்கள்? அன்று அந்த மதுரைப் பெண் சொக்கநாதரிடம் அழுதது போல, நான் அன்றாடம் இந்த அம்பலவாணரிடம் முறையிட்டுக் கொண்டுதான் இருக் கிறேன். ஆனாலும் இப்படி அழகாகப் பாட முடியவில்லை. உன்னையும் என்னையும் சேர்த்து இப்படி அன்றைக்கே ஒரு புலவன் பாடி இருப்பான் என்று நினைக்கவில்லையே" என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கினார்கள்.

எனக்கும் அப்போதுதான் அப்பாட்டு என் வாழ்வை அப்படியே எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகிறது என்ற உண்மை புலனாயிற்று. நான் உடனே "அம்மா" என்று அலறி அவர்களை அப்படியே அணைத்துக் கொண்டேன். அவர்கள் கண்ணீர் என் முதுகின் மேல் சொட்டுச் சொட்டாக வீழ்ந்தது; என்றாலும் என்னை அழவேண்டாம் என்று அவர்கள் தேற்றிக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக அவர்கள் கண்களைத் துடைத்துக்கொண்டார்கள், என்னைத் தலை நிமிர்த்திக் "குழந்தாய் அழாதே! நாம் என்ன செய்யலாம். இப்படி வாழ்வில் தனிமையாக விடப்பட்டவர்களை ஆண்டவன் காப்பார்" என்றார்கள். ஆம்! அந்த வணிக அன்னையும் அன்றும் சொக்கநாதரிடம் தானே முறையிட்டாள். அவன் எல்லாம் அறிவான் என்பதை,

அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங் கடலே எங்கும்
இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார்படிய வீழ்ந்தாள்


என்று பரஞ்சோதியார்தான் எவ்வளவு அழகாகக் கூறுகிறார். ஆம், என் அன்னையும் அந்த வகையிலேயே எங்களை ஆண்டவன் காப்பாற்றுவான் என்ற தளரா நம்பிக்கை வைத்திருந்தார்கள். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவ்விறைவன் எங்களை மட்டும் பார்க்காதிருப்பானா! இப்படி அந்த இளம் வயதிலே திருத்துவார் இன்றியும், கேட்பார் இன்றியும், உதவுவார் இன்றியும் என்னை விட்டுவிட்ட அந்தக் கடவுளை நினைத்தாலும், அனைத்திலும் கைகொடுத்து 'அஞ்சேல்' என ஆதரிக்கும் தன்மையில் என் அன்னையார் எனது துன்பம் துடைக்க நிற்பதை அறிந்து உள்ளம் தேறினேன். ஆனால் என் அன்னையின் துன்பத்தை ஆற்றுவார் யார் என்றே என் உள்ளம் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதுதான் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த பாட்டியார் "எல்லாம் அவன் செயல், நம்மால் ஒன்றுமில்லை" என்று யாரிடமோ கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஆம்! என் அன்னையாரும் அந்த எண்ணத்திலேயே யாருடைய உடன் உதவியும் இன்றி என்னைத் தான் வாழும் வரையில் காத்து ஓரளவு வாழ்வில் உயர வழிசெய்து வைத்தார்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பாட்டும் என்னைவிட்டு அகலுமோ!

(அ.மு. பரமசிவானந்தம் எழுதிய இளமையின் நினைவுகள் நூலில் இருந்து)

அ.மு. பரமசிவானந்தம்

© TamilOnline.com