அபிராமி அந்தாதி - கேட்க, ரசிக்க, கற்க!
வெள்ளிதோறும், வைகறையில் வெள்ளி மறைந்து செங்கதிர் உதிக்கின்ற வேளையில் ஒலிக்கிறது அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடல் - யூட்யூபில்! பொருள் உணர்ந்து கேட்போர்க்கும் பொருளறியாது கேட்போர்க்கும் அபிராமி அன்னையின் அற்புத தரிசனத்தை மனக்கண்முன் காட்டுவன அபிராமி பட்டரின் அருள் ததும்பும் பாசுரங்கள்.

திருமதி காமாக்ஷியின் இனிய குரலில் அபிராமி அந்தாதியின் வரிகள் தவழ்ந்து வருகின்றன. மாணவி செல்வி ஸஹானாவின் குரலில் பக்தியின் வசீகரம் தொனிக்கிறது. சில நிமிடங்களே ஆனாலும், காலையில், வேறெந்த அலுவலையும் தொடங்கும் முன்னர், இசையும் தமிழும் இறைமையும் இயைந்த அமுதம் அருந்தக் கிட்டுவது பெரும்பேறு.. அடுத்த ராகத்தில் அடுத்த பாடலுக்கு அடுத்த வெள்ளி உதயம்வரை காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு வீணாவதில்லை.

ஆயினும், யூட்யூபில் பதிவாகி இருப்பதால், இதுவரை பதிவான பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுச் சுவைப்பதோடு மனப்பாடமும் செய்ய இந்த ஒருவாரம் உதவுகிறது.

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்து செவியிற் சுவையூட்டுவது இசையின் பேராற்றல். ஜகதி கிருதி (Jagati Kriti) வழங்கும் இந்த பக்தி இசைக் காணொலி தொடங்கும் போதே கண்முன் அன்னையின் திருவுருவம் அழகுச் சித்திரமாய்ப் பளிச்சிடுகிறது.

அன்று அமாவாசை! அன்றைய திதி யாதென அரசன் கேட்க, அபிராமியின் களங்கமற்ற நிலவை ஒத்த முகத்தின் காந்தியில் சொக்கியிருந்த அபிராமி பட்டர், பௌர்ணமி என்று பதிலளித்தார். அவர் பௌர்ணமியைத் தவிர வேறு நாளைக் கண்டதே இல்லை என்பது எவருக்குத் தெரியும்?அதற்குள் அம்பாளின் திருமுகம், உதிக்கின்ற செங்கதிராய்ச் சிவந்து விட்டது! என் கண்ணில் காட்டிய முழுநிலவை உலகுக்கும் காட்டு என்று வேண்டிக் கவிதை மாலை தொடுத்து அன்னையை அலங்கரித்தார் பட்டர். மனம் குளிர்ந்த அம்மையின் செவியில் ஒளிர்ந்த தாடங்கம் அமாவாசையின் கும்மிருட்டில் அனைவருக்கும் முழுநிலவைக் காட்டி வியப்பில் ஆழ்த்தியது! பக்தியும் இறைமையும் லயமாகும் இடத்தில் ஒளியின் உதயம் இயல்புதானே?

திருக்கடவூரில் அன்னை அபிராமியின் திருமுன் அன்று தொடுக்கப்பட்ட மாலைதான் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதியைக் கேட்டிராத பக்தர்கள் தமிழ்நாட்டில் அரிது. பலர் பலவித இசை வடிவங்களில் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஜகதி கிருதி வழங்கும் இந்தப் பதிவு, கேட்டு நெகிழ மட்டுமின்றி, கற்று மகிழவும் எளிதாக, ஆசிரியர் சொல்லித்தர, மாணவி கற்றுக் கொள்ளும் வடிவில் அமைகிறது.

வீணை இசையில் தேர்ந்த விதூஷி திருமதி சீதாலக்ஷ்மி ஒவ்வொரு பாடலையும் தனித்தனி ராகத்தில் அமைத்திருக்கிறார்கள். சங்கீத கலாநிதி மதுரை திரு T.N. சேஷகோபாலன் அவர்களின் மாணவியாக வளர்ந்த திருமதி காமாக்ஷி கல்யாணசுந்தரம் ஆசிரியையாகவும், செல்வி ஸஹானா மாணவியாகவும் பங்கேற்று நடத்தும் ஜகதி கிருதியின் இந்த நிகழ்ச்சி மிக அருமை. தமிழ்க் கவித்திறனும் கர்நாடக இசைத்திறனும் கொண்ட இசைக்கவிஞர் திரு அஷோக் சுப்ரமணியன் இதை வழி நடத்தி இருக்கிறார்.

முதல் பதிகத்தைக் கேட்க


விஸ் கோபால்,
ஷ்ரூஸ்பெரி, மாசசூஸெட்ஸ்

© TamilOnline.com