தென்றல் பேசுகிறது...
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கி ஏற்றுகிறது, இன்னும் ஏற்றுவேன் என்று மிரட்டுகிறது. முன்பே பலமுறை நாம் சுட்டிக் காட்டியது போல, வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை; உக்ரெயின் போர் காரணமாக கச்சாப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை தீப்பற்றி எரிகிறது. இதில் வட்டி விகிதத்தையும் ஏற்றினால், தொழிற்சாலைகள் கடன் பாரத்தைத் தாங்க முடியாமல் திணறுகிற நிலை ஏற்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுஜனம் விலையேற்றத்தினால் அவதிப்படுகிறது. மறுபக்கம் பார்த்தால், ஐக்கிய அரசும், மாநில, உள்ளூர் அரசுகளும் மிகையான வரிகள் மற்றும் அபராதங்களை விதிக்கின்றனவோ என்றும் தோன்றுகிறது. ஒருங்கிணைந்த, அறிவார்ந்த சிந்தனையும் நிர்வாகத் திறனும், எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் நலனைக் கருதும் பரிவும் இப்போதைய அவசரத் தேவை. இல்லையென்றால் பின்விளைவுகள் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம்.

★★★★★


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஜூன் 2022-ல் முடிந்த காலாண்டில் அடைந்துள்ள 13.5% வளர்ச்சி பெருமிதப்படத் தக்கது. இதே காலாண்டில் சீனா 0.4 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா 0.9% வளர்ச்சி குறைந்துள்ளது என்பதை ஒப்பிட்டால் இந்தியாவின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பது புரியும். மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு இந்திய அரசு, எல்லா வகைச் சவால்களையும் எதிர்கொண்டு, கத்தி முனையில் நடப்பது போல இந்தச் சாதனையைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது. மனம் திறந்து பாராட்டலாம்.

★★★★★


விரிகுடாப் பகுதியில் இந்தியக் கவின் கலைகளைக் கற்பிப்பதிலும் தரமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதிலும் முன்னோடி 'ஸ்ருதி ஸ்வர லயா' என்பதை அறிவோம். அதைத் தொடங்கி, 25 ஆண்டுகளாக அதன் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நேர்த்தியான பயிற்சிக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அனுராதா சுரேஷ் அவர்களுடனான நேர்காணல் பல நுண்மையான விஷயங்களை நம் பார்வைக்கு வைக்கிறது. 'சுத்தி சுத்தி வந்தீக' கதையைப் படியுங்கள், நீங்களும் சுத்தி சுத்தி வருவீக! வித்தியாசமான படைப்பு. குரு நமசிவாயர், தாமரைமணாளன், நீலாவதி ராமசுப்பிரமணியம், அ.மு. பரமசிவானந்தம் கட்டுரைகள் அரிய தகவல் களஞ்சியம்.

வாசகர்களுக்கு நவராத்திரி, ஓணம் திருவிழா வாழ்த்துகள்.

தென்றல்
செப்டம்பர் 2022

© TamilOnline.com