ஆகஸ்ட் 2022: வாசகர் கடிதம்
ஜூலை மாதத் தென்றல் 'முன்னோடி' பகுதியில் நாவல் உலகிலும் பத்திரிகை உலகிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த எழுத்தாளர், இதழாளர், தமிழ் நாவலிஸ்ட் பண்டிதை ஞானசிரோன்மணி விசாலாக்ஷி அம்மாள் பற்றி எழுதியிருந்தீர்கள். மேலும் அவர், பெண் எழுத்தின் முதன்மையான முன்னோடி என்பதை விவரித்து, ஸ்திரீ வித்யாப்ஸம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கொடுத்திருந்தீர்கள்.

"அவரது தமிழ் பாஷா நயம் வேறு எவராலும் ஸ்வீகரிக்க முடியாத விதமாகப் பரிமளித்துக் கொண்டிருந்தது" என்று அவரைப்பற்றிப் படிக்கும்போது பல வார்த்தைகள் வேறுவிதமாக, ரசிக்கும்படியாக சிறப்பாக அமைந்து இருந்தன. ப்ரக்யாதி, லோகோபகாரி, ஹிதகாரிணி போன்ற வார்த்தைகள் அர்த்தமுள்ள வித்தியாசமானவையாகப் பட்டன.

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுதியருளிய முருகப் பெருமானின் முற்பிறவி ரகசியம் அலமாரி பகுதியில் படித்து மகிழ்ச்சியடைந்தேன். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் சின்ன கதையின் உதாரணங்கள் மூலம் இன்றைய இளந்தலைமுறைக்கு எளிதாகப் பல விஷயங்களைப் புரியவைக்க முடிகிறது.

ஹரிமொழியில் பாண்டவர்களின் அக்ஞாதவாசக் கடைசி நேர வாழ்க்கையை மிக அழகாக விவரித்துள்ளது அருமை.
.
'புவா எப்போ வரும்' என்ற சித்ராங்கி அவர்களின் சிறுகதை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தென்றலின் அனைத்துப் பகுதிகளும் அருமை. நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com