எனது பர்மா வழிநடைப் பயணம்
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால் இறந்தும் போயினர். குடும்பத்தைத் தவறவிட்டுப் பிரிந்து போனவர்களும் உண்டு. அந்த அவல அனுபவத்தை பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா, 'எனது பர்மா வழிநடைப் பயணம்' என்ற தலைப்பில் எழுதினார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள்...

புறப்பாடு
நாங்கள் புறப்படுவதற்குத் தாயாரானோம். புறப்படுவதென்பது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. காரில், என்னென்ன சாமான்களை எடுத்துப் போட்டுக் கொள்வதென்பது ஒரு பிரச்னையாயிருந்தது. ஏற்கெனவே, மதிப்புள்ள சில பொருள்களைக் கப்பல்களில் சென்ற எங்கள் உறவினர்களிடம் கொடுத்து அனுப்பி யிருந்தோம். ஆயினும், அன்றாடம் புழக்கத்தில் இருந்த சாமான்கள் பல இருந்தன. அவற்றை என்ன செய்வது! 'திரும்பி வந்து விடுவோம்' என்ற எண்ணத்தில் அவற்றை வீட்டின் பல பகுதிகளிலும் பத்திரப்படுத்தி வைத்தோம். வழிப்பயணத்தில் உபயோகமாகுமென்று எங்களுக்கு அப்பொழுது தோன்றிய சில சாமான்களை மட்டும் அவசர அவசரமாகக் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டோம். முன் ஜாக்கிரதையாக என் வாழ்க்கைத் துணைவி தயாரித்து வைத்திருந்த ஆகாராதிகளையும் எடுத்துக் கொண்டோம்.

நான் ரங்கூனில் இருந்த பத்து வருஷ காலத்தில் அநேக நூல்களை விலை கொடுத்து வாங்கிச் சேகரித்தேன். நண்பர்கள் சிலர் அன்பளிப்பாகக் கொடுத்த நூல்கள் பல சேர்ந்தன. தவிர, நூல்களாக வெளிவருவதற்குத் தயார்ப்படுத்தி வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகள், நான் அவ்வப்பொழுது பல இடங்களில் நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகளின் குறிப்புக்கள், நூல்களைப் படித்து வரும்போது எடுத்துக் கொண்டு வந்த குறிப்புக்களடங்கிய நோட் புத்தகங்கள் இப்படிப் பலவும் இருந்தன.

இவையனைத்தையும் எப்படியாவது எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் முடியவில்லை. கையெழுத்துப் பிரதிகளையாவது எடுத்து வர முயன்றேன், அதுவும் முடியாது போயிற்று. மற்றப் பொருள்களை விட்டு வந்ததற்காக நான் வருந்தவில்லை. இராப்பகலாகச் சிந்தித்துச் சிந்தித்து எழுதிய கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வர முடியாமற் போனதுதான் என் உள்ளத்தை இன்னமும் அரித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் நான் என்ன செய்ய முடியும்? இப்பொழுதும் இந்த நூலின் மூலமாக பர்மாவிலுள்ள நண்பர்கள் பலரையும், கரங்குவித்துக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய கையெழுத்துப் பிரதிகள் எங்காவது உங்கள் கண்களுக்குத் தென்பட்டால், அவைகளைத் தயை செய்து எனக்கு அனுப்பிவையுங்களென்று.

வழியில் படித்துக் கொண்டு போவதற்கென்று, சில நூல்களை எடுத்து வைத்தேன். ஆனால் அனைத்தையும் எடுத்து வர முடியவில்லை.உபநிஷதங்களின் பிரதிகள், ரஸ்கின் பெருமகனுடைய ஒரு நூல், பிளேட்டோவின் 'குடியரசு' என்ற நூல், ஆகிய இவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள முடிந்தது.



சூரியோதய சமயம், நடு வீட்டில் என் வாழ்க்கைத் துணைவி, குத்துவிளக்கை ஏற்றி வைத்தாள். வீட்டிலிருந்த பாலை நன்றாகக் காய்ச்சி அந்தக் குத்துவிளக்குக்கு முன்னால் வைத்தாள். அதுவே அன்று ஓளி மயமான ஆண்டவனுக்கு நிவேதனமாக அமைந்தது. அந்த ஆண்டவனின் பிரதிநிதி போல், ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நமஸ்காரம் செய்தோம்.

வீட்டிலிருந்த பீரோக்கள், அலமாரிகள் ஆகியவற்றின் சாவிகளை அவை அவற்றின் வாயிலேயே வைத்து விட்டோம். வீட்டின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும் இருந்த இரும்புக் கிராதிகளாலான நுழைவாயில்களைப் பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்தோம்.

வீட்டிலுள்ள பொருள்களை விட்டு விட்டுப் போகிறோமே என்ற மனச்சஞ்சலம், எங்களுக்குச் சிறிதுகூட உண்டாகவில்லை. இருந்ததைப் பற்றியோ இனி இருக்கப் போவதைப் பற்றியோ நாங்கள் எண்ணிப் பார்க்கவில்லை. எண்ணமிட்டுக் கொண்டிருப்பதற்கு அவகாசம் ஏது?

ஊரில் புறப்பட இருந்தவர்கள் தயாராகி விட்டார்களென்று தெரிந்தது. நாங்களும் தயாராகி, தெருப் படிகளில் அடியெடுத்து வைத்தோம். வைத்ததுதான் தாமதம். அபாய அறிவிப்புச் சங்கு குரலெடுத்து விட்டது! இது அபசகுனமா? சுபசகுனமா? எந்தச் சகுனமாயிருந்தாலும் புறப்படுவதிலிருந்து இனிப் பின்வாங்க முடியுமா? ஜப்பானிய விமானங்கள் வட்டமிட்டுச் சிறிது நோத்திற்குப் பிறகு திரும்பிவிட்டன. அபாயம் விலகிய சங்கும் ஊதியது. புறப்பட்டோம்.

★★★★★


புரோம் நகரத்தில்...
1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், இருபத்தோராந் தேதி சனிக்கிழமை காலை சுமார் ஏழே முக்கால் மணிக்கு பக்டோவிலிருந்து நாங்கள் (பக்டோ வாசிகள் சிலர் சேர்ந்து) பன்னிரண்டு பேர் மூன்று கார்களில் ஒரு கோஷ்டியாய்ப் புறப்பட்டோம். ஒவ்வொரு காரிலும் நான்கு பேர் விகிதம் அமர்ந்திருந்தோம். ஒரு காரை, கோ.ரா.ராவும், மற்றொரு காரை வி.வே.ராவும் இன்னொரு காரைப் 'பா' என்ற நண்பரும் முறையே ஓட்டி வந்தார்கள். அனைவரும் பக்டோவுக்கு விடை கொடுத்து விட்டு, ஊர் எல்லையைத் தாண்டியபோது மணி எட்டு. சூரியன் தன் கடமையைச் சற்று சீக்கிரமாகவே செய்ய முற்பட்டு விட்டான்.

நாங்கள் முதலாவதாகச் சேரவேண்டிய இடம் பர்மாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாந்தளை என்ற நகரம். ரங்கூனிலிருந்து சுமார் நானூறு மைல் தொலைவிலுள்ளது ஆற்று மார்க்கமாகவும் ரெயில் மார்க்கமாகவும் செல்லலாம். தவிர, நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை வழியாகவும் செல்லலாம். ரெயில் மார்க்கமானாலும், நெடுஞ்சாலை வழியினாலும் ரங்கூனுக்குச் சற்று வடகிழக்கே சுமார் நாற்பத்தைந்து மைல் தொலைவிலுள்ள பெகு (பக்கோ) என்ற நகரத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்தப் 'பெகு' நகரம் ஒரு காலத்தில் வியாபாரச் செழுமையுடன் கூடிய ஒரு துறைமுகப் பட்டினமாயிருந்தது. தமிழகத்திலிருந்து அநேக வியாபாரிகள் இங்கு வந்து பொருள் பரிவர்த்தனை செய்து கொண்டு போனார்களென்றும், இவர்களுக்குப் பர்மிய அரசவையில் மிகுந்த செல்வாக்கு இருந்ததென்றும் பர்மாவின் சரித்திரம் கூறுகிறது.

நாங்கள் ரங்கூனை விட்டுச் சிறிது தூரம் வந்து கொண்டிருக்கையில், 'பெகு' வழியாகச் செல்ல வேண்டாமென்றும் ஜப்பானிய படைகள் இந்த வழியாக வரக்கூடுமென்றும், ஆதலால் நாங்கள் நேரே பெகுவுக்குச் சிறிது வடமேற்கேயுள்ள புரோம் நகருக்குச் சென்று அங்கிருந்து மாந்தளைக்குச் செல்லுதல் நல்லதென்றும் எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதற்குத் தகுந்தாற்போல், வழி நெடுக பிரிட்டிஷ் ராணுவ முஸ்தீபுகள் பலமாயிருந்தன.

இந்த எச்சரிக்கையைக் கேட்டு நாங்கள் ஸ்தம்பித்துப் போய் அங்கேயே நின்றுவிடவில்லை. அதிகப்படியாகச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்குமேயென்று யோசித்துக் கொண்டிருக்கவுமில்லை. புரோம் பக்கம் கார்களைத் திருப்பி விட்டோம். எப்படியாவது அன்றிரவுக்குள் புரோமுக்குப் போய்ச் சேரவேண்டுமென்று உறுதி கொண்டோம். கார்களின் இஞ்சின்கள் உறுமின. சக்கரங்கள் புழுதியைக் கிளப்பின; பறந்தன கார்கள் புரோமை இலக்காகக் கொண்டு.

பகல் சுமார் ஒரு மணிக்கு 'லெட்படான்' என்ற ஊருக்கு வந்தோம். இது ரங்கூனுக்கு சுமார் எழுபத்து மூன்று மைல் தொலைவிலுள்ளது. இங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் மடமும் கோயிலும் உண்டு. பொதுவாக, நகரத்தார், பர்மாவில் தாங்கள் லேவாதேவித் தொழில் செய்து வந்த முக்கியமான எல்லா ஊர்களிலும், மடங்களும், கோயில்களும், நந்தவனங்களும் அமைத்து வைத்திருந்தார்கள். கோயில்கள் யாவும் முருகக் கடவுளுடைய கோயில்களே. சம்பிரதாயமான திருவிழாக்கள் நடைபெறும். சில கோயில்களுக்கு வெள்ளி ரதங்கள், தங்க வாகனங்கள் - இப்படிப் பலவும் இருந்தன. திருவிழாக் காலங்களில் நடைபெறும் விமரிசைகளைப் பார்க்கின்ற யாருக்கும் தமிழ்நாட்டில் இருக்கின்றோமென்ற உணர்ச்சியே உண்டாகும். இங்ஙனமே மடங்களும் நூற்றுக்கணக்கான பேர் வசதியாகத் தங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தன. சில மடங்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளும் இருந்தன.

பர்மாவில் மட்டுமல்ல, தொழில் நடத்தச் சென்ற இலங்கை, மலேசியா, சைகோன் முதலிய எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்து வைத்திருந்தார்கள். இப்பொழுதும் இவை நடைபெற்று வருகின்றன.



'லெட்படான்' நகரத்தார் மடத்தில் தங்கி, கையில் கொண்டு வந்திருந்த ஆகார வகைகளை உட்கொண்டு சிறிது நேரம் களைப்பாறினோம். மடத்துக் காரியக்காரர்கள், எங்களுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார்கள். அவர்களுடைய ஊர், பெயர்களைக் கூட நாங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை. அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

எங்களுடைய அடுத்த இலக்கு புரோம் அல்லவா? இந்த நகரம், புரோம் மாவட்டத்தின் தலைநகரம். அதற்குரிய வசதிகளுடையது. ரங்கூனிலிருந்து ரெயில் மார்க்கமாக சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் இருப்பது. ஆற்று மார்க்கமாகவும் செல்லலாம். ஒரு காலத்தில், அதாவது கிறிஸ்து சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தி, இது, பர்மாவின் தலைநகரமா யிருந்ததாகச் சொல்வர். கி.பி. எட்டாவது நாற்றாண்டில் 'தலெய்ங்' என்ற ஒரு ஜாதியார் இதனை அழித்துவிட்டனர். அந்த அழிவின் மீது தான் புதிய புரோம் நகரம் ஏற்பட்டது. சிறப்பு வாய்ந்த இரண்டு புத்தர் கோயில்கள் இங்கு இருக்கின்றன.

இந்த புரோம் நகருக்கு நாங்கள் போய்ச் சேருகிற போது. இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது. அங்குள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராயிருந்த நா.ச. வீட்டில் இறங்கினோம். இரவு வெகு நேரமாகி விட்டிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் முகஞ்சுளிக்காமல் எங்களை அன்போடு வரவேற்றார்கள். எங்கள் வயிறு காலியாயிருந்தாலும், அவர்கள் காட்டிய அன்பு எங்கள் உள்ளத்தைக் குளிர்வித்தது. எங்களிலே ஒருவர், எங்களுக்கு ஆகாரம் தேடிக் கொண்டு வர எங்கெங்கோ அலைந்து பார்த்தார். ஆனால், அந்த அகாலத்தில் எங்கே என்ன கிடைக்கும்? வெறுங்கையோடு திரும்பி வந்தார்.

மறுநாள் (22-2-42) காலை சுமார் பத்தரை மணிக்கு மேற்கொண்டு எங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டியவர்களானோம், அதற்குள் வீட்டிலுள்ளவர்கள் எங்களுக்குச் சாப்பாடு செய்வித்ததோடு வழியில் உபயோகித்துக் கொள்ளும் பொருட்டு சாதமும் கொடுத்தனுப்பினார்கள் உணவுப் பொருள்கள் சரிவர அகப்படாத அந்த நெருக்கடியான நேரத்தில் கூட அந்த வீட்டினர் செய்த உபசரணை, விருந்தோம்பலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாயிருந்தது.

நாங்கள் புறப்படுவதற்குச் சற்று நேரம் முன்பு நாங்கள் வந்திருப்பது தெரிந்து ரங்கூனில் எங்களுக்குப் பழக்கமான ஒருவர் மேற்படி நா.ச. வீட்டுற்கு வந்தார். அவர் அரசாங்க உயர்தர உத்தியோகஸ்தர். ராவ்சாஹிப் பட்டம் பெற்றவர்; வீட்டில் சமையல் ஆள் முதல் வைத்துக் கொண்டு தோரணையாக வாழ்க்கை நடத்தி வந்தவர். பார்ப்பதற்கும் எடுப்பான தோற்றமுடையவர்; பரமசாது; வாயிலிருந்து துடுக்காக ஒரு வார்த்தை கூட வராது.

எங்களுக்கு முன்னாடியே அவர் ரங்கூனிலிருந்து புரோமுக்கு வந்திருக்கிறார். ஆனால் தங்குவதற்கோ ஆகாரத்திற்கோ வசதி கிடைக்காமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் தான் போலும் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குத் தேடி வந்து உடம்பெல்லாம் கூசிக்குலைய, கை நீட்டி, 'ஒரு கவளம் அன்னம் கிடைக்குமா?' என்று கேட்டார். அவர் கை நீட்டிக் கேட்டது, எங்கள் உள்ளத்தை உருக்கி விட்டது. இதற்கு மேல் அந்தக் காட்சியை எப்படி வருணிப்பது? வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி அவருக்குச் சாப்பாடு செய்வித்துவிட்டு, மேற்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

நூலை முழுமையாக வாசிக்க

வெ. சாமிநாத சர்மா

© TamilOnline.com