குலதெய்வத்தைத் தேடி...
குலதெய்வம் சரியாகத் தெரியாத கும்பலில் நானும் ஒருவன். 'எத்தனை தெய்வங்களுக்குச் செய்தாலும் குலதெய்வத்திற்குச் செய்யாவிட்டால் அது ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் விடும் மாதிரிதான்' - இந்த வார்த்தைகளைப் பெரியவாளின் 'தெய்வத்தின் குர'லில் படித்ததிலிருந்து மனதில் ஓர் உந்துதல். அதன் விளைவுதான் இந்தப் பயணமும் அனுபவமும்.

சித்தர்கள் வழிவந்த ஒருவர் இதைச் சரியாக சொல்வதாக ஒரு நண்பர் சொல்ல, அவரைக் காண, அந்த நண்பருடனே கிளம்பி சேலத்துக்கு சதாப்தி ரயில் பயணம், ஒரு சனி காலையில்.

இலவசத் தமிழ் நாளிதழில் முதல் பக்க அரசியல் செய்தி முடித்து, அடுத்த பக்கக் கொலை கொள்ளை செய்திக்குப் போவதற்கு முன் ஒரு சுகமான குட்டித் தூக்கம்… பின்னிருக்கையில் குறட்டை ஒலி மேல் ஸ்தாயிக்கு மாறி என்னை எழுப்பியது. பிஸ்கட், தேனீர், ஆங்கில நாளிதழ், காலை சிற்றுண்டி என்று வரிசையாகப் படையெடுக்க, சூழ்நிலை சுறுசுறுப்பானது.

எதிலும் முழுதாக மனம் தோயாமல், இன்றைய முயற்சியில் தேடலுக்கு விடை கிடைக்குமா என்ற எண்ணம் மனதில் ஊர்ந்து கொண்டே இருந்தது. இதில் ஏன் இத்தனை ஆவல்? ஏன் இந்தத் தேடல்? வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு தேடல்கள்தான் வாழ்க்கையா? சிலவற்றிற்கு விடை வரும், சில புதிராகவே நின்றுவிடும். அப்படியே வாழ்க்கை முடிந்து விடும். ஞானித்துவம் வராவிட்டால் எல்லாமே குறை வாழ்க்கைதான்.

நண்பனுடன் லௌகிக விஷயங்கள் அளவளாவி, நாளிதழ் மேய்ந்து முடிக்கும்போது சேலம் வந்துவிட்டது. ரயில் நிலையத்தில் இருந்து சிற்றுந்தில் ஏறி, தேடல் பயணம் தொடர்ந்தது. கோடை மழையின் ஆரோக்கியப் பச்சையில் மரங்கள், புல்வெளிகள் அணி வகுக்க, தூரத்தில் கம்பீர மலைகள். மனம், போக வேண்டிய இடத்தின் பாதையைத் தொடர்ந்ததில் எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன.

சிறிய தார்ப் பாதையில், ஓரத்தில் நின்ற பேருந்துநிறுத்த நிழல் குடையில் படுத்திருந்தவரைக் கேட்டு, அதை அணைத்துச் சென்ற ஒற்றையடி மண்பாதையின் குண்டு குழிகளில் ஏறி இறங்கி நத்தை வேகத்தில் நகர்ந்தோம்.

ஐந்நூறு அடி இடைவெளியில் ஆங்காங்கே ஒரு வீடு என்று கிராமம் தலை நீட்டியது. மண்பாதை முடிவில், மலை அடிவாரத்தை வருடி, கடைக்குட்டியாக அந்தக் காரைபூசிய செங்கல் வீடு. சிறிய திட்டி வாசல் கம்பி வாயிலைத் திறந்ததும், தூக்கம் கலைந்த கோபத்தில் வள்வள் என்ற பைரவர் குரைப்பில் கால்கள் பின்வாங்கின. சங்கிலியில் கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து, தைரியமாக முன்னேறினோம்.

வீட்டை அரை வலம் வந்தால், பின் பக்கத்தில் வீட்டின் நுழைவுத் தாழ்வாரம். இடது பக்கம் ஆடு மாடுகள், நின்றும், அமர்ந்தும், சாவகாசமாய் மென்று கொண்டிருந்தன. கோழிகள் சுறுசுறுப்பாய் பூமியில் கொத்திக் கொண்டிருந்தன. அவற்றின் ஒரே புருஷனாய் கர்வத்துடன் தலை நிமிர்ந்து ஒரு சேவல். மலை காடுகளில் தவழ்ந்து வந்த சுகமான காற்று மதிய வெய்யிலை முடக்கியது.

வலது பக்கத்தில் நீள சிமென்ட் திண்ணை. அதை ஒட்டினாற்போல் வாசலில், மஞ்சள் குங்குமம் அணிந்து, சற்றே திறந்திருந்த மரக்கதவு.

"ஐயா" என்ற குரலுக்கு ஒரு பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது. ஒரு துருதுரு அரை நிஜார் உருவம் அவளைத் தள்ளிக்கொண்டு வெளிவந்து, "யாரு வேணும்?" என்று அதிகாரமாகக் கேட்டது.

"பெரியவர் உடையாரைப் பாக்க வந்திருக்கோம், சென்னைலேந்து"

"தாத்தா கொஞ்சம் ஆடுங்கள மேய்ச்சுகிட்டு காட்டுக்குப் போனாரு. கூட்டியாரச் சொல்றேன்..." முடிப்பதற்குள், அரை நிஜார் சைக்கிள் மேல் பாய்ந்து குரங்கு பெடலில் காட்டை நோக்கிச் சிட்டாகப் பறந்தது.

"பாடம் சொல்லிக் குடுத்திட்டிருந்தேன். இதுதான் சான்ஸுன்னு ஓடிப் போய்ட்டான் பாருங்க. நீங்க இப்டி திண்ணைல உக்காருங்க. குடிக்கத் தண்ணி வேணுங்களா? டீ சாப்பிடறீங்களா?"

"நன்றிங்க. ஒண்ணும் வேண்டாங்க. நாங்க தண்ணி பாட்டில் கொண்டு வந்திருக்கோம். நீங்க என்னவெல்லாம் இங்க பயிரிடறீங்க?"

"நெல்லு, சோளம் தாங்க போட்ருக்கோம். வெண்டக்காய், கேரட், காய்கறி போடலாம். சரியா வெல குடுக்கமாட்டேங்கறாங்க . ஏமாத்துறாங்க."

"உங்களுக்கு ஒரு பையன் தானா?"

"பொண்ணு இருக்குங்க. பத்தாவது படிக்கறா. கம்ப்யூட்டர் கிளாசுக்கு போயிருக்கு."

"தாத்தா வராரு" சைக்கிளில் இருந்து குதித்துப் பறை சாற்றியது அரை நிஜார். இடுப்பில் கை வைத்துக்கொண்டு எங்களை வினோதமாக பார்த்தது.

முகத்தில் புன்னகையுடன், லுங்கியை பிரித்து விட்டுக்கொண்டே ஒரு பெரியவர் வந்தார். நரை முடி. சிறுசிறு முட்களாக மீசை, தாடி.

நாங்கள் எழுந்து நின்று "ஐயா வணக்கம்" என்றோம்.

"வணக்கம். உக்காருங்க. பன்னெண்டு மணிக்கு முன்னால சாமி சொல்றதில்ல. அதான் காட்டு வரைக்கும் போய் வந்தேன். ஏதாவது சாப்டீங்களா? இதோ இப்ப வந்துடறேன்" என்று அமைதி நடையில் வீட்டுக்குள் போனார்.

பத்து நிமிடத்தில், "ஐயா உள்ள வாங்க" என்ற அழைப்பை ஏற்று வீட்டின் முதல் கடையிலேயே இருந்த சிறிய பூஜை அறைக்குள் நுழைந்தோம்.

குளித்து, திருநீறு குங்குமம் அணிந்து, காவி வேட்டியில் வேறு மனிதராகக் கைகூப்பி நின்றிருந்தார். சுவரெங்கும் கடவுள் படங்கள். நடுவில் ஒரு சித்தர், மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் நிஜப்படம்.

"இவருதான் எங்க மூதாதையர் சித்தர். எங்களுக்கு மனசுல தெரியும் காட்சிகள் இவங்கோளோட அருள்தான். எங்க அப்பாகிட்ட பல வருஷம் கூட இருந்து, பூஜ செஞ்சு நான் இதை அடைஞ்சேன். இத நான் காசு பணத்துக்காக செய்யறதில்ல." ஒரு சிறிய அறிமுக உரையுடன் சொல்லி நிறுத்தினார்.

விளக்கு, கற்பூரம் ஏற்றி, கண் மூடி, கை கூப்பி, அமைதியாக வேண்டினார். அரை நிஜார் பேரன் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு கண் இமைக்காமல் முதல் முறையாகப் பார்ப்பது போல் கவனித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு முறை பார்த்திருந்தாலும் ஆர்வம் குறையவில்லையோ? இப்படித்தான் இவரும் கற்றிருப்பாரோ?

"அம்மா" என்ற குரல் அவரிடமிருந்து எழுந்து, அமைதியையும், என் சிந்தனைகளையும் கலைத்தது. மணிப்ரவாளமாக, புரியாத் தமிழில் பாட ஆரம்பித்தார். நீள்வட்ட வடிவில் இருந்த தங்க முலாம் பூசிய சிப்லா கட்டையின் ஒலி, கூடவே பயணம் செய்து புரிதலை கடுமைப் படுத்தியது. அனைத்துக் கடவுள்களையும் அழைக்கும் பாடல் என்று ஆங்காங்கே புரிந்தது.

இருபது நிமிட விடா அழைப்பின் பின் பாடல் நின்றது. பெரியவர் ஒரு சிறு பையிலிருந்து கொஞ்சம் சோழிகளை எடுத்தார். கையைச் சுற்றி சோழிகளை தரையில் வீசினார். ஒற்றைப் படை எண்ணிக்கை வந்ததா என்று பார்த்தார். மூன்று முறை செய்தார்.

"இரண்டு முறை ஒற்றைப் படை வந்து உங்களுக்கு உத்தரவு கிடைத்து விட்டது. உங்கள் வாழ்க்கையில் நடந்த மூன்று விஷயங்கள் நான் சொல்ல, அவை சரியாக இருந்தால், பின்னே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்" என்று சொல்லி என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.

ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார். முதல் விஷயம் சரி என்று நான் சற்றே வியப்புடன் ஆமோதிக்க, அடுத்தடுத்து இரண்டையும் அவர் சொல்ல, என் புருவங்கள் வில்லாய் மேலே வளைந்து, சரியாக நடந்தவை என்று சொல்ல, அவர் முறுவலித்தார்.

"என்ன வேண்டும்?" என்றார்.

"எங்கள் குலதெய்வம் எதுவென்று சரியாகத் தெரிய வேண்டும்."

"இப்போது மலையில் இருக்கும் சீனிவாசரைக் கும்பிடுகிறீர்கள். அவரை விடக்கூடாது. உங்களின் ஒரு சில பரம்பரைகள் கும்பிட்ட நம்பிக்கையின் பலன்கள் அங்கே இருக்கின்றன. மேலும், அவர்தான் எல்லா குலதெய்வங்களும் ஐக்கியமாகும் சக்தி. அவரை விடக்கூடாது. ஆனால், அதற்கு முன்னால் பல நூறு வருஷங்களாய் உங்கள் மூதாதையர் கும்பிட்டுப் பேணிய கடவுள் வேறு. நீங்கள் இப்போது இருக்கும் வீட்டிலிருந்து கிழக்கில் போய், வடக்கில் திரும்பி, மறுபடியும் மேற்கில் திரும்பினால் கிட்டத்தட்ட மூன்று மைல் தொலைவில் கையில் ஆயுதத்துடன் இருக்கும் மிகவும் புராதன அம்மன் கோவில். சப்த கன்னிகைகளும் அந்தக் கோவிலில் அமர்ந்திருப்பார்கள். மற்ற சில கடவுள்களும் இருப்பார்கள்…"

புரண்டோடி வந்த அலைகளாய் காதில் விழுந்தவற்றை உள்ளே அமர்த்திப் புரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆனது.

"அந்தக் கோவிலை அறிந்து கும்பிட்டால் முழு நிவர்த்தி ஆகும்" என்று முடித்து,

"எல்லாம் நல்லா நடக்கும்" என்று விடை கொடுத்தார்.

அவர் முடித்த வார்த்தைகளில் 'முழு நிவர்த்தி ஆகும்' என்ற வார்த்தைகள், பெரியவாளின் தெய்வத்தின் குரல் 'ஓட்டைப் பானை' வார்த்தைககளை எதிரொலித்தன.

ஏதோ ஒரு குறைவு, நிறைவுக்காக காத்திருக்கின்றதா? அந்தக் கோவிலில் பல பரம்பரைகளின் ஆசிகள், சந்ததிகள் வராமையால் தேங்கி நிற்கின்றனவா?

ரயிலைப் பிடிக்கவேண்டிய அவசர உந்துதலில் அங்கிருந்து சிற்றுந்தில் விரையும்போது, எண்ணங்கள் குழப்ப வட்டங்களாய் சுற்றின. எங்கே இந்த அம்மன் கோவில்? இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இத்தனை பரம்பரைகளை தாண்டி மறு தொடர்பு தொடங்கப்போகிறதா?

கேள்விக்குறிகளின் நடுவில் அடுத்த கட்டப் பயணம் தொடங்கியது...

குலதெய்வத்தைக் கண்டறிய, பெரியவர் வரையறுத்த வழி காட்டுதல்களை வைத்து, கூகிள் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங்கினாள் என் துணைவி.

இரண்டு தின மும்முரமான தேடலில் கிடைத்த முத்துக்களை ஆழ்ந்து ஆராய்ந்ததில், நான்கு கோவில்கள் சாத்தியக்கூறாக வெளிவந்தன. அவற்றை நேரில் சென்று பார்க்கும் பயணத்தை ஒரு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கினோம்.

நானும் என் உடன் பிறப்புகளும் பிறந்து, குப்பை கொட்டி குலாவிய திருவல்லிக்கேணியில் வீற்றிருந்த எல்லையம்மன் முதல் பார்வை. வளர்ந்த வயது நினைவுகளுடன் அந்தப் பேட்டைக்கு மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் சென்றதில், நிறைய மாற்றங்கள், ஒரு சில மாறாதவைகள், பார்வையில் பதிந்தன.

சிறு வயதுக் கண்களுக்கு பெரியதாகத் தெரிந்த வீதி, இப்பொழுது குறுகியிருந்தது. ஒரே ஒரு அடுக்காக இருந்த வீடுகள், பல அடுக்குகளாக உயர்ந்திருந்தன. புழங்கிய கடைகளைக் காணவில்லை. ஆனால், தெருவை அடைத்து பழம், காய்கறி, பூ கடைகள் விடாப்பிடியாய் இன்னும் இருந்தன. தள்ளு வண்டிகளில் சூடான சமோசா வியாபாரம் புதிய சேர்க்கை. நடுத்தெருவில் பிடிவாதமாக மாடுகள் நின்று, அமர்ந்து, மென்று கொண்டிருந்தன. இவற்றின் ஊடே கிடைத்த பாதையில், வாகனங்கள் அசராமல் பாம்பாக வளைந்து சென்று கொண்டிருந்தன. அலுப்பில்லாத திருவல்லிக்கேணி அப்படியே கலையாமல் இருந்தது.

எல்லையம்மன் கோவில் தெரு வழி இன்னும் குறுகியிருந்தது. 'Computer Training Institute', 'Ladies Beauty Parlour' போன்றவை ஒட்டிக் கொண்டிருந்த வீடுகளில் முளைத்திருந்தன. ஒரு மனித உடம்பே புகமுடியாத கதவின் மேல், 'Salesmen strictly not allowed' பலகை!

மாறாமல் அப்படியே இருந்த கோவில் முன்புறம் வரவேற்றது. முன்பு இருள் சூழ்ந்து பயமுறுத்திய பின் பிரகாரம், இப்போது நல்ல வெளிச்சத்துடன், பெரிதாக விரிவடைந்து, விநாயகர், முருகர், சிவனை அமர்த்தி இருந்தது. ஆனால் பெரியவர் கூறிய ஏழு கன்னிகைகள் இல்லை.

சிறு ஏமாற்றத்துடன், அடுத்து கடற்கரை சாலை அருகில் செங்கழுநீர் அம்மன் கோவிலை நோக்கிப் படையெடுத்தோம். அங்கேயும் ஏழு கன்னிகைகள் இல்லை. ஆனால் சூடாகப் பொங்கல் இருந்தது, ஏமாற்றத்துக்கு சற்று சமாதானமாக.

அடுத்தது மயிலையில் முண்டகக்கண்ணி அம்மன். மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டை ஒத்த உருவத்தில் குழைத்த சந்தனம் சாற்றி, குங்குமம் வைத்து, தலைக்குப்பின் நாக கிரீடத்துடன் அம்மன் உருவகம் செய்யப்பட்டிருந்தாள். கை இருக்கும் இடத்தில் திரிசூலம் சாய்ந்து நின்றது. சுற்றிவரும் பாதையில் ஏழு கன்னிகைகள் செங்கல் உருவகமாக சுவர் அருகில் அமைக்கப்பட்டிருந்தார்கள். எல்லாம் பொருந்தியது. ஆனால் பெரியவர் உரைத்ததுபோல் அம்மனுக்கு ஆயுதங்கள் ஏந்திய பல கைகள் இல்லை.

இறுதி முயற்சியாக நடை தூரத்தில் கோலவிழி அம்மன் கோவில். நுழைவாயில் சுவரின் மேல் சப்த கன்னிகைகள் பல வண்ணங்களில் வீற்றிருக்க, கோவிலின் சுத்தமான பரந்த வெளிப் பிரகாரம் வரவேற்றது. வெள்ளிக்கிழமை, கூட்டம் அலை மோதியது. அம்மன் சிலை பார்க்க முடியாமல் மக்கள் தலை மறைத்தது. சற்று திரும்பினால், தனி பீடங்களில் சப்த கன்னிகைளின் கருஞ்சிலைகள். வேறு வேறு வண்ணப் பாவாடைகளில், பூ அலங்கரிப்பில், கண்களை ஈர்த்து காட்சி அளித்தன.

இறுக்கிய கூட்டம் இளகிய நேரத்தில், அம்மனைக் காண முடிந்தது. சுவற்றில், பெரிய பத்ரகாளியாக அம்மன். இரு கைகள் ஆயுதங்களுடன் தெரிந்தன. விசேடதின ஒப்பனை மற்ற ஆறு கைகளையும் மறைத்திருந்தது. கொடிய சக்திகளை எரிக்க பெரிய கண்கள் வீரியமாகப் பார்த்தன.

காளியின் காலடியில் அருள் பொழியும் கண்களுடன் அமைதியாக கோலவிழி அம்மன்! உடலில் எதுவோ ஓடும் ஒரு உணர்ச்சி உண்டானது. நம்பிக்கைகள் இப்படித்தான் பிறக்கின்றனவோ!

பத்ரகாளியின் கோபத்தணிப்பு பலி வழிபாட்டை (ஆடு, கோழி) நிறுத்த, ஆதி சங்கரரால் ஏழாம் நூற்றாண்டில், சாந்த வடிவில் கோலவிழி அம்மன் திருநிலைப்படுத்தப் பட்டதாக கோவில் வரலாற்றைக் கூறினர். அம்மன் சிலையும், ஏழு கன்னிகைகள் சிலையும் பூமியின் அடியில் புதைந்திருந்த புராதனமான கண்டெடுப்புகள்.

மயிலை முழுதும் வனமாக இருந்த கால கட்டத்தில், மயிலையின் காவல்தெய்வமாக இருந்த காளி, இன்றும் அந்தக் காவல் பீடத்தில் இருக்கிறார். கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் போர்ச்சுகீசியர் சிதைப்பிலிருந்து தப்பி, கடலோரத்திலிருந்து, காளியின் அனுமதியில் மயிலையில் குடிவந்தார்கள். கபாலி கோவில் விழாக்கள், கோலவிழி அம்மன் பூஜையில்தான் தொடக்கம். அறுபத்து மூவர் அணிவகுப்பில், முன்முதல் தெய்வமாகக் கோலவிழி அம்மன் பவனி வருகிறார். மயிலையின் அரசி கோலவிழி அம்மன்.

முண்டகக்கண்ணி அம்மனும், கோலவிழி அம்மனும் இரு சாத்தியக்கூறு குலதெய்வப் பட்டியலில் நிற்க, பள்ளிக்காடு பெரியவரிடம் விவரங்களைப் பகிர்ந்தோம்.

அவர் வழிகாட்டலில், அம்மன் ஆயுதங்கள் ஏந்திய கைகள், ஏழு கன்னிகைகளின் தனிச் சிலைகள் இவற்றை ஆதாரமாக வைத்து குலதெய்வம் கோலவிழி அம்மன்தான் என்று கண்டறிந்தோம்.

இப்பொழுது எழுகிறது ஒரு வினா. இது இந்த பயணத்தின் முடிவா?

இல்லை. இது ஒரு நம்பிக்கைப் பயணத்தின் தொடக்கம்.

ரவீந்திரன் நடராஜன்,
சென்னை

© TamilOnline.com