ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கவரம் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் ரங்கநாதர். தாயார் பெயர் ரங்கநாயகி.

தலப்பெருமை
சுமார் 14 அடி நீளமுள்ள இந்தப் பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. மலைமேல் உள்ள இந்தக் கோயில் கருவறையில், பெருமாள் சயனக் கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவராகவும் அருள்பாலிக்கிறார்.

பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள குடைவரைக் கோயிலான இத்தலம், சிற்பிகளின் திறமைக்குச் சிறந்த சான்றாக, அழகான சிற்பங்களைக் கொண்டதாக இருக்கிறது.

குடைவரைக்குத் தென்புறத்தில் சற்றுக் கீழே உள்ள பாறையை ஒட்டித் தாயார் ரங்கநாயகியும், அங்குள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கையும் காட்சி தருகின்றனர். குடைவரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலுகால் மண்டபம், சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம் இவற்றுடன் ஐந்து அனுமனின் சிற்பங்களும் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி தீர்த்தம் என்ற சுனையும் அருகில் லட்சுமி கோயிலும் உள்ளது.

ஹிரண்யயகசிபு என்ற அசுர மன்னன் தன்னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்ககூடாது என்றும், நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டான். இதை அனைவரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சாநெஞ்சம் படைத்த அவனது மகன் பிரஹலாதன் உடன்படவில்லை. பெற்ற பிள்ளை என்றும் பாராமல் அவனைக் கொல்லப் பலவித வழிகளைக் கையாண்டான் ஹிரண்யகசிபு. இதனால் கோபம் கொண்ட பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனைக் கொன்று, பிரஹலாதனைத் தன்னருகிலேயே வைத்துக்கொண்டார்.



கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள்சதுரக் கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும் மேலும் சதுரமாகவும், நடுவில் வெண் பட்டையாகவும் உள்ளது. சதுரமான பகுதியில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின்சுவரில் கந்தர்வர்கள், பெருமாளின் நாபிக் கமலத்தில் உதித்த நான்முகன், கருடாழ்வார், மது, கைடபர் ஆகியோர் உள்ளனர். பெருமாளின் திருவடிக்குக் கீழே பூமிதேவியும், முழங்கால் அருகே பிரஹலாதனும், தலைக்கு மேல் சக்கரமும் உள்ளது. இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கிச் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது.

செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். ஒருமுறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆற்காடு நவாப்புடன் போருக்கு செல்லுமுன் இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ தேசிங்கு போருக்குச் செல்வது பிடிக்கவில்லை. எனவே முகத்தைத் திருப்பிக்கொண்டார். இங்கே பெருமாள் முகம் திரும்பியிருப்பதை இப்போதும் காணலாம்.

இருந்தாலும் தேசிங்கு போருக்குச் சென்று எதிரிகளை விரட்டியடித்து விட்டு, தானும் வீரமரணம் எய்தினார் என்பது வரலாறு.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com