சோ. சிவபாதசுந்தரம்
எழுத்தாளர், பத்திரிகையாளர், பயணக் கட்டுரையாளர், வானொலி அறிவிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சோ. சிவபாதசுந்தரம். இவர், ஆகஸ்ட் 27, 1912ல், இலங்கை யாழ்ப்பாணத்தில், கரம்பொன் என்ற ஊரில் சோமசுந்தரம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

இளவயது முதலே வாசிப்பில் ஆர்வமுடையவராக இருந்தார் சிவபாதசுந்தரம். இலங்கையில் வெளியான இதழ்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஆனந்தபோதினி, தமிழ்நாடு, நவசக்தி, குடியரசு, ஆனந்தவிகடன் போன்ற நூல்களையும் ஆர்வமுடன் வாசிப்பார். ஈழகேசரி இதழில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை மறுத்து ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினார் சிவபாதசுந்தரம். அது வெளியானது மட்டுமல்லாமல், சிவபாதசுந்தரத்திற்கு ஞானப்பிரகாசர் அடுத்த இதழில் விளக்கமும் எழுதியிருந்தார். அதனால் உற்சாகம் பெற்ற சிவபாதசுந்தரம், தொடர்ந்து எழுதத் தலைப்பட்டார். இலங்கை இதழ்களான ஈழகேசரி, வீரகேசரி போன்றவற்றில் அவரது கட்டுரைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

எழுத்தார்வம் உந்த 'தோட்டத்து மீனாட்சி' என்ற சிறுகதையை எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. அதுவே அவரது முதல் சிறுகதை. தொடர்ந்து வாசித்து, இதழியல் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார், 1938ல் 'ஈழகேசரி' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வ.ரா. என்னும் வ. ராமசாமி ஐயங்கார், இலங்கையிலிருந்து வெளியான 'வீரகேசரி' இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிவபாதசுந்தரத்திற்கு வ.ரா.வின் அறிமுகமும் நல்ல நட்பும் ஏற்பட்டது. கொழும்பில் தான் தங்கியிருந்த அறையிலேயே வ.ரா.வைத் தங்கச் செய்தார். அவருடன் உரையாடி பல இலக்கியச் செய்திகளை, இதழியல் நுணுக்கங்களை அறிந்து கொண்டார். அவர்களின் நட்பு பல ஆண்டுகளுக்குத் நீடித்தது.



'மணிக்கொடி' இதழின் வழியில், அதனை முன்மாதிரியாகக் கொண்டு 'ஈழகேசரி' இதழில் பல்வேறு சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், இராஜ அரியரத்தினம் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழியாக்கங்களையும் வெளியிட்டார். தானும் பல கதைகளை, கட்டுரைகளை அந்த இதழில் எழுதினார். அவற்றுள் மொழிபெயர்ப்புகளும் அடக்கம். 'சோணாசலம்' என்ற புனைபெயரில் அவற்றை எழுதினார் இலங்கை எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஈழகேசரியில் இடம்பெறச் செய்தார். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலரது படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு ஈழகேசரியில் வெளியாகின.

இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களையும் மாணவர்களையும் ஒன்றிணைத்து 'ஈழகேசரி இளைஞர் கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார் சிவபாதசுந்தரம். அவர்களின் ஆக்கங்களையும் ஈழகேசரியில் வெளியிட்டு ஊக்குவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதினார். மணிக்கொடி ஆசிரியர்கள் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் தொடர்ந்து ஈழகேசரியில் எழுதினார். பிறரையும் நூல் விமர்சனம் செய்ய வைத்தார். 1942 வரை ஈழகேசரி இதழில் பணியாற்றினார்.

சிறுகதைகள்
தோட்டத்து மீனாட்சி
அழைப்பு
எட்டாந் திருவிழா
சங்கு வளையல்
எப்போ காண்பேன்
பரதேசி
நண்பர்கள்
வைரவக்கோயில்
விளக்கு
பொன்னர் செத்த கதை
பரிசுக்கட்டுரை

கட்டுரை நூல்கள்
மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்
கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்
சேக்கிழார் அடிச்சுவட்டில்
ஒலிபரப்புக்கலை

வரலாறு நூல்கள்
தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (சிட்டியுடன் இணைந்து எழுதியது)
தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (சிட்டியுடன் இணைந்து எழுதியது)

நாடகங்கள்
புத்தமார்க்கம்
வசந்தமாலா
ஒத்திகைக்கு முன்னும் பின்னும்


கொழும்பு வானொலியில் அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துநராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அதனை ஏற்றுத் திறம்படப் பணியாற்றி வானொலி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். 1946ல் ஞானதீபத்தை மணம் செய்துகொண்டார். ரவிலோச்சனன், மஞ்சுபாஷிணி, பிரசன்னவதனி என்று மகவுகளும் வாய்த்தன. பிரசன்னவதனி பிற்காலத்தில் சிறந்த நடனக் கலைஞராகப் பரிணமித்தார். இந்திய அரசு பரதக் கலையைக் கௌரவிக்கும் விதத்தில் ஓர் அஞ்சல் தலையை வெளியிட முடிவு செய்தது. அதற்கான பொறுப்பை சிறந்த நாட்டியக் கலைஞரான ருக்மிணி அருண்டேலிடம் அளித்தது. அவர் சிவபாதசுந்தரம் - ஞானதீபம் இணையரின் மகளான பிரசன்னவதனியைத் தேர்வு செய்தார். பிரசன்னவதனி பாரத நாட்டின் அஞ்சல்தலையில் இடம் பெற்றார். பிற்காலத்தில் அவர் ஒரு தீ விபத்தில் காலமானார். அது சிவபாதசுந்தரத்திற்கு. ஆறாத சோகமானது

1947ல் லண்டன் சென்ற சிவபாதசுந்தரம், பி.பி.சி. வானொலியில் தமிழ் ஒலிபரப்பாளராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் பாடல் வரிகளான 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற வரிகளின் தாக்கத்தினால், தமிழ் ஒலிபரப்புக்கு 'தமிழோசை' என்று பெயர் சூட்டினார், ஆறு வருடங்கள் லண்டன் பி.பி.சி. வானொலியில் பணியாற்றினார். பின்னர் சூழல்களால் அங்கிருந்து விலகி இலங்கைக்கு வந்தார். 'லீவர் பிர்தர்ஸ்' என்ற நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். அக்கால கட்டத்தில் காலமான காமராஜர், அண்ணா ஆகியோரது இறுதி ஊர்வலங்களின் நேர்முக வர்ணனையை சென்னை வானொலிக்காகச் செய்தார். தனது வானொலி மற்றும் ஒலிபரப்பு அனுபவங்களை அடிப்படையாக வைத்து 'ஒலிபரப்புக் கலை' என்ற நூலை 1954ல் வெளியிட்டார், இந்திய மொழிகளில் வானொலி ஒலிபரப்பு பற்றி வெளியான முதல் நூல் அதுதான். அதற்கு முன்னுரை வழங்கியிருந்தார் ராஜாஜி. அதில், "ரேடியோவில் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அந்த வேலை செய்வதில் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊறவேண்டும்; எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் போது உள்ளத்தில் திருப்தி பொங்க வேண்டும் என்று ஆசிரியர் சரியாகச் சொல்லியிருக்கிறார். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தப் புது தெய்வத்துக்காக அர்ப்பணம் செய்யலாம். நிலையத்து உத்தியோகஸ்தர்கள், பேச்சாளர், சங்கீதக்காரர், ஆசிரியர்கள், நடிகர்கள் எல்லோருக்குமே நூல் மிகவும் பயன்படும். இந்த நூலுக்குப் பெயர் 'ரேடியோ வாத்தியார்' என்றே வைத்திருக்கலாம்" என்று பாராட்டியிருந்தார். சென்னை தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் பரிசு இந்த நூலுக்குக் கிடைத்தது.



1958ல் சென்னைக்கு வந்தார் சிவபாதசுந்தரம். அங்கு தனது மகன் ரவிலோச்சனனுடன் இணைந்து 'ஸ்க்ரீன் ப்ரிண்டிங்' தொழிலை மேற்கொண்டார். 1959ல் நடைபெற்ற அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் செயலாளராகப் பணிபுரிந்தார். 1968ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றினார். 1972ல் பி.ஆர். ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். நாயன்மார்கள் குறித்து விரிவான ஆரய்ச்சி மேற்கொண்டு சிவபாதசுந்தரம் எழுதிய 'சேக்கிழார் அடிச்சுவட்டில்' என்ற நூல் முக்கியமான ஒன்றாகும். இவர் எழுதிய 'கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்' நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அந்நூல் பற்றி அதன் முன்னுரையில் சிவபாத சுந்தரம், "ஐந்து வருடங்களுக்கு முன்பு அஜந்தா குகைச் சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்த்தபோது பௌத்த க்ஷேத்திரங்கள் எல்லாவற்றையுமே பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் பிறந்து, அந்த யாத்திரையின் பலனாக எழுந்தது இந்நூல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவபாதசுந்தரம், சிட்டியுடன் இணைந்து எழுதிய 'தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்', 'தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்' என்ற இரு நூல்களும் முக்கியமானவை. எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இலக்கிய வகுப்புகளுக்காக இவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே இந்த நூல்களாகும். இந்த அனுபவத்தால் இவர்கள் இருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகச் சிலகாலம் பணியாற்றினர்.

இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி எனப் பல இடங்களில் வாழ்ந்த சிவபாதசுந்தரம், இறுதிக்காலத்தில் லண்டனில் வசித்தார். நவம்பர் 8, 2000 அன்று அவர் காலமானார்.

அரவிந்த்

© TamilOnline.com