தென்றல் பேசுகிறது...
தமது உடல்நலம் மற்றும் வாழ்க்கைப் பாட்டையைத் தமக்கேற்ப அமைத்துக்கொள்ளும் உரிமை மகளிருக்கு இருப்பதால், கருக்கலைப்பு உரிமையும் அவர்களுக்கு உண்டு என்பதைச் சென்ற இதழில் எழுதியிருந்தோம். அமெரிக்க உச்சநீதி மன்றத் தீர்ப்பை அடுத்து கன்சர்வேடிவ் மாநிலங்கள் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை நிறைவேற்றிவிட போட்டி போடும் நிலையில், கன்சர்வேடிவ் ஆட்சியில் உள்ள கான்சஸ் மாநில மக்கள், கருவைக் கலைக்கும் உரிமை மகளிருக்கு உண்டு என்னும் தமது முடிவை நேரடி வாக்கெடுப்பில் உரக்கக் கூறியுள்ளனர். "கருவைக் கலைத்துக் கொள்ளவும், தமது உடல்நலம் குறித்த முடிவுகளை எடுக்கவும் பெண்களுக்கு இயலவேண்டும் என்பதை ஆதரிக்கும் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் கருத்தை இந்த (கான்சஸ் மாநில) வாக்காளர்களர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்" என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியே.

★★★★★


இந்தியாவின் 15வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள திருமதி திரௌபதி முர்மூ அவர்களைத் தென்றல் வாழ்த்தி வரவேற்கிறது. ஆறே ஆண்டுக் காலத்தில் கணவர், இரண்டு மகன்கள், சகோதரர் உட்பட்ட மிக நெருங்கியவர்களை இழந்து கடுமையான துயரங்களைச் சந்தித்த போதிலும், ஆதிவாசிப் பெண்மணியான முர்மூ, ஆன்மீகம் கொடுத்த பலத்தினால் அவற்றை மனவலிமையோடு எதிர்கொண்டு இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். தவிர, விளையாட்டு, பன்னாட்டு அரசியல், அறிவியல், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பல்வேறு துறைகளிலும் இந்தியா சாதனைகள் படைத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருவதையும் நாம் கவனிக்கிறோம். பெருமைப்படுவோம்.

★★★★★


ஓமான் நாட்டின் மஸ்கட்டில் வசிக்கும் தமிழ்க் கவிஞர் சுரேஜமீ அவர்களின் நேர்காணல் கடல்கடந்த தமிழரின் தமிழார்வத்துக்குச் சான்று பகர்கிறது. 1942-ன் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து கிளம்பி இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததை விவரிக்கும் வெ. சாமிநாத சர்மா நூலின் ஒரு பகுதியாக 'அலமாரி' வியப்பான பல செய்திகளை நமக்குக் கொண்டு வருகிறது. குகை நமசிவாயர், சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் குறித்த கட்டுரைகள் தமிழரின் சமய, இலக்கியப் பரிமாணங்களைக் காட்டுவனவாக உள்ளன. 'குலதெய்வத்தைத் தேடி...' என்ற அனுபவக் கட்டுரை ஒரு சிறுகதையின் வனப்போடு அமைந்துள்ளது.

வாசகர்களுக்கு இந்திய சுதந்திர நாள், கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

தென்றல்
ஆகஸ்ட் 2022

© TamilOnline.com