"புவா எப்போ வரும்?"
வருடம் 1988. பம்பாய் செம்பூரில் வாசம்.

பம்பாய் என்றாலே இட நெருக்கடிதான். நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் 700 சதுர அடி வீடு. சிறு சமையலறை, அத்துடன் இன்னும் இரண்டு சிறிய அறைகள். அப்புறம் எனக்கும் என் இரண்டரை வருட மகளுக்கும் பிடித்த சிறிய நிலா முற்றம் (பால்கனி).

இருக்கும் இடத்தைத் துப்புரவாக வைத்துக் கொண்டு, மணக்க மணக்கக் காலையிலும் மாலையிலும் இரண்டு வேளை சமைத்துக் கொண்டு, புத்தகங்கள் படித்துக் கொண்டு, வானொலியில் பாட்டுகள் கேட்டுக் கொண்டு பொழுது போய்க் கொண்டிருந்தது.

செல்லமகளுக்குப் புத்தகம் படித்துக் கதை சொல்வது, அவளுடன் விளையாடுவது, பாடிக் காண்பிப்பது என்று எனக்கு நேரம் அவளுடன் மிகச் சுவாரசியமாகப் போகும். மகள் தமிழில் நிறையப் பேசுவாள். ஆங்கிலமும், ஹிந்தியும் கொஞ்சம் பேசுவாள். எனக்கும் அவளுக்கும் 28 வயது வித்தியாசம். இருப்பினும் அவள்தான் என் மிகச்சிறந்த தோழி.

அவளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பால்கனியில் நின்று தம்ளரில் இருக்கும் பாலை ஒவ்வொரு தேக்கரண்டியாக அவளுக்குத் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை புகட்டுவேன். பாலைக் குடிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்வாள். "உனக்கு ஊசித் தொண்டையா?" என்று கேட்டுச் சிரிப்பேன். அவளுக்கு அர்த்தம் புரியாத போதும் கிளுக்கென்று பதிலுக்குச் சிரிப்பாள்.

கீழே, கட்டிடத்திற்கு வெளியே மற்றக் குழந்தைகள் விளையாடும் சமயம் அவள் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், பாலோ சாப்பாடோ சீக்கிரம் இறங்கும். ஆனால் மற்றக் குழந்தைகள் அங்கு சாயங்காலம் தவிர மற்ற நேரங்களில் வர மாட்டார்கள்.

வீட்டைச்சுற்றி இருக்கும் மரங்களில் குருவிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கண்டுபிடித்து வேடிக்கை பார்க்கக் குழந்தைக்குத் தெரியாது.

கீழ் வீட்டில் ஓர் அருமையான, தமிழ் மாமியின் குடும்பம் இருந்தது. மாமி தினமும் காக்கைக்குச் சாதம் வைக்காமல் சாப்பிட மாட்டார். தினமும் காலை எட்டரை மணிக்கு "கா, கா" என்று மாமியின் குரல் கேட்கும். நாலைந்து காகங்கள் மாமி வைக்கும் சாதத்தைக் கொத்தித் தின்றுவிட்டு விரைவாகப் பறந்துவிடும்.

அந்தக் காக்கைகள் எங்கள் பால்கனிக்கு வரக்கூடாதோ, குழந்தைக்கு வேடிக்கை காட்டிச் சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிடலாமே என்று தோன்றும். நானும் காக்கைக்குச் சாதம் வைக்க ஆரம்பிக்கலாமே என்று ஏனோ எனக்குத் தோன்றவில்லை!. அவை சீக்கிரம் பறந்துவிடும் அல்லது பால்கனியை அசுத்தம் செய்யும் என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை!

பால்கனியில் குட்டை மதில்சுவருக்கு வெளியே இருபுறமும் மரக்கட்டை அடித்து இடையே இரும்புக்கம்பி மூன்று வரிசையில் கட்டியிருக்கும். தினமும் துணிகளைத் துவைத்தபின் அதில்தான் உலர்த்துவேன். காக்கை வந்தால் துணிகளில் எச்சமிட்டு அசுத்தப்படுத்தும், அதனால் வேண்டாம் என்று எனக்குத் தோன்றி இருக்கலாம்.

கீழே மாமி வீட்டில் புதிதாகச் சில அலமாரிகள் வாங்கினார்கள். இரும்புக் கம்பியாலான, நான்கு பக்கமும் திறவையாக இருந்த பழைய அலமாரிக்கு அவர்களது வீட்டில் இடமில்லாமல் போனது. "உனக்கு வேணுமா, எடுத்துக்கோ" என்று என் வீட்டில் கொண்டுவந்து கொடுத்தார்.

அதை நான் பால்கனியில் வைத்தேன். பிளாஸ்டிக் வாளி, பூத்தொட்டி, மண்தொட்டிகள், எடைக்குப் போட வேண்டிய பழைய செய்தித் தாள்கள் இவற்றைத் தற்போதைக்கு அலமாரியில் அடுக்கினேன். அடுத்த மாதம் அலமாரித் தட்டுகளில் மண்தொட்டிகளில் பல வண்ணப் பூச்செடிகள் வளர்க்க எனக்கு எண்ணம் இருந்தது.

எப்போதும்போல் ஒருநாள் இடுப்பில் குழந்தை, தம்ளரில் பால் சகிதம் பால்கனிக்கு வந்தேன். திடீரெனப் பறந்துவந்த ஒரு புறா பால்கனி மதில்சுவர் கம்பியில் உட்கார்ந்தது. இன்னொரு புறாவும் பறந்துவந்து அதன் பக்கத்தில் அமர்ந்தது. இரண்டும் சிறிய கண்களை உருட்டி, கழுத்தை வளைத்து, தலையைத் திருப்பி எங்களை நோட்டம் விட்டன. நாங்கள் நின்ற இடத்திலிருந்து அசையவில்லை. என் மகளும் சத்தம் ஏதும் எழுப்பவில்லை. நாலைந்து நிமிடங்களில் புறாக்கள் பறந்து போய்விட்டன.

குழந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சீக்கிரம் பால் குடித்துவிட்டாள். தம்ளர் காலியானது. "புறா எப்போ வரும்?" என்று கேட்டாள். "நாளைக்கு" என்று சும்மா சொல்லி வைத்தேன்.

அப்போது பம்பாய் வானொலியில் மாலை நான்கிலிருந்து ஐந்து மணிவரை மட்டும் ஹிந்தி அல்லாத பிற மொழித் திரைப்படப் பாடல்கள் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஒலிபரப்பாகும். பதினைந்து நிமிடங்கள் ஒவ்வொரு மொழிப் பாடலுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். வீட்டில் கேஸட் ப்ளேயர், டேப் ரெகார்டர் எதுவும் இருக்கவில்லை. ஆகவே நானாகப் பாட்டு போட்டுக் கேட்கமுடியாது. இந்தப் பதினைந்து நிமிடத் தமிழ்ப் பாடல் வானொலி ஒலிபரப்புக்காகத் தினமும் காலையிலிருந்தே காத்துக் கொண்டிருப்பேன்.

அன்று மதியம் எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. "ஓ பக்பக்பக்பக் பக்கும் பக்கும் மாடப்புறா" என்ற பாட்டு வானொலியில் மிதந்து வந்தது. நானும் மகிழ்ச்சியுடன் காலையில் என் வீட்டிற்கு வந்த மாடப்புறாக்களை மனத்தில் எண்ணியபடி கூடவே பாடிக் கொண்டேன்.

அடுத்த நாள் புறாக்கள் மீண்டும் வந்து மதில் சுவரில் உட்கார்ந்துவிட்டுச் சில நிமிடங்களில் பறந்து சென்றுவிட்டன. அதற்கடுத்த நாள், பால்கனியிலிருந்து வந்த பலதரப்பட்ட சத்தத்தால் குழந்தையின் மதிய உறக்கம் தடைப்பட்டது. எட்டிப் பார்த்தேன். பக்பக் சத்தம். இரும்பு அலமாரியில் நான் வைத்திருந்த வாளிகள், மண் தொட்டிகள் தள்ளிவிடப் பட்டிருந்தன.

புறாக்கள் வருவதும் பறந்து போவதுமாக இருந்தன. அவைகளின் அலகுகளில் அவை தேர்ந்தெடுத்த குச்சிகள், நார்கள், குப்பை செத்தைகள். இவை யாவும் அலுப்பில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்பட்டன. இரும்பு அலமாரியில் நான் வைத்திருந்த பழைய செய்தித் தாள்களின் மேல் புறாக்கள் கூடுகட்ட ஆரம்பித்தன. அப்போதுதான் எனக்குப் புரிந்தது இரண்டு நாட்களாக இந்தப் புறாக்கள் வந்த காரணம். இந்த இடத்தில் தங்களுக்கு ஆபத்தில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின்னர் கூடுகட்ட ஆரம்பித்திருக்கின்றன.

கூடு , நான் பார்க்கும் உயரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததால் நான் தினமும் தள்ளி நின்று கூர்ந்து கவனித்து வியப்பேன். ஐந்தாறு நாள்களில் கூடு பூர்த்தியானது. அற்புதமான வேலைப்பாடு.

பால்கனி ஓரம் முழுதும் புறாக்களின் எச்சம். நான் தினமும் துவைக்கும் துணிகளை உலர்த்த இடைஞ்சலாக இருந்தது. இருப்பினும் அந்தச் சமயம் எனக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. நான் இந்தப் புறாக்களோடு மனத்தளவில் ஒன்றிவிட்டேன்.

பிறகு இரண்டு நாள்களுக்குப் புறாக்களைப் பார்க்கவில்லை. அடுத்த நாள் ரோஜா நிறமும் வெள்ளை நிறமும் கலந்த நிறத்தில் இரண்டு முட்டைகள் கூட்டில் இருந்தன. ஒரு புறா தன் பவளமல்லி நிறக் கால்களால் முட்டைகள் மேல் கிட்டத்தட்ட நின்று, பின்னர் அவற்றின் மேல் உட்கார்ந்து, தன் இறக்கைகளுக்குள் முட்டைகளை அடக்கிக் கொண்டது. உட்கார்ந்த புறா இடத்தைவிட்டு எழவில்லை, அசையவில்லை.

அடை காக்கும் பறவை உணவு, தண்ணீர் உட்கொள்ளாது என்று என் உள்மனத்துக்குத் தெரிந்தது. இருந்தும், புறாவுக்கு எந்த உணவு பிடிக்கும், காக்கைபோல் சாதம் சாப்பிடாதே, வேறு என்ன கொடுப்பது என்றெல்லாம் யோசித்து, சரி தண்ணீர் வைப்போம் என்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை வைத்தேன். அதையும் புறா சீந்தவில்லை.

இரண்டு நாள்களில் முட்டையின் ஓடு விரிசல் விட்டுக் குஞ்சுகள் வெளிவந்தன. குஞ்சுகள் வெளிர் ரோஜா நிறத்தில் வழுக்கும் என்று நினைக்க வைக்கும் மொழுமொழுப்பான தோலுடன் இருந்தன. முடி, இறகுகள் அதிகம் இல்லை. அசப்பில் கிட்டத்தட்ட கழுகு போலிருந்தன.

புறாக்களின் போக்குவரத்து இப்போது அதிகமாகி விட்டது, வருவதும் போவதும் குஞ்சுகளுக்குப் புழு மாதிரி எதையோ ஊட்டி விடுவதுமாக. எச்சம், சத்தம், குப்பைகள் எல்லாம் அதிகமாகி விட்டன. பெரிய புறாக்களின் இறகுகள் தரை முழுதும் வீழ்ந்திருந்தன. கூட்டிப் பெருக்கித் தள்ளுவதே எனக்கு வேலையாகி விட்டது. கோழி வளர்க்கும் வீடு போல் நாசியில் ஏறிய நெடியையும் தாண்டி, நானும் என் மகளும் புறாக் குஞ்சுகளைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். "ஓ பக் பக்கும் மாடப்புறா" பாட்டை என் வாய் முணுமுணுத்த வண்ணமே இருந்தது.

மழைக்காலம் ஆரம்பித்தது. மழைத்தூறல் புறாக்களின் நெடியைக் காற்றுடன் சுமந்து வந்து மூக்கில் செலுத்தியது. குஞ்சுகள் சாரலில் ஈரமாகித் தமக்கு இல்லாத இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டிருந்தன. கீச் கீச் என்று பலமான சத்தம் வேறு. இரைதேடச் சென்ற புறாக்கள் இன்னும் திரும்பவில்லை. மழையில் இரை சீக்கிரம் அகப்படவில்லை போலும்.

மஹாராஷ்டிரத்தில் பருவமழைக் காலம். அன்று மழை தூறிக்கொண்டு இருந்தது. திடீரென ஓர் அண்டங்காக்கை சரேல் என்று எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்கூட்டை நெருங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் குஞ்சுகள் இரண்டையும் கால்களில் பற்றிக்கொண்டு பறந்தது.

இப்போது இரைதேடச் சென்ற புறாக்கள் திரும்பி, கொக்கரித்தபடி அண்டங்காக்கையின் இருபுறமும் விரட்டிப் பறந்ததில் ஒரு குஞ்சு, காக்கையின் கால் பிடியிலிருந்து நழுவி ஒரு மாடி உயரத்திலிருந்து சொத் என்று தரையில் விழுந்தது.

அண்டங்காக்கை புறாக்களைவிட வேகமாகவும், கிட்டத்தட்ட செங்குத்தாகவும் பறந்து வானத்தில் மிக உயரத்திற்குப் போய்விட்டது. புறாக்களால் அண்டங்காக்கையின் வேகத்திற்கும் உயரத்திற்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. புறாக்கள் களைத்துப் போய்த் திரும்பின. பால்கனியின் மதில் சுவரில் உட்கார்ந்தன. அவை வேகமாக மூச்சு விட்டதாக எனக்குத் தோன்றியது.

புறாக்கள் தாங்கள் கட்டிய கூட்டின் பக்கம் திரும்பவே இல்லை. கீழே விழுந்த குஞ்சைப் போய்ப் பார்க்கவும் இல்லை. இரண்டு மூன்று நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தன. பின்னர் ஒரு தீர்மானம் எடுத்தது போல் இரண்டும் ஒரே நேரத்தில் சிறகை விரித்துப் பறந்து மறைந்தன.

நான் மாடிப்படி இறங்கி, கீழே விழுந்த குஞ்சுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கப் போனேன். அது கால் ஒடிந்து, அலகு பிளந்து, உடல் வளைந்து, ஈர மண்மேல் இறந்து கிடந்தது. பார்க்க மனம் தாளவில்லை. அடுத்த நிமிடமே நாலு கால் பாய்ச்சலில் படிகளில் ஏறி வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்.

வானம் இருண்டது. பளிச் பளிச் என்று மின்னல் அடித்துக் கட்டிடங்களையும் மரங்களையும் விட்டு விட்டு கண்ணுக்குக் காட்டியது. தொடர்ந்து வெகு சப்தமாக இடி இடித்தது. காற்று ஊய் ஊய் என்று வேகமாக அடித்து வீட்டைச் சுற்றி இருந்த மரங்களைப் பேயாட்டம் போட வைத்தது. அடைமழை கண்ணை மறைக்கும் அளவு வலுத்துக் கொட்டியது. பருவ மழையின் சீற்றம். நாற்பது நிமிடம் மழை ஓயவில்லை. மழை நின்றபோது நான்கு விரல் ஆழத்திற்குப் பால்கனியில் சேர்ந்திருந்த மழைநீர் மெதுவாக வடிய ஆரம்பித்ததைப் பார்த்து மறுபடி அங்குச் சென்றேன்.

தூங்கி எழுந்து வந்த என் மகள், "அம்மா, புவா பாக்கலாமா?" என்றாள்.

"இல்லம்மா இப்போ இங்க இல்லை. பறந்து போயிடுத்து" என்றேன்.

"நான் பாடறேன் புவா வரும் பாருங்கோ" என்று சொல்லி, "பக்கும் பக்கும் புவா" என்று மழலையில் பாட, அதைத் தொடர்ந்து அந்தப் பாடலைப் புறாக்களுக்குக் கடைசி மரியாதையாக நினைத்து நான் பாடி முடித்தேன்.

என் கண்களில் ஊறிய நீரை அவள் பார்க்க வேண்டாம் என்று உணர்ந்து தலை குனிந்து தரையைப் பார்த்தேன். பால்கனியில் தேங்கிய நீரில் எனக்கு என் கண்ணீர்ப் படலம் தாண்டி குஞ்சுகளும் புறாக்களும் நிழலாக, பிரமையாகத் தெரிந்தன. இரண்டு சொட்டுக் கண்ணீர் அவைகளுக்கு அஞ்சலியாகத் தெரித்து விழுந்து தெளிவான மழைநீரில் கலந்தது.

என் மகள், "அம்மா புவா எப்போ வரும்" என்று கேட்டாள். எனக்குப் புறாக்கள் எவ்வளவு மாதத்திற்கு ஒருமுறை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் என்பதெல்லாம் தெரியாது. "அடுத்த வாரம் மறுபடி வரும்" என்று ஏதோ சொல்லி வைத்தேன், கனத்த மனத்துடன்.

புறாக்கள் திரும்பி வரவே இல்லை.

சித்ராங்கி,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com