கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 7)
அருணுக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. நீரிலிருந்து வெளியே விழுந்த மீன் போலத் தவித்தான். ரொம்பச் சத்தம் போட்டால் அம்மாவிடம் இருந்து திட்டு விழும் என்று பயந்து மெத்தைமீது அமைதியாக அமர்ந்திருந்தான். விளக்கைப் போடலாம் என்று நினைத்தான். அதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

மெல்ல எழுந்து தண்ணீர் குடிக்க, படிக்கட்டில் சத்தம் போடாமல் இறங்கினான் . சமையல் அறையில் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தான். எங்கே அம்மா தன் பின்னாடி நிற்கிறாரோ என்று திரும்பிப் பார்த்துக்கொண்டான்.

அறிவிப்புப் பலகையின் செய்தி கூகிள் தேடலில்கூட வராதது அவனுக்குத் தூக்கம் இல்லாமல் பண்ணிவிட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் தன் அறைக்குச் சத்தமின்றி ஏறிச் சென்றான்.

அருண் கண்ணை மூடிப் படுத்தான். அவன் கனவில் மாறி மாறி மண் தோண்டும் இயந்திரங்கள் வந்தன. 'Lead Poisoning... Lead Poisoning' என்று எழுத்துக்கள் பளிச்சிட்டன. அந்தப் பகுதியில் உள்ள பாம்புகளும் ஓணான்களும் தங்களை காப்பாற்றச் சொல்லிக் கத்தின. எப்போது விடியும் என்று அருண் காத்திருந்தான்.

காலையில் சீக்கிரமே எழுந்து, அம்மா விழித்து விட்டாரா என்று பார்க்கப் போனான். அம்மா உணவு மேஜை அருகே அமர்ந்திருந்தார். மும்முரமாகத் தன் மடிக் கணினியில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். எதுவும் கேட்காமல் அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்து அவனும் படித்தான்.

'எர்த்தாம்ப்டனில் காரீய விஷம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. அதை எழுதியவர், ஏதோ ஒரு பிரளயம் வந்துவிட்டது போல எழுதியிருந்தார். எப்படியோ அந்தக் கருமலைப் பகுதியில் வெகு நாட்களாகேவே ஏதோ ரசாயன மாற்றம் இருந்ததாகவும், அது இப்போது மனித குலத்துக்கே தீங்கு விளைவிக்கும் அளவுக்குப் பெரியதாகி விட்டது என்றும் எழுதியிருந்தார்.

"இதை இப்போதே சரி செய்யா விட்டால், எர்த்தாம்ப்டனின் நிலத்தடி நீர் நாசமாகிவிடும்" என்றும் அவர் எழுதி இருந்தார்.

"அம்மா, ஏதோ தொடர்பே இல்லாம எழுதியிருக்காரம்மா இந்த ஆளு. நம்ம ஊருல நிலத்தடி நீர் விஷமாகிற அளவுக்கு எல்லாம் நம்ம எதுவும் தொழிற்சாலைக் கழிவுகளைப் போடுவது இல்லை. சில வருஷம் முன்னாலே அந்த இனிப்பு நீர் விஷயத்துக்கு அப்புறம் ஹோர்ஷியானா கூட வம்புக்கு வரதே இல்லையே அம்மா."

கீதாவுக்கு அந்தப் பழைய கதையை அருண் நினைவு படுத்தினான். சில வருடங்களுக்கு முன்பு அருணின் பள்ளிக்கூடத்தில் குடிநீர் திகட்டும் அளவுக்கு ஒருவித இனிப்பாக இருந்தது. அது திருட்டுத் தனமாகக் கழிவுகளைக் கொட்டியதால் ஏற்பட்டது எனத் தெரியவந்தது. அருண்தான் முதலில் சந்தேகப்பட்டு, புகார் செய்து, ஹோர்ஷியானாவின் தில்லுமுல்லை வெளிப்படுத்தினான்.

"என்ன சொல்லுற அருண்?"

"இந்தக் கட்டுரை அபத்தம் அம்மா. இதில் லாஜிக்கே இல்லை."

அருண் என்ன சொல்ல வருகிறான் கீதா என்று கூர்ந்து கேட்டார் .

"ஒரு விதமான அறிவியல் தகவல், புள்ளி விவரம், நிலவியல் ஆதாரம் எதுவுமே இல்லை. இதெல்லாம் எப்படி பத்திரிகையில போடறாங்க? நம்ம ஊர்ல தரமே இல்லாம போயிடிச்சு."

அருண் ஒரு நோட்புக்கை எடுத்து வந்தான். அதில் சில குறிப்புகளை எழுதினான். அவர்கள் படித்துக் கொண்டிருந்த செய்தி ஏதோ ஒரு பிரச்சாரம் போல இருந்த்து.

"அம்மா, இதுலயும் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்பது இல்லை."

ரமேஷ் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தார். பின்னாடியே பக்கரூ வாலை ஆட்டிக் கொண்டு வந்தது.

"குட் மார்னிங் அருண். கீதா. ராத்திரி ரொம்ப நேரம் நீங்க இரண்டு பெரும் டி.வி. பாத்திட்டு இருந்தீங்க போல. எனக்கு இந்த செய்தி டாக்குமெண்டரி எல்லாம் ஒத்து வராது. இரண்டு அடி, இரண்டு டூயட் இருக்கணும்."

ரமேஷின் ஜோக்கில் கவனம் செலுத்தாமல், கீதாவும் அருணும் கணினியில் மேலும் சில செய்திகளைப் படித்து கொண்டிருந்தார்கள்.

"போச்சுடா, அம்மாவும் பையனும் திரும்பவும் ஆய்வுல இறங்கிட்டீங்களா?"

"ஆமாங்க, கருமலையில் பார்த்ததிலிருந்து..."

ரமேஷின் ஹாஸ்யம் சட்டென்று நின்றது. மனைவியும் மகனும் வேண்டாத வம்பைத் தேடுவது கோபமாக வந்தது.

"என்னைக்குத்தான் நிறுத்தப் போறீங்க நீங்க இரண்டு பேரும்?"

ரமேஷின் குரல் வீடெங்கும் எதிர் ஒலித்தது. பக்கரூ பயந்து போய்விட்டான்.

அருணுக்கு அப்பா கத்தியது புதிதல்ல என்றாலும், அது தப்பு என்று அவனுக்குப் பட்டது.

"என்னப்பா, என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்தறீங்க?"

ரமேஷின் கோபம் அதிகமானது. "அதிகப் பிரசங்கி. ஒரு மரியாதை கிடையாது மனுஷங்களுக்கு?"

கீதா, ரமேஷின் கத்தலைச் சமாதானப்படுத்த முயலாமல் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருண் சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது.
கீதாவின் மௌனம், அருணின் அதிகப் பிரசங்கித் தனத்துக்குச் சம்மதம் கொடுத்தது போல தோன்றியது ரமேஷுக்கு.

"எல்லாம், நீ கொடுக்கற இடம். உன்கிட்ட இருந்துதான் அவனுக்கு வந்திருக்கு."

"எதுக்கப்பா அம்மாவை இதுல இழுக்கறீங்க. என்னால என்னை மாத்திக்க முடியாது. நான் கொடி தூக்கறவன்தான். எதுனாச்சும் தப்பா பட்டதுன்னா சும்மா முகத்தைத் திருப்பிட்டு போகமாட்டேன். அது என் இயல்பு."

"அப்ப நான் கோமாளி, நீங்கதான் பெரிய சமூக சீர்திருத்தவாதியா? போடா... வேலை வெட்டி இல்லாத பயலுக. எவனோ, எதுக்கோ, எங்கயோ தோண்டினா இவங்களுக்கு வந்திரும் கோபம். போய் படிச்சு உருப்படற வழியப் பாக்காம..."

அருண் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். கீதா ஒன்றுமே சொல்லாமல் அருண் கூடவே சென்றார்.

"அருண்! நில்லு." ரமேஷ் கத்தினார்.

அருண் அம்மாவைப் பார்த்தான். கீதா அவனை நகரச் சொல்லி ஜாடை காட்டினார்.

"கீதா... உனக்கு..."

கீதா தனது கைப்பையை எடுத்தார். ரமேஷைப் பார்த்து ஒரு வருத்தம் கலந்த புன்னகை செய்தார்.

"வா அருண், நாம வெளியில போய் கொஞ்சம் இதைப்பத்தி பேசலாம். You have my full support on this."

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com