ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள்
தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ் சுவாமிகளின் வாழ்க்கை.

தோற்றம்
இவர், கோயம்புத்தூரில் உள்ள பூநாச்சி புதூர் என்ற கிராமத்தில், சிதம்பர ஐயர் - மகாலக்ஷ்மி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். திருச்செங்கோட்டு ஆலய இறைவனை வேண்டிப் பிறந்த மகன் என்பதால், அந்த ஆலய இறைவன் நினைவாக 'அர்த்தநாரி' என்ற பெயரைக் குழந்தைக்குச் சூட்டினர். அர்த்தநாரிக்கு ஐந்து வயதானபோது திடீரெனத் தந்தை காலமானார். ஆதரவின்றித் தவித்த மகாலக்ஷ்மி அம்மாள் தன் சகோதரன் வீட்டுக்குச் சென்று வசித்தார். அர்த்தநாரி பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஆனால், படிப்பில் அவனுக்கு ஆர்வமில்லை. ஆடிப்பாடி விளையாடுவதிலும், ஊர் சுற்றுவதிலுமே அவனுக்கு விருப்பம். விளையாடும் போது பிற சிறுவர்களுடன் சண்டை, சச்சரவு செய்வதும் அவனுக்கு வழக்கம். அப்படி ஒருமுறை ஏற்பட்ட தகராறினால் ஊரைவிட்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. வேறு ஊரில் வேறு ஒரு பள்ளியில் அவன் சேர்க்கப்பட்டான் என்றாலும் அது நீடிக்கவில்லை.

திருமணம்
அர்த்தநாரிக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அந்த ஊருக்கு ஒரு சமயம் நாடகக் குழுவினர் வந்திருந்தனர். நாடகக் குழுவில் சேர்ந்து பின்பாட்டுப் பாடினான். அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான். லோகிதாசன், பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றான். பால்ய விவாகம் சகஜமான அக்காலத்தில் மாமா பெண்ணான சுப்புலட்சுமியுடன் அர்த்தநாரிக்குத் திருமணம் நிகழ்ந்தது.

நாடகங்களில் நடித்துக்கொண்டே, ஊர் ஊராகப் பயணம் செய்துகொண்டே தனது இல்லற வாழ்க்கையை நடத்தினார் அர்த்தநாரி. ஆனால், பொருளாதாரப் பிரச்சனையால் குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. மைசூர் அரண்மனையில் அர்த்தநாரியின் உறவினர் சிலர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் மூலம் அரண்மனையில் பணியாற்றும் வாய்ப்பு அர்த்தநாரிக்குக் கிடைத்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கு நஞ்சம்மா என்ற பெண்ணை இரண்டாவது தாரமாக மணந்து கொள்ள நேரிட்டது. முதல் மனைவியும், தாயாரும் சொந்த ஊரான பூநாச்சி புதூரில் வசித்து வர, அர்த்தநாரி இரண்டாவது மனைவி நஞ்சம்மாவுடன் மைசூரில் வாழ்க்கை நடத்தினார்.

சோதனைகள்
அவ்வப்பொழுது சொந்த ஊருக்குச் சென்று மனைவியையும், தாயையும் பார்த்து விட்டு வருவார் அர்த்தநாரி. ஆனால் அதற்கும் சோதனை வந்தது. முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்து போயின. அதே ஏக்கத்தில் முதல் மனைவி சுப்புலட்சுமியும் காலமானார். சில வருடங்களிலேயே இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளும் ஒவ்வொன்றாக இறந்தன. கடைசிக் குழந்தை நரசிம்மன் மட்டும் உயிர் பிழைத்தான். இந்தச் சோக சம்பவங்களால் அர்த்தநாரிக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு வந்தது. இறைநாட்டம் அதிகரித்தது. திக்கற்றோருக்கு தெய்வமே துணை என இறைவனைச் சரணடைந்தார். கோவில் கோவிலாகச் சுற்ற ஆரம்பித்தார்.

இந்நிலையில் திடீரென அவருக்குக் கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. அது எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. உடலை உருக்கியது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட நினைத்தார். அர்த்தநாரியின் நண்பர் ஒருவர் பழனி முருகனைச் சென்று தரிசிக்குமாறும், அவன் அபிஷேக தீர்த்தம் உண்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்றும் ஆலோசனை கூறினார். அதன்படி மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு பழனித் தலத்திற்குச் சென்றார் அர்த்தநாரி.



பழனியில்...
பழனியம்பதியில் கால் வைத்தபோதே தனது உடலில் புது ரத்தம் பாய்வதை உணர்ந்தார் அர்த்தநாரி. பழனியம்பதி ஆலயத்திலேயே தங்கிவிட்டார். மனைவியும் மகனும் வீட்டு வேலை செய்து சாப்பிட்டு வந்தனர். அர்த்தநாரியோ உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆலயப் பணியாளர்கள், பக்தர்கள் பிரசாதமாகத் தரும் பாலும் பழத்தையும் மட்டுமே உணவாகக் கொண்டார். ஆச்சரியப்படும்படியாகச் சில நாட்களிலேயே படிப்படியாக அவரது வயிற்று வலி குணமாகத் தொடங்கியது. நாளடைவில் முற்றிலும் நோய் நீங்கப் பெற்றார் அர்த்தநாரி.

அதுமுதல் முருகன் மீதான அவரது பக்தி அதிகமானது. சதா கோயில், பூஜை, தியானம் என்று ஆலய மண்டபத்திலேயே இருந்தார். தம்மால் முடிந்த ஆலய கைங்கரியப் பணிகளைச் செய்தார்.

மைசூர் சுவாமிகள்
நாளடைவில் அனைத்தையும் துறந்து, துறவியாகிவிடும் என்ற எண்ணம் அர்த்தநாரிக்கு ஏற்பட்டது. ஒரு குடும்பஸ்தராகப் பல்வேறு கடமைகள் அவருக்கு இருந்ததால் அது நிறைவேறவில்லை. ஆனாலும் ஒரு துறவியைப் போல வாழத் தலைப்பட்டார். ஒரு சந்யாசி போல சதா கோயில், பூஜை, தியானம் என்று ஆலய மண்டபத்திலேயே உட்கார்ந்திருந்ததாலும் மைசூரில் இருந்து வந்து பழனியில் தங்கி இருந்ததாலும், அங்குள்ள மக்கள் அவரை 'மைசூர் சுவாமிகள்' என அழைக்க ஆரம்பித்தனர்.

திருப்புகழ் சுவாமிகள்
ஒருநாள் ஆலயத்தில் பக்தர் ஒருவர் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் அர்த்தநாரிக்குத் தன்னையும் அறியாத பரவச உணர்ச்சி ஏற்பட்டது. அவர் பாடப்பாட இவரும் கூடவே பாடினார். நெக்குருகிக் கலங்கினார். நாளடைவில் முயன்று திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்தையும் முழுமையாகப் பாடக் கற்றுக்கொண்டார். பக்தி மேலீட்டால் கண்ணீர் சிந்த அனுதினமும் திருப்புகழை முருகன்முன் பாடிவர ஆரம்பித்தார். அதனால் மக்களில் சிலர் அவரைத் 'திருப்புகழ் சுவாமிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

ஆனாலும் துறவு எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒருநாள், நண்பர் ஒருவரிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்தார். அவரோ, சுவாமிகளை திருவண்ணாமலைக்குச் சென்று பகவான் ரமண மகரிஷியைத் தரிசிக்குமாறு ஆலோசனை கூறினார். சுவாமிகளும் திருவண்ணாமலைக்குப் பயணப்பட்டார்.

பகவான் ரமணர் தரிசனம்
அண்ணாமலைக்கு வந்ததும் சுவாமிகள் ஆதி அருணாசலரையும், அபீத குஜாம்பாளையும் தரிசனம் செய்தார். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் கண்குளிர வணங்கினார். பின்னர் ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசனம் செய்யச் சென்றார். அப்போது பகவான் ரமணர் விரூபாக்ஷி குகையில் தங்கி இருந்தார். அவர் குகையைவிட்டு வெளியே வந்தபோது, திருப்புகழ் சுவாமிகள் அங்கே சென்றார். பகவான் ரமணர், கௌபீனதாரியாய், தண்டமேந்தியவராய், சாட்சாத் பழனி முருகனாகவே திருப்புகழ் சுவாமிகளுக்குக் காட்சி அளித்தார். மெய் சிலிர்த்துப் போனார் சுவாமிகள். அப்படியே ரமணரது பாதம் பணிந்து வீழ்ந்தார். பகவானின் விரூபாஷி குகை அருகிலேயே தங்கிப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.

ரமணரும் அவரைத் 'திருப்புகழ் முருகன்' என்று அன்போடு அழைப்பார். தினந்தோறும் திருப்புகழ் பாடச் சொல்லிக் கேட்பார். ரமணரிடத்தில் எப்படியாவது குரு உபதேசம் பெற வேண்டும் என்பதுதான் திருப்புகழ் சுவாமிகளின் எண்ணம். அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஸ்ரீ பொங்கியம்மன்



கீழே போ...
ஒருநாள்... பணிவிடை செய்து கொண்டிருந்த வள்ளிமலை சுவாமிகளைப் பார்த்து ரமணர், 'கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே! உடனே கீழே போ' எனக் கட்டளையிட்டார். திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னைக் கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ' என நினைத்தவாறே மலையிலிருந்து வேகமாகக் கீழே இறங்கினார்.

குரு உபதேசம்
அவர் கீழே போகும் வழியில் சேறும் சகதியும் நிறைந்த ஒரு குட்டை இருந்தது. அதில் ஒரு எருமையைக் கட்டிக்கொண்டு, அதனோடு ஏதோ பேசிக்கொண்டு இருந்தார் சேஷாத்ரி சுவாமிகள். அவர் உடல் முழுவதும் சேறு. திருப்புகழ் சுவாமிகள் வருவதைப் பார்த்த சேஷாத்ரி சுவாமிகள், உடனே குட்டையை விட்டு எழுந்து ஓடோடி வந்து திருப்புகழ் சுவாமிகளைக் கட்டிக்கொண்டார். சேஷாத்ரி சுவாமிகள் மீதிருந்த சேறெல்லாம் திருப்புகழ் சுவாமிகள் மீதும் ஒட்டிக்கொண்டது. சுவாமிகளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சேறு நாறுவதற்கு பதிலாக ஒரே ஜவ்வாது, சந்தன வாசம் வீசியது. திருப்புகழ் சுவாமிகளின் மீதும் அது வீசியது. திகைத்துப் போன திருப்புகழ் சுவாமிகளை, அருகிலிருந்த பாறையில் தன்னருகில் அமரவைத்து கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

ஆத்மாத்வம் கிரிஜாமதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோப போகரசநா நித்ரா ஸமாதிஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
யத்யத்கர்ம கரோமி தத்தத் அகிலம் சம்போ தவாராதநம் ||


எனத் தொடங்கும் சிவ மானச பூஜா ஸ்தோத்திரத்திலிருந்து நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி, 'ஈசனே நீ எனது ஆன்மா; தேவியே நீ எனது புத்தி! என் ப்ராணன்கள் சிவ கணங்கள்; என் உடலே உன் ஆலயம்; நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜை!' என்று அதன் பொருளையும் விளக்கினார். பின்னர் திருப்புகழ் சுவாமிகளிடம், "இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் இருந்தால் சொல்லு!" என்றார்.

அதற்கு திருப்புகழ் சுவாமிகள்,
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூல அனல்மூள
அசைவுறாது பேராத விதமுமேவி யோவாது
அரிச தான சோபான மதனாலே

எமனைமோதி யாகாச கமன மாமனோ பாவ
மெளிது சால மேலாக வுரையாடும்
எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவனாதீத மருள் வாயே


எனத் தொடங்கும் 1048வது திருப்புகழைப் பாடி, பொருளை விளக்கினார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், "திருப்புகழ்தான் உனக்கு இனித் தாரக மந்திரம். உனது சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். நீ இனி வேறு எந்த மந்திர நூலும் படிக்க வேண்டாம். ஜப, தபங்கள் செய்ய வேண்டாம். உனக்குத் திருப்புகழே போதும். இனி நீ எங்கு சென்றாலும் திருப்புகழ் ஒலிக்க வேண்டும். நீ வள்ளிமலைக்குப் போய்த் தவம் செய்து கொண்டிரு. பின்னர் நானும் அங்கே வருகிறேன்" என்று கூறி ஆசிர்வதித்தார்.

ரமணரிடம் குரு உபதேசம் பெற நினைத்தார் சுவாமிகள், ஆனால் சேஷாத்ரி சுவாமிகளே வலிய வந்து அவருக்கு உபதேசம் செய்தார். உருவங்கள் வேறுபட்டாலும் ரமணர் வேறு, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வேறு அல்ல என்பதை உணர்ந்து கொண்ட திருப்புகழ் சுவாமிகள், குருவின் கட்டளைப்படியே வள்ளிமலைக்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்.

வள்ளிமலையில் தவ வாழ்க்கை
வள்ளிமலைக் குகையில் நீண்ட காலம் தவம் மேற்கொண்டார் சுவாமிகள். சேஷாத்ரி சுவாமிகளின் அருளும் ஆசியும் கிடைக்கப் பெற்றார். முருகப் பெருமான், வள்ளியம்மையின் அருளும் அவருக்குக் கிடைத்தது. கோயிலை ஒழுங்குபடுத்தினார். மலைப் பாதையைச் செப்பனிட்டார். பொங்கியம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். பல்வேறு அற்புதங்களைச் செய்தார். பல ஆன்மீக, சமுதாயப் பணிகளை மேற்கொண்டார். ஆன்மீக அன்பர்களால் 'வள்ளிமலை சுவாமிகள்' என்று போற்றப்பட்டார்.

திருத்தணித் திருப்படித் திருவிழா
அது பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலம். ஒவ்வொரு புதுவருடப் பிறப்பன்றும் அதிகாரிகளைச் சந்திப்பதும், அவர்களை வணங்கி அன்பளிப்பு வழங்குவதும் மக்களிடையே வழக்கமாக இருந்தது. இதைக் கண்டு சுவாமிகள் மனம் வெதும்பினார். ஏன் புத்தாண்டு அன்று சாதாரண மனிதர்களைப் போய் வணங்கவேண்டும், தலைவர்களுக்கெல்லாம் தலைவனான இறைவனை அல்லவா வணங்கித் தொழவேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவர் ஆரம்பித்து வைத்ததுதான் "திருத்தணித் திருப்படி விழா"

டிசம்பர் 31 அன்று மாலை, பக்தர்கள் திருத்தணி மலையில் ஏறத் தொடங்குவர். சுவாமிகளும் உடன் செல்வார். ஒவ்வொரு படியில் ஏறும்போதும் ஒரு திருப்புகழ் பாடலைப் பாடுவார்கள். அந்தப் படிக்குத் தீபாராதனை காட்டிவிட்டு, அடுத்த படிக்குச் செல்வார்கள். அங்கும் ஒரு திருப்புகழ் பாடல். இப்படிப் படிதோறும் தொடர்ந்து பாடி, வணங்கி இறுதியில் ஆலயத்தை அடைவார்கள். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் முருகனை வள்ளி தேவசேனையுடன் கண்டு வணங்குவார்கள். இதுவே திருத்தணித் திருப்படித் திருப்புகழ் திருவிழாவாக இன்றளவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சுவாமிகள் செய்த அற்புதங்கள்
வாழ்நாள் முழுவதும் திருப்புகழைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள். தன்னை நாடி வரும் அடியவர்களுக்குத் திருநீறு அளித்தும், திருப்புகழ் ஓதியும் நோய்களைக் குணமாக்கினார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காட்சி தருவது, அன்பர்களின் இருப்பிடத்திற்குச் சென்று நோய்களை நீக்குவது, ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என பல்வேறு அற்புதங்களைச் சுவாமிகள் நிகழ்த்தினார்.

மகாசமாதி
இவ்வாறு திருப்புகழையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த சுவாமிகள், 1950 நவம்பர் 21ம் தேதி சென்னையில் மகாசமாதி அடைந்தார். சுவாமிகளின் உடல் வள்ளிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர் தவம் செய்த அதே குகையில் சமாதி செய்விக்கப்பட்டது. வள்ளிமலை சமாதி ஆலயத்திலிருந்து இன்றளவும் மகான் சூட்சும ரீதியில் செயல்பட்டு பக்தர்களுக்கு அருளி வருகிறார்.

மகான்களின் கருணை எண்ணவும் இனிதே!

பா.சு.ரமணன்

© TamilOnline.com